/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விவசாயி குறைதீர் கூட்டத்தில் சிரிப்பு எஸ்.ஐ.,யை வறுத்தெடுத்த கலெக்டர்
/
விவசாயி குறைதீர் கூட்டத்தில் சிரிப்பு எஸ்.ஐ.,யை வறுத்தெடுத்த கலெக்டர்
விவசாயி குறைதீர் கூட்டத்தில் சிரிப்பு எஸ்.ஐ.,யை வறுத்தெடுத்த கலெக்டர்
விவசாயி குறைதீர் கூட்டத்தில் சிரிப்பு எஸ்.ஐ.,யை வறுத்தெடுத்த கலெக்டர்
PUBLISHED ON : பிப் 15, 2024 12:00 AM

நாகப்பட்டினம்:'நாகை, மாவட்டத்தில் விவசாய பாசன வாய்க்கால்களில் தண்ணீரை சேமிக்கவும், வெளியேற்றவும் பயன்படும், 'ரெகுலேட்டர்கள்' பல பகுதிகளில் திருடு போகின்றன.
பொதுப்பணித் துறை கண்டு கொள்வதில்லை. 32 இடங்களில் ரெகுலேட்டர் கதவுகள், இரும்பு பொருட்கள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கவில்லை' என விவசாயிகள், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர். போலீசாரிடம் கலெக்டர் கேள்வி எழுப்பினார்.
'டாடா ஏஸ் வாகனத்தில் இரவு நேரத்தில் வரும் திருடர்கள், அரை மணி நேரத்தில் தப்பி சென்று விடுகின்றனர். ரெகுலேட்டர்களை கண்காணிக்க முன்பு லஷ்கர் என்பவர் பணியில் இருப்பார். இப்போது காலதாமதமாக புகார் வருகிறது. விசாரித்து வருகிறோம். கண்டுபிடிக்க முடியவில்லை' என, போலீசார் அலட்சியமாக பதிலளித்தனர்.
அதிருப்தியடைந்த விவசாயிகள், 'போலீசார் மனது வைத்தால் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கலாம். அரசு சொத்து என்பதால் அலட்சியம் காட்டுகின்றனர். பல இடங்களில் புகாரை வாங்க மறுக்கின்றனர்' என்றனர்.
அப்போது, அந்த விவசாயியை பார்த்து, வலிவலம் எஸ்.ஐ., மாரியப்பன் சிரித்தபடி இருந்தார்.
இதை கவனித்த கலெக்டர், 'எதற்காக அவரை பார்த்து சிரித்தீர்கள், அவர்களது வாழ்வாதார பிரச்னை குறித்து பேசும் போது சிரிப்பு ஏன்? ரெகுலேட்டர் திருடு போனது குறித்து உங்கள் ஸ்டேஷனில் எத்தனை புகார் வரப்பெற்றன.
'அதன் மீது எடுத்த நடவடிக்கை விபரம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, காலை 10.00 மணிக்கு என்னை அலுவலகத்தில் நேரில் வந்து சந்திக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
கலெக்டரின் அதிரடி உத்தரவால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

