/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' ரெட் அலெர்ட் ' டால் அலறும் வருவாய் துறையினர்!
/
' ரெட் அலெர்ட் ' டால் அலறும் வருவாய் துறையினர்!
PUBLISHED ON : ஜூன் 19, 2025 12:00 AM

''சீனியர் அமைச்சரை புறக்கணிச்சிட்டாரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மாவட்டம், லால்குடி தி.மு.க. - எம்.எல்.ஏ.,வா நாலாவது முறையா இருக்கிறவர், சவுந்திரபாண்டியன்... அமைச்சர் நேருவின் தீவிர விசுவாசியா தான் இருந்தாரு வே...
''நாலாவது முறையா ஜெயிச்சப்பவே, தனக்கு நேரு அமைச்சர் பதவி வாங்கி தருவார்னு நினைச்சாரு... ஆனா, மாவட்டத்துல நேரு, மகேஷ்னு ரெண்டு பேருக்கு பதவி குடுத்துட்டதால, இவருக்கு கிடைக்கல வே...
''இந்த விரக்தியில, நேருவிடம் இருந்து ஒதுங்கிட்டாரு... சமீபத்துல, இவரது வீட்டுல திருமண விழா நடந்துச்சு வே...
''இதுக்கு முதல்வரை அழைச்சும், நேரு எதிர்ப்பால முதல்வர் வரல... இதனால கடுப்பான சவுந்தரபாண்டியன், நேருவுக்கும், அவரது மகனும் பெரம்பலுார் எம்.பி.,யுமான அருண் நேருவுக்கும் அழைப்பிதழே வைக்கல...
''அதேநேரம் அமைச்சர்கள் மகேஷ், சிவசங்கர் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு எல்லாம் அழைப்பு குடுத்து, திருமண விழாவை, 'ஜாம் ஜாம்'னு நடத்தி முடிச்சிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''பெண் அதிகாரிகளை மிரட்டறார் ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''டாஸ்மாக் நிர்வாகத்தின் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்துல, 125 மதுபானக் கடைகள் இருக்கு... இந்த கடைகளுக்கு காக்களூரில் உள்ள கிடங்குல இருந்து மதுபாட்டில்களை அனுப்புவா ஓய்...
''இந்த கிடங்குக்கு மாவட்ட அதிகாரிதான் பொறுப்பு... எட்டு மாசத்துக்கு முன்னாடி, இங்க ஆய்வு நடத்திய முதுநிலை மண்டல மேலாளர், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் கம்மியா இருக்கறதை கண்டுபிடிச்சு, 'இதை சரி பண்ணுங்கோ'ன்னு மாவட்ட அதிகாரிக்கு உத்தரவு போட்டார் ஓய்...
''அவரோ, கிடங்கு பக்கமே போகாம அலட்சியமா இருந்தார்... சமீபத்துல நடத்திய ஆய்வுல, காக்களூர் கிடங்குல, 67 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் மாயமாகி இருந்ததை பார்த்து, மண்டல மேலாளர், 'டென்ஷன்' ஆகிட்டார் ஓய்...
''இதனால, '67 லட்சம் ரூபாயை கட்டலன்னா உங்க மீது நடவடிக்கை பாயும்'னு மாவட்ட அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கார்... மாவட்ட அதிகாரி யோ, 'இந்த பணத்தை நீங்கதான் கட்டணும்'னு கிடங்கு பணியில் இருந்த ரெண்டு பெண் அதிகாரிகளை மிரட்டிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''முத்துராமன், தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''ரெட் அலெர்ட் விடுத்தாலே பயப்படுறாங்க...'' என்றார்.
''மழை விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... தென்மேற்கு பருவமழை சீசன்ல, நீலகிரி மாவட்டத் துல அதிக மழை பெய்யுறதால, அடிக்கடி, 'ரெட் அலெர்ட்' குடுக்கிறாங்க... முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினரையும் அனுப்பிடுறாங்க...
''இப்படி வர்ற மீட்பு படையினருக்கு தங்குறதுக்கு சரியான இடம் ஒதுக்காததால, வருவாய் துறைக்கு சொந்தமான கட்டடங்கள்ல, கடும் குளிர்ல வெறும் தரையில படுத்து உறங்குறாங்க... அதுவும் இல்லாம, இவங்களுக்கு உணவு வழங்க தனியா நிதி ஒதுக்கீடும் செய்ய மாட்டேங்கிறாங்க...
''இதனால, வருவாய் துறையினர், தங்களது கைக்காசை செலவு பண்ணி, இவங்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கு... இதனால ரெட் அலெர்ட் வந்தாலே, வருவாய் துறையினர் அலறுறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.