/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உட்கட்சி பூசலை தீர்க்க சென்ற இரண்டு அமைச்சர்கள்!
/
உட்கட்சி பூசலை தீர்க்க சென்ற இரண்டு அமைச்சர்கள்!
PUBLISHED ON : ஆக 20, 2024 12:00 AM

''வாரிசால வருத்தத்துல இருக்காரு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''நம்மூர் அரசியல்ல நிறைய வாரிசுகள் இருக்காளே...'' என சந்தேகம் கேட்டார், குப்பண்ணா.
''துாத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலரா, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் இருக்காரே... இவரது ஒரே மகன் ராஜா, மாநகராட்சி கவுன்சிலராகவும், கட்சியில் பகுதி செயலராகவும் இருக்காரு பா...
''கடந்த ரெண்டு வருஷத்துல ஒரு முறை மட்டும் தான் மாநகராட்சி கூட்டத்துல கலந்துக்கிட்டாரு...
சென்னையிலயே நிரந்தரமா செட்டில் ஆகிட்டாரு பா...
''மகனது அரசியல் வளர்ச்சிக்காக, சண்முகநாதன் பல கோடிகளை செலவு பண்ணியிருக்காரு... அவருக்கு திருமண ஏற்பாடு செய்தப்ப, அவர் வேறு சமூக பெண்ணை கட்டிக்கிட்டதால, அவரிடம் யாரும் பேசுறதும் இல்ல பா...
''சொத்துக்கள் மகன் பெயர்ல இருக்கிறதால, சண்முகநாதன் பொருளாதார நெருக்கடியில தவிச்சிட்டு இருக்காரு... சரியா கட்சி வேலை செய்யாத நிர்வாகிகளை கண்டிச்சா, 'உங்க மகனையே தட்டி கேட்க முடியாம, எங்களை மட்டும் கேட்குறீங்ளே'ன்னு எதிர் கேள்விகள் வர்றதால, அரசியலை விட்டே ஒதுங்கிடலாமான்னும் யோசனை பண்ணிட்டு இருக்காரு பா...''
என்றார், அன்வர்பாய்.
''குப்பை 'டெண்டர்' இன்னும் முடியாம இழுத்துட்டே போகுதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை, வெள்ளலுார் கிடங்குல கொட்டுறாங்க... இங்க தேங்கியுள்ள குப்பையை, விஞ்ஞான ரீதியா அழிக்க, 'பயோமைனிங் ஸ்கீம்' செயல்படுதுங்க...
''முதல் ஸ்கீம் முடிஞ்சு, ரெண்டாவது ஸ்கீமுக்கு சமீபத்துல 54.84 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டாங்க... ஒரு நிறுவனம், 10 சதவீதம் கமிஷனை அட்வான்சா குடுத்துட்டு, அதை ஈடுகட்டுறதுக்காக 7 சதவீதம் அதிகமா விலை வச்சு டெண்டர் போட்டுச்சுங்க...
''ஆனா, வெளிமாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம், 6 சதவீதம் குறைவா டெண்டர் போட்டிருக்கு... இதனால, டெண்டரை ரத்து பண்ணிட்டு, புதுசா விடுறதுக்கு ஏற்பாடுகள் நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''உட்கட்சி பூசலை தீர்க்க ரெண்டு அமைச்சர்களை அனுப்பியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கூட்டம் போன மாசம் 31ம் தேதி நடந்துது... இதுல, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ரெண்டு பிரிவா பிரிஞ்சு, போட்டி கூட்டம்
நடத்தினா ஓய்...
''மறுநாள் ஓசூர் வந்த, மாவட்ட பொறுப்பு அமைச்சரான சக்கரபாணி, இதை கண்டுக்கல... ஆனாலும், தலைமைக்கு புகார் போனதால, சமீபத்துல சக்கரபாணி ஓசூர்
வந்தார் ஓய்...
''வளர்ச்சிப் பணி ஆலோசனை கூட்டம் என்ற பெயர்ல, மேயர், கவுன்சிலர்கள் பிரச்னைக்கு, தனியார் ஹோட்டல்ல ரெண்டு மணி நேரத்துக்கும் மேலா சமாதான பேச்சு நடத்தினார்... மறுநாள், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனும் ஆய்வு என்ற பெயர்ல வந்து, தி.மு.க., நிர்வாகிகளிடம் சமரச பேச்சு நடத்திட்டு போயிருக்கார்... 'இனியாவது, மாநகராட்சியில உட்கட்சி பூசல் குறையுமா'ன்னு கட்சி நிர்வாகிகள் எதிர்பார்க்கறா ஓய்...'' என
முடித்தார், குப்பண்ணா. பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.