/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மகளுக்கு சுயமரியாதை திருமணம் நடத்திய அறங்காவலர்!
/
மகளுக்கு சுயமரியாதை திருமணம் நடத்திய அறங்காவலர்!
PUBLISHED ON : செப் 29, 2024 12:00 AM

கருப்பட்டி காபியை பருகியபடியே, ''வடமாநில அதிகாரிகளின் அலட்சியம், ரெண்டு மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னுபயப்படுதாவ வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''போன வருஷம் பெய்த கனமழையில, சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை, செங்கல்பட்டு மாவட்டத்துல இருக்கிற பல அடுக்குமாடிகுடியிருப்புகள் எல்லாம் வெள்ளத்துல மிதந்துச்சுல்லா...
''இதனால, பக்கிங்காம் கால்வாயின் வடிகாலா இருக்கும், சிறுசேரி கால்வாய் சீரமைக்கும் திட்டத்தை, நீர்வளத்துறை சார்புல துவக்குனாவ... இந்த வருஷம் ஜனவரியில துவங்க இருந்த பணிகளை, லோக்சபா தேர்தல் காரணமா நிறுத்தி வச்சிருந்தாவ வே...
''தேர்தல் முடிஞ்சாவது,பணிகளை துவங்குவாங்கன்னு பார்த்தா, துறையில இருந்த வடமாநில உயர் அதிகாரியும், தலைமைச் செயலகத்தில் இருந்த வடமாநில உயர் அதிகாரியும் சேர்ந்து, நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, முட்டுக்கட்டை போட்டுட்டாவ...
''இந்த ரெண்டு அதிகாரிகளும் நினைச்சிருந்தா, உலக வங்கி, மத்திய அரசின், 'அம்ருத்' திட்டம்னு ஏதாவது ஒரு வகையில நிதியை திரட்டி, சிறுசேரி திட்ட பணிகளை முடிச்சிருக்கலாம் வே...
''ஆனா, அவங்க அதுல ஆர்வம் காட்டல...இப்ப, இந்த இடங்களுக்குநம்ம மாநில அதிகாரிகள்வந்துட்டதால, இனியாவது பணிகளை ஆரம்பிச்சு, வடகிழக்கு பருவமழை துவங்குறதுக்குள்ள முடிப்பாங்களா'ன்னு ரெண்டு மாவட்ட மக்களும் எதிர்பார்த்துட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கான்ட்ராக்டர் தொல்லை தாங்க முடியல பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தலைமைச் செயலகத்தில், மனிதவள மேலாண்மை துறையின்இணைச்செயலரா பணியாற்றி ஓய்வு பெற்றவர், துணை சபாநாயகர் பிச்சாண்டி அலுவலகத்தில், உதவியாளரா இருக்காரு... இவர், அதிகாரப்பூர்வமா உதவியாளரா நியமிக்கப்படல பா...
''பிச்சாண்டி அமைச்சரா இருந்த காலகட்டத்துல, அவரிடம் உதவியாளரா இருந்த பழக்கத்துல இப்பவும் வந்துட்டு போறாரு... இவரது மருமகன், அரசு துறைகள்ல எலக்ட்ரிக்கல்பணிகளை செய்யும் கான்ட்ராக்டரா இருக்காரு பா...
''இவர், துணை சபாநாயகர் இல்லாத நேரத்துல,அவரது ஆபீஸ்ல வந்து உட்கார்ந்துட்டு, அதிகாரிகள், ஊழியர்களை வேலை வாங்குறாரு... அங்க இருக்கிற டெலிபோன்லயே பல துறை அதிகாரிகளிடமும் பேசி, காரியத்தை முடிக்கிறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''முருகன், பிரகாஷ் தள்ளி உட்காருங்க...'' என்ற குப்பண்ணாவே,''கடவுள் நம்பிக்கை இல்லாதவா, கோவிலை நிர்வாகம் பண்ணலாமோ...'' என கேட்டு, நிறுத்தினார்.
''புரியும்படியா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி,
''கோவை மாவட்டம், ஆனைமலைமாசாணியம்மன் கோவில்ல அறங்காவலராஇருக்கறவர், சமீபத்துலதன் மகளுக்கு, 'வாழ்க்கைதுணை ஏற்பு ஒப்பந்த விழா' என்ற பெயர்ல சுயமரியாதை திருமணத்தை நடத்திஇருக்கார்... திருமண பத்திரிகையிலும், தன் பெயரை, 'மாசாணிஅம்மன் கோவில் அறங்காவலர்'னே குறிப்பிட்டிருக்கார் ஓய்...
''இதனால, 'கோவில் அறங்காவலரா இருக்கறவருக்கு கடவுள் நம்பிக்கையும், பக்தியும் இருக்க வேணாமோ... அது இல்லாதவரை,எப்படி இந்த பொறுப்புல நியமிச்சா'ன்னு இந்த கோவிலுக்கு அடிக்கடி வர்ற பக்தர்கள் மனம் வெதும்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனமானது.