PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா அறிக்கை: தன்
வாழ்க்கையில், வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா,முத்து விழாவை அடுத்து,
நுாற்றாண்டை கொண்டாடப் போகும் வைர விழா என, வைகோ திராவிட பேரியக்கத்தில்
முழுமை பெற்றவர். என்னிடம் அவருக்கு கொடுக்க ஒன்றும் இல்லை; ஆனால், என்
வாழ்க்கையின் வசந்த காலமான, 30 ஆண்டு களை கொடுத்துள்ளேன். எஞ்சிய என்
வாழ்நாளையும், அவருக்கே கொடுக்க, அவரது பிறந்த நாளில் உறுதி ஏற்கிறேன்.
கருணாநிதி குடும்பத்துக்கு உள்ள விசுவாசிகளுக்கே, வைகோவின் இந்த விசுவாசி, 'டப்' கொடுப்பார் போலிருக்கே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன்திருப்பதி அறிக்கை: 'நான்கு ஆண்டுகளுக்கு முன், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களேதுணை முதல்வராகும்போது, 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவரை துணை முதல்வராக்க நாங்கள் விரும்புதில் தவறில்லையே' என, விடுதலை சிறுத்தைகள்கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். தைரியம் இருந்தால்திருமாவளவன் இதை ஏற்றுக் கொள்ளட்டும்.
சரியா போச்சு... இந்த வசனத்தை எழுதி கொடுத்து சொல்லச் சொன்னதே அவரா இருக்கும்னு தானே பேச்சு!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும்,உரிமைக்காக மத்திய அரசுடன் போராட வேண்டியிருக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். இரண்டு தேசிய கட்சிகளின் ஆட்சிகளிலும், மத்திய அரசில் பங்கு வகித்தபோது, இதே உரிமைக்காக போராடி, தேவையான சட்ட திருத்தங்களையும், திட்டங்களில் மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கலாமே.
இப்படி புலம்பறதை தவிர்க்க தான், 'பா.ஜ.,வுக்கு ஒத்து ஊதி நாங்க ஆட்சி நடத்தினோம்'னு சொல்லுங்க முதல்வருக்கு!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தி.மு.க., கூட்டணியை விட்டு விலகிய த.மா.கா.,விலிருந்து அன்று ப.சிதம்பரத்தின் ஜனநாயக பேரவை பிறந்தது போலவே, பார்வர்ட் பிளாக் முதல் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரை, பல கட்சிகளையும் தி.மு.க., பதம் பார்த்தது. அந்த வரிசையில் வி.சி.க.,வுக்கும் ஓரிடத்தை தர தயாராகி விட்டதாக தெரிகிறது.
கூட்டணியில் இருந்து எதிர் முகாமுக்கு தாவும் எண்ணம் திருமாவுக்கு வந்தால், இவர் சொல்ற அந்த ஓரிடம் உண்மையாகி விடும்!