/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கான்ட்ராக்டரை காபந்து பண்ணும் சீனியர் அமைச்சர்!
/
கான்ட்ராக்டரை காபந்து பண்ணும் சீனியர் அமைச்சர்!
PUBLISHED ON : டிச 20, 2024 12:00 AM

கருப்பட்டி காபியை பருகியபடியே, ''இளம்பெண்ணுக்கு, 'அல்வா' குடுத்துட்டாரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமிஅண்ணாச்சி.
''யாருப்பா அது...'' எனகேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பா.ஜ., பிரமுகர்ஒருத்தர் இருக்காரு... இவருக்கு திருமணம் ஆகிகுழந்தைகள் இல்ல... அதே பகுதியைச் சேர்ந்த,கணவரை பிரிஞ்சு வாழ்ந்த 28 வயது இளம்பெண்ணிடம், 'திருமணம் பண்ணிக்கிறேன்'னு சொல்லி, நெருங்கி பழகியிருக்காருவே...
''இதுல அந்த பெண் கர்ப்பமாகி, சமீபத்துல பெண் குழந்தையும் பிறந்துட்டு... குழந்தை பிறந்த ஆறாவது நாளே,பா.ஜ., பிரமுகரின் குடும்பத்தினர் வந்து, அந்தகுழந்தையை பிடுங்கிட்டுபோயிட்டாவ வே...
''பா.ஜ., பிரமுகரின், 'கவனிப்பு' காரணமா, இளம்பெண்ணின் புகாரை உள்ளூர் போலீசாரும் கண்டுக்கல...நம்பியவர் ஏமாத்திட்டதாலும், குழந்தையை பார்க்க முடியாமலும் தவிக்கிற அந்த பெண், நியாயம் கேட்டு எஸ்.பி.,யிடம் புகார் குடுத்திருக்காங்க வே...'' என்றார், அண்ணாச்சி.
''பாலசுப்பிரமணியம் இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம்தந்த அந்தோணிசாமியே,''வருவாய் துறை இடங்களை வளைச்சு போட்டுக்கிறாங்க...'' என்றார்.
''யார் ஓய் அது...'' எனகேட்டார், குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், குன்னுார்ல இருக்கிற ஆளுங்கட்சியினர், வருவாய் துறை இடங்களை குத்தகை அடிப்படையில், தங்களதுகட்டுப்பாட்டுல எடுத்துக்கிறது அதிகமா நடக்குது...இதுல, மாவட்ட தி.மு.க.,புள்ளியின் குடும்பத்தினர்ஆதிக்கம் தான் அதிகமா இருக்குதுங்க...
''பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்களை,குறைஞ்ச விலைக்கு குத்தகைக்கு எடுத்து, அதை வேற நபர்களுக்குஅதிக விலைக்கு உள்வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாங்க... இது சம்பந்தமா, ஆளுங்கட்சிமேலிடத்துக்கு, தி.மு.க.,வினரே நிறைய புகார்கள்அனுப்பியிருக்காங்க...
''அதுல, 'குன்னுார் முழுக்கவே, மாவட்ட புள்ளி குடும்பத்தினர் ராஜ்யம் தான் நடக்குது...அவங்க மேல நடவடிக்கைஎடுக்காம விட்டா, அடுத்தசட்டசபை தேர்தல்ல குன்னுார் தொகுதியில் நம்ம கட்சி கரையேறுவது கஷ்டம் தான்'னு சொல்லியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கான்ட்ராக்டர்கள் எல்லாம் விரக்தியில இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சிக்கு பக்கத்துலஇருக்கற மாவட்டத்துல,புதிய கட்டுமானபணிக்கான, 'டெண்டர்'களை எல்லாம், 'பேக்கேஜ்' முறையில் ஒரே கான்ட்ராக்டருக்கு குடுத்துடறா... இதனால,மத்த கான்ட்ராக்டர்களுக்குபணிகள் கிடைக்கறது இல்ல ஓய்...
''இத்தனைக்கும், அந்தகான்ட்ராக்டர் தான், அரசு டெண்டர்களை எதிர்த்து அடிக்கடி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் போடறார்...இதனாலயே, மாவட்டத்துல பல பணிகள் கிடப்புல கிடக்கறது ஓய்...
''ஆனாலும், மாவட்டத்தைச் சேர்ந்த சீனியர்அமைச்சர், அந்த கான்ட்ராக்டருக்கே டெண்டர்களை வழங்கறார்... அரசின் திட்ட பணிகளுக்கு தடையா இருக்கற கான்ட்ராக்டருக்கு அமைச்சரே ஆதரவு அளிக்கறதால, ஆளுங்கட்சியினரும் அமைச்சர் மேலஅதிருப்தியில இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''சொல்லுங்க ரகுபதி... புதுக்கோட்டை போயிருந்த முத்துகுமார் வந்துட்டாராவே...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.