/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆரம்பிக்கவும், முடிக்கவும் தனித்தனியாக வசூல்!
/
ஆரம்பிக்கவும், முடிக்கவும் தனித்தனியாக வசூல்!
PUBLISHED ON : பிப் 05, 2025 12:00 AM

நாளிதழை மடித்தபடியே, ''அசம்பாவிதம் நடந்தா பார்த்துக்கலாம்னு அசால்டா சொல்லுதாவ வே...'' என்றார்,பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை, திருப்பூர் மாவட்டங்களின் விவசாயத்துக்கு பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டம் இருக்குல்லா... இந்த திட்டத்தின் உயிர் நாடியா, காண்டூர் கால்வாய் ஓடுது வே...
''இப்ப, 'டிரக் தமிழ்நாடு' என்ற திட்டத்தில், காண்டூர் கால்வாய் வழியா சுற்றுலா பயணியரை கூட்டிட்டு போறாவ... ஆழியாறு பகுதியில், 8 கி.மீ., துாரம், மூன்று மணி நேரம் பயணிக்க ஒரு நபருக்கு, 1,700 ரூபாய் கட்டணம் வசூலிக்காவ வே...
''இணையதளம் மூலமா புக்கிங் பண்ணி, சுற்றுலா பயணியரை கூட்டிட்டு போறாவ... இந்த சுற்றுலா திட்டத்தால, காண்டூர் கால்வாயின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுது வே...
''இது சம்பந்தமா, பி.ஏ.பி., அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் கொடுத்தா, 'இது, வனத்துறைக்கு சொந்தமான இடம்... நாங்க எதுவும் பண்ண முடியாது'ன்னு கையை விரிக்காவ... 'ஏதாவது அசம்பாவிதம் நடந்துட்டா என்ன பண்றது'ன்னு விவசாயிகள் விடாப்பிடியா கேட்க, 'அப்படி நடந்தா பார்த்துக்கலாம்'னு அதிகாரிகள் அசால்டா பதில் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கோவில் பக்கத்துலயே மட்டன், சிக்கன்னு வெளுத்து கட்டறா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே கஞ்சமலையில், பிரசித்தி பெற்ற சித்தர் கோவில் இருக்கு... பக்கத்துலயே காளியம்மன், முருகன் கோவில்களும் இருக்கு ஓய்...
''இந்த கோவில்கள்லஆடு, கோழி பலி கொடுக்க மாட்டா... ஆனா, கோவிலை ஒட்டி 200 மீட்டர்ல இருக்கற வனத்துறை அலுவலகத்துக்கு வர்ற அதிகாரிகளுக்கு அடிக்கடி மீன், மட்டன், சிக்கன்னு அசைவ விருந்து படைக்கறா ஓய்...
''சாப்பிட்ட மிச்சம் மீதி மற்றும் எலும்பு துண்டுகளை பக்கத்துலயே வீசிடறா... 'இதனால, கோவிலின் புனிதம் கெட்டு போறது'ன்னு கலெக்டர் துவங்கி முதல்வரின் தனிப்பிரிவு வரைக்கும் பக்தர்கள் புகார் குடுத்தும், பலன் இல்ல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஆரம்பிக்கவும், முடிக்கவும் தனித்தனியா வசூலிக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுல, அடுக்குமாடி திட்டங்கள், மனை பிரிவுக்கு அனுமதி தர்ற பிரிவுகள்ல பணமழை கொட்டும்... இதனால, இந்த பிரிவுகள்ல வேலை பார்க்க அதிகாரிகள் மத்தியில போட்டியே நடக்குமுங்க...
''அதே நேரம், அனுமதி வாங்கியபடி கட்டடங்களை கட்டி இருக்காங்களான்னு பார்த்து, பணி நிறைவு சான்று வழங்க, தனிப்பிரிவு இருக்கு... இந்த பிரிவு அதிகாரிகள், ஒவ்வொரு பணி நிறைவு சான்றுக்கும், 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்துறாங்க...
''இதனால, 'ஏற்கனவே அப்ரூவல் வாங்குறதுக்கு கமிஷன் குடுக்கிறோம்... பணி நிறைவு சான்றுக்கும் தனியா வசூல் செஞ்சா என்ன அர்த்தம்'னு, பில்டர்கள் புலம்புறாங்க... 'லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு, சி.எம்.டி.ஏ., ஆபீஸ்ல நடக்கிற அக்கிரமங்கள் எல்லாம் தெரியாதா'ன்னும் கேட்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

