/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வசூலுக்கு, 'புரோக்கர்'களை நியமித்த தாலுகா அதிகாரி!
/
வசூலுக்கு, 'புரோக்கர்'களை நியமித்த தாலுகா அதிகாரி!
வசூலுக்கு, 'புரோக்கர்'களை நியமித்த தாலுகா அதிகாரி!
வசூலுக்கு, 'புரோக்கர்'களை நியமித்த தாலுகா அதிகாரி!
PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “சாலையோர ஆக்கிரமிப்புகளை கண்டுக்க மாட்டேங்கிறாங்க பா...” என்று பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சென்னை, ஆவடி மாநகராட்சி பகுதியில் சாலையோரங்கள்லயும், மழைநீர் வடிகால்கள்லயும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிட்டே போகுது... போன மாசம், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் போனப்ப, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிச்சாங்க பா...
“அதுலயும், ஒரு பெண் வியாபாரி தீக்குளிக்கவே போயிட்டதால, அதிகாரிகள் திரும்பி போயிட்டாங்க... இதனால, 3 கோடி ரூபாய் செலவுல அமைக்கப்பட்ட சாலையோர நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியல பா...
“குறிப்பா, ஆவடி கவரைப்பாளையம் முதல், பட்டாபிராம் வரை சாலையோர கடைகளால, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுது... டி.ஆர்.ஆர்., நகர் பக்கத்துல சி.டி.எச்., சாலையில், தனியார் நிறுவனம் ஒண்ணு, 10க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி, திறந்தவெளி குடோன் போல பயன்படுத்திட்டு இருக்குது பா...
“அதே மாதிரி, ஹார்டுவேர்ஸ் கடை ஒண்ணும், சாலையோரமா தங்களது பொருட்களை அடுக்கி வச்சு வியாபாரம் பண்ணிட்டு இருக்கு... இது சம்பந்தமா பல புகார்கள் போயும், மாநகராட்சி அதிகாரிகளோ, நெடுஞ்சாலை துறை அதிகாரி களோ கண்டுக்காம இருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“நகராட்சிக்கும், ஒன்றியத்துக்கும் பனிப்போர் நடக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.
“விளக்கமா சொல்லுங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றிய அலுவலகம் கட்டி, 60 வருஷத்துக்கும் மேலாகிட்டதால, புதிய கட்டடம் கட்டறதுக்கு அரசு, 'பர்மிஷன்' குடுத்திருக்கு... புது கட்ட டம் கட்டற வரைக்கும், ஒன்றிய அலுவலகம் செயல்பட மாற்று இடம் தேவைப்படறது ஓய்...
“உடுமலை நகராட்சி அலுவலகத்தின் பழைய கட்டடம் சும்மா தான் இருக்கு... இதை பயன்படுத்திக்கலாமான்னு நகராட்சியிடம், ஒன்றிய நிர்வாகம் கேட்டிருக்கு ஓய்...
“ஆனா, நகராட்சி நிர்வாகம் அனுமதி தராம இழுத்தடிக்கறது... இதனால, ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பழைய கட்டடத்துல பயந்துண்டே வேலை பார்க்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“புரோக்கர்களை நியமிச்சு, வசூல் பண்ணுதாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகா அலுவலகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... இங்க வந்து, 10 மாசமாச்சு... 'சர்வே டிபார்ட்மென்ட்'ல ஒருத்தர் உட்பட, ரெண்டு புரோக்கர்களை நியமிச்சிருக்காரு வே...
“பட்டா மாறுதல், தனி பட்டான்னு எல்லாத்துக்கும், தனித்தனி, 'ரேட்' நிர்ணயம் பண்ணி, வசூல் பண்ணுதாரு... இந்த புரோக்கர்கள், தாலுகா அதிகாரிக்கு கீழே இருக்கிற அதிகாரிகளையும், ஊழியர்களையும் அடாவடியா மிரட்டுதாங்க வே...
“அதிகாரி பத்தி நிறைய புகார்கள், சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு போயிருக்கு... இதை கேள்விப்பட்ட அதிகாரி, சப் - கலெக்டர் அலுவலகத்துல இருந்த பலருக்கும் தீபாவளிக்கு ஸ்வீட், பட்டாசு பாக்ஸ் உட்பட, 'வெயிட்'டான பரிசுகளை வாரி வழங்கி, காக்கா பிடிச்சுட்டாரு வே...
“அதிகாரியின் ஆட்டம் அதிகமா இருக்கிறதால, மாவட்ட அமைச்சர் காதுலயும் ஆளுங்கட்சியினர் விஷயத்தை போட்டு வச்சிருக்காவ... அவருக்கு கடிவாளம் வரும்னு காத்துட்டு இருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.