/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பேராசிரியைக்காக வளைக்கப்படும் விதிகள்!
/
பேராசிரியைக்காக வளைக்கப்படும் விதிகள்!
PUBLISHED ON : பிப் 18, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''நேர்காணல் முடிஞ்சும், காலியிடங்களை நிரப்பல ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''கரூர் மற்றும் திருப்பூர் அறநிலைய துறை இணை மற்றும் உதவி கமிஷனர் அலுவலகங்கள்ல, உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் உள்ளிட்ட, 17 காலியிடங்களை நிரப்ப, 2022ல் நேர்காணல் நடந்துது... அந்தந்த மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகிகள், தங்களுக்கு வேண்டியவாளுக்கு பரிந்துரை பண்ணா ஓய்...
''இதனால, துறையின் அமைச்சர் சொல்றதை கேக்கறதா அல்லது உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிபாரிசுகளை ஏத்துக்கறதான்னு தெரியாம, அறநிலைய துறை அதிகாரிகள் குழம்பி போய் பணி நியமனங்களை கிடப்புல போட்டுட்டா... நேர்காணல்ல கலந்துண்டவா பாவம், ரெண்டு வருஷமா, இலவு காத்த கிளி போல காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பழனிசாமி வந்ததும் தான், இவரும் வந்தாரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், அவிநாசி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர், முன்னாள் சபாநாயகர் தனபால்... சேலத்தைச் சேர்ந்த இவர், தொகுதியில் நடக்கிற எந்த அரசு விழாவுலயும் கலந்துக்க மாட்டாரு வே...
''இவரது எம்.எல்.ஏ., அலுவலகத்தில், மாதந்தோறும் மக்களிடம் மனுக்கள் வாங்கி குறைகள் தீர்க்கப்படும்னு அறிவிச்சு, ரெண்டு வருஷம் ஓடிட்டு... ஆபீஸ் பக்கமே தனபால் எட்டி பார்க்கல வே...
''இந்த சூழல்ல, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கோவை, அன்னுார்ல விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினாங்கல்லா... அதுல, பழனிசாமி பக்கத்துல தனபால் உட்கார்ந்திருந்தாரு... இதை பார்த்த கட்சியினர், 'பழனிசாமி வரலன்னா, தனபாலும் வந்திருக்க மாட்டார்'னு புலம்பிட்டே போனாவ வே...'' என்றார்,அண்ணாச்சி.
''விதிகளையே மாத்துறாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி தர்றதுக்காக, சென்னையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரி இருக்கு... இந்த கல்லுாரியில், உயர் அதிகாரிகளை, 'டெபுடேஷன்'ல பேராசிரியர்களா நியமிப்பாங்க பா...
''பல வருஷத்துக்கு முன்னாடி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில நிர்வாக பிரச்னை வந்து, பலரை வேலையை விட்டு அனுப்பினாங்களே... அங்க இருந்த ஒரு பேராசிரியை, தன் செல்வாக்கை பயன்படுத்தி, இந்த கல்லுாரிக்கு வந்தாங்க பா...
''ஆனா, பயிற்சி அதிகாரிகளுக்கு பாடம் எடுக்க தெரியாததால, அவங்களை திருப்பி அனுப்பிட்டாங்க... அப்புறமா, மத்திய அரசு திட்டத்துல மூணு வருஷம் வேலை பார்த்தாங்க பா...
''அதை முடிச்சுட்டு, தமிழக அரசு புதுசா ஆரம்பிச்ச, 'உண்மை கண்டறியும் குழு'வுக்கு வந்தாங்க... அங்கயும் லட்சக்கணக்குல சம்பளம் வாங்குனாங்க... இப்ப, அவங்களை அண்ணாமலை பல்கலைக்கே போகச் சொல்றாங்க பா...
''ஆனா, மறுபடியும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லுாரிக்கு, 4 லட்சம் ரூபாய் சம்பளத்துல வேலைக்கு வர முயற்சி பண்றாங்க... அவங்களை மறுபடியும் உள்ள கொண்டு வர்றதுக்காகவே, மற்றவங்க யாரும் அந்த வேலைக்கு அப்ளை பண்ண முடியாதபடி, விதிகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டிருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

