PUBLISHED ON : ஜன 14, 2017

'கல்லிலே கலை வண்ணம்' கண்டார் என தமிழர்களின் சிற்பக்கலை குறித்து பாடி வைத்தனர். பூரி ஜெகன்நாதர் கோயிலில் மூன்று மூலவர் சிலைகள் தேக்கு மரத்தால் ஆனது. இவற்றின் அழகும், கலை நயம் மிக்க தொழில்நுட்பமும் பல நூற்றாண்டுகள் கடந்த நிலையில் இன்றளவும் இந்திய கலாசார பெருமைகளை உலகிற்கு எடுத்து செல்கிறது. பூரி ஜெகன்நாதர் கோயில் மரச் சிற்பங்களை செதுக்கிய சிற்பி குறித்து விபரம் அறியப்படவில்லை.
மரச் சிலைகளை தனது பரம்பரைக்கே உரிய பாணியில் அழகாகவும், தத்ரூபமாகவும் வடிவமைத்து அசத்தி வருகிறார் மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த தலைமை ஸ்தபதி மாசானம் ஆசாரி. இவரது கை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான மரச்சிற்பங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி,
திருச்செந்தூர், திருவண்ணாமலை, சிதம்பரம், திருப்பதி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என பல கோயில்களிலும் இடம் பிடித்து வருகின்றது.
நூற்றாண்டு கடந்த... நன்கு விளைந்த... வைரம் பாய்ந்த... தேக்கு மரக்கட்டைகளை தேர்வு செய்து சிலை வடிக்க தனது சிற்பக் கலைஞர் குழுவுடன் தயாராகிறார் தலைமை ஸ்தபதி மாசானம். சிலை ஒன்றை வடிக்க, இவர் எடுத்து கொள்ளும் காலம் பல மாதங்கள் கூட ஆகலாம்.
இன்றைய இயந்திர உலகில் இயந்திரங்கள் இன்றி கை விரல்களுக்கு ஓய்வின்றி உழைப்பை தருகிறார் மாசானம். இதன் காரணமாகவே இவரது சிற்பங்கள் உயிரோட்டமாக ஆண்டாண்டு காலம் உழைப்பையும், சிலைகளை காண்போர் கண்களுக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் தருகிறது. தற்போது திருவனந்தபுரம் பத்பநாப சுவாமி கோயிலில், அனந்த சயனக் கோலத்தில் வீற்றிருக்கும் சுவாமி சிலையை உருவாக்கும் பணியில், ஆறு மாதமாக மாசானம் ஈடுபட்டு வருகிறார்.
அவர் கூறும்போது, '' விஸ்வகர்மா குலத்தில் ஐந்தாவது தொழில் வகுப்பு சிற்பக்கலை. இதில் கை தேர்ந்தவரான எனது தந்தை இ.எம்.சுப்பிரமணியன் ஆசாரி இருந்தார். அவரிடம் 18 வயதில் தொழில் கற்றேன். மாதக் கணக்கில் சிறு உளிகளை கொண்டு சிலைகளை செதுக்குவார். அதை அருகில் இருந்து பார்த்து நானும் கற்றேன். தற்போது என்னுடன், சகோதரர்கள் முருகேசன், பாலகிருஷ்ணன், மகன் ராஜேந்திரன் என குலத்தொழிலில் பிஸியாக உள்ளோம். எங்களை பொறுத்தமட்டில் கைப்பக்குவம் தான் பிரதானம். இதுவே தொழிலின் ரகசியமும் கூட. செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உழைப்பின் மூலம் உறுதிபடுத்தி வருகிறோம்.
தெய்வங்களுக்கு சிலை வடிப்பது வரம்,'' என்றார்.
தொடர்புக்கு 98431 78404.
கா.சுப்பிரமணியன்