
மார்கழி பனி முடிந்து தை பிறக்கும் போது குளிர்கால சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் நம் சுற்றுப்புறத்தில் பல்லுயிர் பெருக்கம் காணப்படும். விலங்குகளும், புழு, பூச்சிகளும் குளிர்காலத்தில் இணைந்து இனவிருத்தி செய்து அதனைத் தொடர்ந்து மரம், செடி, கொடிகள் என எங்கெங்கும் பல்வேறு புழுக்களும், பூச்சிகளும் அதிகரிக்கின்றன. இந்தப் பூச்சிகளில் பெரும்பாலானவை நன்மை செய்பவைகளாக இருந்த போதும் கூட இனப்பெருக்க மாற்றத்தினால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் வேறுபாட்டால் பல்வேறு தொற்று நோய்களின் ஆதிக்கமும் அதிகரிக்கிறது.
வீடுகளை நோக்கி படையெடுத்து வரும் பூச்சிகளை கட்டுப்படுத்தாவிட்டால் மனித இனத்திற்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உண்டாகிறது. இதனை தவிர்க்கவே நம் முன்னோர் போகி பண்டிகை கொண்டாடினர். வீட்டில் வேண்டாத பொருட்களை சுத்தம் செய்து, எரித்து அழிப்பதையே போகித் திருநாளாககொண்டாடுகிறோம். தங்கள் வீட்டிலுள்ள பழையப் பொருட்களைஅழித்து காரத்தன்மை மிகுந்த சுண்ணாம்பை பூசுவதால் வீடு சுத்தமாகிறது.
வெளியில் இருந்து வீட்டை நோக்கி படையெடுக்கும் பூச்சிகள்,வீட்டிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு வீடுமுன் கட்டப்படும் கூரைப்பூ உதவுகிறது. கண்ணுப்பீளைச் செடி, ஆவாரம் பூ, மாவிலை சேர்த்து வீட்டு முன் சொருகுவதில் பயன் உள்ளது. இலை உலர்ந்து கீழே விழும் போது அதை தாண்டி வீட்டிற்குள் பூச்சிகள் நுழையாது.
காப்புகட்டுச் செடியின் நாற்றம் கொசு, பூச்சிகள் பெருக்கத்தை தடுக்கும். ஆவாரம் பூ, மாவிலைகள் ஆக்சிஜன் செரிவை அதிகரிக்கிறது.
தைக்கு பின் வெப்பம் சார்ந்த நோய்கள் உருவாகும். அதை தவிர்க்க உளுந்து, பயிறு, பசும்பால், நெய், சர்க்கரை போன்ற குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளலாம். அதன் அடிப்படையில் தான் பொங்கலன்று அதிகாலையில் எழுந்து குளித்து, சூரியனை வணங்கி பொங்கல் வைத்து வழிபடுகிறோம்.
தடுப்பு மருந்துகள் வழங்க உகந்த மாதமும் தை தான். அதனால் தான் தை மாதத்தில் நாடு முழுவதும் போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. பொங்கல் நாளில் இஞ்சி மற்றும் மஞ்சள் கிழங்கு முக்கியமான வழிபாட்டு பொருளாக விளங்குகிறது. வைரஸ் கிருமிகளை இஞ்சி மற்றும் மஞ்சள் கிழங்கு அழிக்கும் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள்காமாலை, அம்மை போன்ற நோய்களை தடுக்க இவை உதவும். கோடையில் தோன்றும் நுண்கிருமிகளின் வளர்ச்சியை தடுக்கவும், குடலில் ஏற்படும் தொற்றினால் ஒவ்வாமை ஏற்படுவதை தடுக்கவும் பனங்கிழங்கு, வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய் போன்ற வழிபாட்டு பொருட்கள் உதவுகின்றன. இறைவனுக்கு படைக்கப்படும் இந்தப் பொருட்களை அன்றைய தினம் நம் உணவிலும் சேர்த்துக் கொள்கிறோம்.
வெயில் காலத்தில் தோன்றும் காமாலை மற்றும் சிறுநீரகக் கற்களை தடுக்க கரும்பு பெரிதும் உதவுகிறது. கரும்பினால் உடல் எரிச்சல் குறைவதுடன், பற்கறை நீக்கி சுத்தமடைகிறது. நன்கு மென்று தின்பதற்கு ஏற்றவாறு பற்களின் பலமும் அதிகரிக்கிறது. வாயு அதிகரிக்கக் கூடியதாக இருந்தாலும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பச்சை மொச்சை பொங்கலன்று உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் வலிமை அதிகரிக்கிறது.
மண் பானையில் செய்த பொங்கல் விரைவில் கெட்டுப்போவதில்லை. இப்படி, இயல்பாகவே ஆரோக்கிய பொங்கலாக அமைந்துவிட்டது.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,
சித்த மருத்துவர். 98421 67567