/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆளுங்கட்சி நிர்வாகிகளை கண்காணிக்கும் தலைமை!
/
ஆளுங்கட்சி நிர்வாகிகளை கண்காணிக்கும் தலைமை!
PUBLISHED ON : பிப் 17, 2024 12:00 AM

''வளர்ச்சி பணிகள்ல, 2 கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்திருக்காம் பா...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், ஊட்டி கீழ்குந்தா பேரூராட்சியில், கடந்த அஞ்சு வருஷத்துல நடந்த பல வளர்ச்சி பணிகள்ல, 40 சதவீதம் அளவுக்கு பணிகளே நடக்கலையாம்... இது சம்பந்தமா, அதிகாரிகள் ஆய்வு நடத்தியிருக்காங்க பா...
''இதுல, 2 கோடி ரூபாய் அளவுக்கு பணிகளே நடக்கலைன்னு தெரியவந்திருக்கு... இந்த பணத்தை யாராவது கையாடல் பண்ணிட்டாங்களான்னு விசாரணை நடக்குது பா...
''இந்த சூழல்ல, பேரூராட்சியின் செயல் அலுவலரை, அதிரடியா தர்மபுரிக்கு மாத்திட்டாங்க... இதுவும், கையாடல் பத்தி பல சந்தேகங்களை கிளப்பியிருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''ரவிகுமார், இங்கன உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''அரசுக்கு நஷ்டம்னு புகார் குடுத்திருக்காவ வே...'' என்றார்.
''யாரால அரசுக்கு நஷ்டமாம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், பூலாஞ்சேரி கிராமத்துல உள்ள கல் குவாரியில பாறைகளை முழுவீச்சுல உடைச்சு எடுக்காவ... பக்கத்துல உள்ள பாப்பாபட்டி கிராமத்துல இருக்கிற கிரஷர்ல ஜல்லிக்கற்களை, எம் - சாண்டா மாத்தி, லாரிகள்ல விற்பனைக்கு அனுப்புதாவ வே...
''இந்த குவாரி, திருச்சி வடக்கு மாவட்ட ஒன்றிய ஆளுங்கட்சி நிர்வாகிகளின் பினாமி பெயருல செயல்படுது... குவாரியின் பின் பக்கத்தில் ஜெலட்டின் குச்சிகளை வச்சு, பாறைகளை உடைக்காவ வே...
''இந்த குவாரிக்கு முறையான அனுமதி எதுவும் இல்லையாம்... இதனால, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுறதும் இல்லாம, சுற்றுச்சூழலும் கடுமையா பாதிக்கப்படுது வே...
''நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், குவாரிக்கு சாதகமா இருக்காவ... இது பத்தி, பாப்பாபட்டி கிராம மக்கள், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பிட்டு, நடவடிக்கை வருமான்னு காத்துட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நிர்வாகியை கூப்பிட்டு, எச்சரிச்சு அனுப்பியிருக்கார் ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''ஆளுங்கட்சி தகவலா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் தெற்கு ஒன்றிய ஆளுங்கட்சி நிர்வாகியா இருக்கறவர் மேல ஏகப்பட்ட புகார்கள் குவியறது... இவரது தம்பி மனைவி, மக்கள் பிரதிநிதியாகவும் இருக்காங்க ஓய்...
''அ.தி.மு.க.,வினருக்கு சாதகமா செயல்படறார், சொந்த கட்சியினரை மதிக்க மாட்டேங்கறார்னு இவர் மேல, தலைமைக்கு நிறைய புகார்கள் போனது...
''இதனால, நிர்வாகியை அறிவாலயத்துக்கு அழைச்ச சீனியர் அமைச்சர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியிருக்கார் ஓய்...
''அப்ப, 'உங்களை மாதிரி நிர்வாகிகளின் நடவடிக்கைகளை தலைமை கண்காணிச்சிட்டு தான் இருக்கு... தேர்தல் நேரத்துல, ஜாக்ரதையா இருங்க... இல்லன்னா, கடும் நடவடிக்கை எடுப்போம்'னு எச்சரிக்கை பண்ணி அனுப்பியிருக்கார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''சந்தானம் நடிச்ச, வடக்குப்பட்டி ராமசாமி படம் பார்த்துட்டீயளா வே...'' என, அண்ணாச்சி கேட்க, சினிமா பற்றி பேசியபடியே நண்பர்கள் நகர்ந்தனர்.