/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
மூங்கில் குருத்து 'சூப்பர்' உணவா?
/
மூங்கில் குருத்து 'சூப்பர்' உணவா?
PUBLISHED ON : ஜன 29, 2026 07:31 AM

மூங்கில் குருத்துகள் ஒரு குறிப்பிட்ட பகுதிகளுக்கான உணவாகவே அறியப்பட்டு வந்தன. தற்போது இங்கிலாந்தின் ஏஞ்சலியா ரஸ்கின் பல்கலை ஆராய்ச்சியாளர்கள், மூங்கிலின் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒரு 'சூப்பர் புட்' என்ற மிகைப்படுத்தல்களை தாண்டி, இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிதறிய ஆய்வுகளை ஒருங்கிணைத்து, அதன் உண்மையான பலன்களை எடைபோட முயல்கிறது இந்த ஆய்வு.
பரிசோதனைகளின்படி, மூங்கில் குருத்துகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் செறிந்துள்ளன. கொழுப்பு மிகக் குறைவு. இவை ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொழுப்புச் சத்தை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதாக ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், மூங்கில் குருத்துகளில் ஆக்சிஜனேற்றத் தடுப்பு மற்றும் புரோபயாடிக் பண்புகள் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இது ஒரு சத்துள்ள மாற்று உணவாக இருந்தாலும், அதன் மருத்துவ பலன்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் விடுக்கின்றனர். சில மூங்கில் வகைகளில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதால், அவற்றை முறையாக சமைக்காவிட்டால், உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
இதுவரை மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. எனவே, மூங்கில் குருத்தை ஒரு முழுமையான மருத்துவ உணவாக பரிந்துரைக்கும் முன், கூடுதல் அறிவியல் சோதனைகள் அவசியம் என்கிறது இந்த ஆய்வு.

