/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
லஞ்ச ஒழிப்பு வேட்டையால் உஷாரான வி.ஏ.ஓ.,க்கள்!
/
லஞ்ச ஒழிப்பு வேட்டையால் உஷாரான வி.ஏ.ஓ.,க்கள்!
PUBLISHED ON : ஏப் 18, 2025 12:00 AM

''மன்னிப்பு கடிதம் குடுத்தவாளை சேர்த்துக்க போறார் ஓய்...'' என்றபடியே வந்தார், குப்பண்ணா.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் தவிர மற்ற யாரும் கட்சியில் சேரலாம்னு, அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி பச்சைக்கொடி காட்டி இருந்தாரோல்லியோ... இதன்படி, அந்த மூன்று பேரின் ஆதரவாளர்கள் பலரும், தலைமை கழகத்துல மன்னிப்பு கடிதம் குடுத்துட்டு காத்திருந்தா ஓய்...
''இப்படி கடிதம் குடுத்தவா, சட்டசபை தேர்தல்ல தங்களுக்கு போட்டியா, 'சீட்' கேட்பான்னு பயந்து போன, 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களின், 'மாஜி' அமைச்சர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய செயலர்கள் எல்லாம் கைகோர்த்து, 'உள்ளடி' அரசியல் பண்ணிட்டா... அதாவது, தலைமை கழக நிர்வாகிகள் உதவியுடன், அவாளது மன்னிப்பு கடிதங்களை, பழனிசாமி பார்வைக்கு போகாம தடுத்துட்டா ஓய்...
''இதனால, வெறுத்து போன பலரும், சேலத்துல பழனிசாமி வீட்டுக்கே போய் மன்னிப்பு கடிதங்களை குடுக்க துவங்கிட்டா... அந்த கடிதங்களை பரிசீலித்து, நீக்கப்பட்டவாளை எல்லாம் இணைக்க, மாவட்ட வாரியா சுற்றுப்பயணம் கிளம்ப பழனிசாமி முடிவு பண்ணியிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அரசு தலையிடுமான்னு எதிர்பார்க்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்ல, 2.50 லட்சம் விசைத்தறிகள் இருக்கு... இதன் மூலமா நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏழு லட்சம் பேர் வாழ்க்கை நடத்துறாங்க...
''காடா துணியை கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய கட்டணத்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் தர்றது இல்ல... 'சர்வதேச அளவுல ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கு'ன்னு உற்பத்தியாளர்கள் காரணம் சொல்றாங்க...
''விசைத்தறி உரிமையாளர்களுக்கு மானியம்,மின் கட்டணம் குறைப்புன்னு மாநில அரசு சலுகை குடுத்தா, பிரச்னை முடிவுக்கு வரும்னு சொல்றாங்க...
''இது சம்பந்தமா, தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ் தரப்பு, ஜவுளி உற்பத்தி யாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களிடம் சமரச பேச்சு நடத்த முடிவு பண்ணியிருக்காங்க... 'அவங்க பெயரை தட்டிட்டு போறதுக்குள்ள, அரசு தரப்பு பேச்சு நடத்தி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரணும்'னு தி.மு.க.,வினர் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ரொம்பவே உஷாராகிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாரு வே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டத்துல, கடந்த அஞ்சு மாசத்துல மட்டும், மூணு லஞ்ச வி.ஏ.ஓ.,க்கள் போலீசாரிடம் சிக்கிட்டாங்க... ஊத்துக்குளி தாலுகா, இடையபாளையம் கிராமத்துல லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ.,வை கைது செஞ்சாங்க பா...
''அவருக்கு பதிலா, பக்கத்து கிராம வி.ஏ.ஓ., வந்தாரு... அவரும் லஞ்சம் வாங்கி, போன மாசம் உதவியாளருடன் சேர்ந்து, 'உள்ள' போயிட்டாரு பா...
''இதனால, 'வருவாய் துறையின் அடிமட்டத்துல இருக்கிற எங்களை மட்டும் குறி வைக்கிறாங்க... எங்களுக்கு மேல இருக்கிறவங்க வாங்குறது எல்லாம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியாதா'ன்னு வி.ஏ.ஓ.,க்கள்புலம்புறாங்க பா...
''அதுவும் இல்லாம, தங்களோட வசூல் இடம், நேரம் எல்லாத்தையும்மாத்திட்டாங்க... பல வி.ஏ.ஓ.,க்கள் வார இறுதி நாட்கள்ல ஆபீஸ் பக்கமே வராம, ரகசிய இடத்துல, 'டீலிங்'கை வச்சுக்கிறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.