/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சத்து டானிக் விற்பனையில் சம்பாதிக்கும் போலீசார்!
/
சத்து டானிக் விற்பனையில் சம்பாதிக்கும் போலீசார்!
PUBLISHED ON : செப் 25, 2024 12:00 AM

பட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே,''விளம்பரபலகைகளை அகற்ற முடியலைங்க...''என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவையில், விளம்பர பலகைகள் வைக்கிறதுக்கு மாநகராட்சி நிர்வாகமும்,மாவட்ட நிர்வாகமும் அனுமதி குடுக்கிறது இல்லைங்க... ஆனாலும்,மாவட்ட நிர்வாகத்திடம் தடையில்லா சான்று வாங்காம, ரயில்வேக்கு சொந்தமான இடத்துல விளம்பர பலகைகள் வச்சிருக்காங்க... இதை, மாநகராட்சி அதிகாரிகள் ராத்திரியோட ராத்திரியா அகற்றிட்டாங்க...
''விளம்பர ஏஜன்சி நிறுவனம் சார்புல, ஐகோர்ட்ல கேஸ் போட்டு, 'ஸ்டே' வாங்கிட்டாங்க... அந்த வழக்கு விசாரணைக்கு வந்தா, ஏஜன்சிக்கு எதிரா வாதாடுறதுக்கு மாநகராட்சி அதிகாரிகள்,
பக்காவான ஆவணங்களோட தயாரா இருக்காங்க...
''ஆனா, வழக்கு விசாரணைக்கு வராமலே இருக்கிறதால, ரயில்வேக்கு சொந்தமானஇடங்கள்ல இஷ்டத்துக்குபெரிய பெரிய விளம்பரபலகைகளை வச்சிருக்காங்க... இதனால, வாகன ஓட்டிகள் கவனம் திசை திரும்புறதால, விபத்துக்கள் நடந்துடுமோன்னு பயமா இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வண்டி, வண்டியாமணல் கடத்தறா ஓய்...''என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில் என்.என்.கண்டிகை, நல்லாட்டூர், பூனிமாங்காடு ஊராட்சிகள் வழியா கொசஸ்தலை ஆறு, நந்தியாறு ஓடறது... இந்த ஏரியாக்கள்ல தினமும் ராத்திரி நேரத்துல, மாட்டு வண்டிகள்ல மணல் கடத்தறா ஓய்...
''இரவு ரோந்து போற போலீசார், ஒரு மாட்டு வண்டிக்கு, 1,000 முதல், 2,000 வரை வசூல் பண்ணிக்கறா... இதனால, இரவு ரோந்து பணிக்கு போறதுல, போலீசார் மத்தியில போட்டா போட்டியே நடக்கறது... அந்த ஏரியா தனிப்பிரிவு ஏட்டுக்கும் பங்கு போயிடறதால, அவரும், 'கம்'முன்னு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''டானிக் வித்து சம்பாதிக்கிறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்
''என்ன டானிக் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''மதுரை சிட்டி போலீசார் சிலர், தங்களது உடல் பருமனை குறைக்க, வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்தசத்து டானிக்கை குடிச்சிருக்காங்க... சில மாசத்துலயே பலருக்கும் எடை குறைஞ்சிடுச்சு பா...
''இதனால, எல்லா போலீசாரும் சத்து டானிக்கை குடிக்க ஆரம்பிச்சாங்க... நாளடைவுல, 'நியூட்ரிஷியன்கிளப்' ஒன்றையே துவங்கிட்டாங்க... இந்த கிளப்ல நிறைய பேரை சேர்த்து, டானிக்கையும் வித்து குடுத்தா, அவங்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைச்சிட்டு போறாங்க பா...
''இதனால, ஸ்டேஷனுக்கு புகார் தர வர்றவங்களிடம்,'முதல்ல உங்க உடம்பை கவனிங்க'ன்னு கனிவா பேசி, டானிக்கை தலையில கட்டிடுறாங்க... இதுல நல்ல லாபம் கிடைக்கிறதால, எஸ்.எஸ்.காலனி ஸ்டேஷனில் பணியாற்றிய ஒரு பெண் போலீஸ், எட்டு மாசமா டூட்டிக்கேவராம, டானிக் பிசினஸ்ல இறங்கிட்டாங்க பா...
''மதுரையில் மட்டும் இந்த டானிக் விற்பனையில், 250 போலீசார் நேரடியாகவும், மறை
முகமாகவும் ஈடுபட்டிருக்காங்க... இதுல, நிறைய பேர் பெண் போலீசார்... இது, கமிஷனர் காதுக்கும் போக, 'யார், யாரெல்லாம் டானிக் விற்கிறாங்கன்னு கண்டுபிடிச்சு, 'மெமோ' குடுங்க'ன்னு கீழ்மட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டிருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.