/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குறுக்கு வழி தரிசனத்தால் குறையும் கோவில் வருவாய்!
/
குறுக்கு வழி தரிசனத்தால் குறையும் கோவில் வருவாய்!
PUBLISHED ON : அக் 12, 2025 12:00 AM

டபராவில் நுரை பொங்க, நாயர் எடுத்து வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, ''மரபையும், சட்டத்தையும் மீறி நியமனம் பண்ணியிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' என, கேட்டார் அன்வர்பாய்.
''சென்னை மாநகர போக்குவரத்து கழகமான, எம்.டி.சி.,யில், திருப்பதி கடவுள் பேர் கொண்ட அதிகாரி, கடந்த மே மாசம், 'ரிட்டயர்' ஆனார்... இவரை, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் போர்டு உறுப்பினராகவும், சாலை போக்குவரத்து நிறுவனமான ஐ.ஆர்.டி., குழு உறுப்பினராகவும் நியமித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் செப்., 26ல் உத்தரவு போட்டிருக்கா ஓய்...
''அதுவும், ஜூன் 2ல் இருந்து முன்தேதியிட்டு இந்த பதவிகளை வழங்கியிருக்கா... பொதுவா, ஒரு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியை, அதே நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினரா நியமிக்க, சட்டத்துல இடமில்லையாம்... அதேபோல, 'மரபு ரீதியாகவும் இது தப்பு'ன்னு போக்குவரத்து கழக வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வெங்கட்ராஜன்... உங்களை அப்புறம் நானே கூப்பிடுறேன்...'' என்று இணைப்பை துண்டித்த அந்தோணிசாமி, ''வீரர்களை விரட்டாத குறையா வெளியேத்தி இருக்காங்க...'' என்று தொடர்ந்தார்...
''தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை நடத்துது... மாவட்ட அளவிலான போட்டிகள் முடிஞ்சு, கடந்த, 2ம் தேதி முதல் வர்ற, 14ம் தேதி வரை மாநில அளவிலான போட்டிகள் பல ஊர்கள்லயும் நடக்குதுங்க...
''சென்னையில் கலந்து கொண்ட வீரர்களுக்கு தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து செலவு எல்லாத்தையும் ஆணையமே தரணும்... ஒரு அணி தோல்வி அடைஞ்சுட்டா, போட்டி நடந்த அன்னைக்கு முழுக்க விடுதியில் தங்கிக்கலாம்... இரவு சாப்பாட்டை முடிச்சுட்டு, ஊர்களுக்கு போகலாம்...
''ஆனா, நடப்பாண்டு, தோல்வி அடைந்த அணியினரை, தங்கும் விடுதியில் இருந்து மதியமே வெளியேத்திடுறாங்க... இரவு சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்யலைங்க... இதனால, பகல் முழுக்க ரயில் மற்றும் பஸ் நிலையங்கள்ல வீரர்கள் காத்துக் கிடந்து, ராத்திரி ஊருக்கு கிளம்பிடுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''லட்சக்கணக்கில் கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதாவ வே...'' என, கடைசி தகவலை தொடங்கினார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வர்றாங்கல்லா... இங்க, கட்டண ரசீது வாங்காம பக்தர்களை தரிசனம் பண்ண வைக்க, பல புரோக்கர்கள் சுத்திட்டு இருக்காவ...
''இதுல, கோவில் பெண் அதிகாரி மற்றும் ஊழியர் தரப்புல ஒரு புரோக்கர் குழு செயல்படுது... இன்னொரு புரோக்கர் குழு, சமயபுரம் போலீஸ் அதிகாரி மற்றும் ஊர்க்காவல் படையினர் சிலரது தலைமையில் செயல்படுது வே...
''தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்களை, குறுக்கு வழி தரிசனத்துக்கு இவங்க அழைச்சிட்டு போயிடுதாவ... இதனால, கோவிலுக்கு கட்டண ரசீது மூலம் கிடைக்கக்கூடிய பல லட்சம் ரூபாய் வருவாய் பாதிக்கப்படுது வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''சொல்லுங்கோ ரகுராம்... எந்த ஸ்டேஷன்ல இருக்கேள் இப்போ... கோவிலுக்கு நித்யா, பாபு, அன்பு எல்லாம் வந்துட்டாளா... இதோ வர்றேன்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.