/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விருப்ப ஓய்வில் ஓட துடிக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள்!
/
விருப்ப ஓய்வில் ஓட துடிக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள்!
விருப்ப ஓய்வில் ஓட துடிக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள்!
விருப்ப ஓய்வில் ஓட துடிக்கும் குடிநீர் வாரிய அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூலை 20, 2025 12:00 AM

டபராவில் நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, “சர்ச்சை அதிகாரியை மாத்தணும்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரியை தான் சொல்றேன்... இவர், 2016ல் க.பரமத்தியில் பணியில் இருந்தப்ப, கோவையில் ஹவாலா பணம், 3.50 கோடி ரூபாயை கொள்ளையடித்த வழக்கில் கைதாகி, ஜெயிலுக்கும் போனார் ஓய்...
“அப்ப, 'சஸ்பெண்ட்' ஆனவர், ஜாமின்ல வந்து மறுபடியும் பணியில் சேர்ந்து பல மாவட்டங்கள்ல வேலை பார்த்தார்... போன வருஷம் லோக்சபா தேர்தலுக்கு முன்னாடி, கரூர், பசுபதிபாளையத்துக்கு வந்தார் ஓய்...
“இந்த ஒன்பது வருஷத்துல திருந்தியிருப்பார்னு பார்த்தா, உப்பிடமங்கலத்தில் கால்நடை வியாபாரிகளிடம் சண்டை போட்டு, அந்த வீடியோ சமூக வலைதளங்கள்ல பரவிடுத்து... சமீபத்துல, அரசு மருத்துவ கல்லுாரி முன்னாடி சாலை மறியல்ல ஈடுபட்ட பெண்களிடம் இவர் அநாகரிகமா நடந்துண்ட வீடியோவும் வெளியாச்சு... இதனால, 'இவரை இடம் மாத்திடுங்கோ'ன்னு ஆளுங்கட்சியினரே தலைமைக்கு புகார் அனுப்பிண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“முத்துகுமார், இந்த மேட்டரையும் கேட்டுட்டு கிளம்புங்க பா...” என, நண்பரை இழுத்து பிடித்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேரூராட்சியின் முக்கிய பதவியில, தி.மு.க., பெண்மணி இருக்காங்க... ஆனா, இவங்க பேரூராட்சி அலுவலகம் பக்கமே வருவது கிடையாது பா...
“அவங்க மாமனாரான, தி.மு.க., ஒன்றிய புள்ளி தான், தினமும் அலுவலகம் போய், நிர்வாகத்தை கவனிக்கிறாரு... 'கட்டிங்' வாங்கிட்டு, சட்டவிரோதமா நிறைய குடிநீர் இணைப்புகளை வாரி வழங்கியிருக்காரு பா...
“அதுவும் இல்லாம, அலுவலகத்துல வேலை பார்க்கிற பெண்களிடம், 'டபுள் மீனிங்'ல பேசியும், 'டார்ச்சர்' தர்றாரு... இவரை பத்தி, மாவட்ட செயலருக்கும், கட்சி தலைமைக்கும் ஏகப்பட்ட புகார்கள் போயும், எந்த விசாரணையும் நடக்கல... ஒன்றிய புள்ளியின் அடாவடியும் குறையல பா...” என்றார், அன்வர்பாய்.
ஒலித்த மொபைல் போனை எடுத்த பெரிய சாமி அண்ணாச்சி, “என்னது, சின்ன பாண்டியா... சாரி, ராங் நம்பர்...” என வைத்தவர், “மீட்டிங் போட்டே சாவடிக்காவன்னு புலம்புதாவ வே...” என்றார்.
“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் காலையில, 10:00 மணிக்கு வர்ற அதிகாரிகள் சாயந்தரம், 6:00 மணி வரைக்கும் பணியில இருக்காவ... அப்புறமா வீட்டுக்கு கிளம்பலாம்னு பார்த்தா, உயர் அதிகாரிகள் ராத்திரி, 7:00 முதல், 9:30 மணி வரை, 'ஜூம் மீட்டிங்' போட்டு காய்ச்சி எடுக்காவ வே...
“இப்படி உயர் அதிகாரிகள் தொடர்ந்து மீட்டிங் போட்டு தர்ற குடைச்சல் தாங்க முடியாம, பலரும், வி.ஆர்.எஸ்., கேட்டு விண்ணப்பிச்சிருக்காவ... ஆனா, அதுக்கும் அனுமதி தராம அதிகாரிகள் இழுத்தடிக்காவ வே...
“ஏற்கனவே, வாரியத்துல தகவல் தொழில்நுட்ப மேலாளர், தலைமை பொறியாளர் உட்பட, 30 சதவீதம் பணியிடங்கள் காலியா கிடக்கு... இவங்க பணிகளை எல்லாம், கீழ்மட்ட அதிகாரிகள் தான் கூடுதல் வேலையா செய்யுதாவ... கடும் பணிச்சுமையில தவிச்சிட்டு இருக்கிறவங்களை, மீட்டிங் போட்டு அதிகாரிகளும் நோக அடிக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.