/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
வரலாறு, இலக்கியம் ஆன்மிகம் இணைந்த ஜல்லிக்கட்டு
/
வரலாறு, இலக்கியம் ஆன்மிகம் இணைந்த ஜல்லிக்கட்டு
PUBLISHED ON : ஜன 15, 2024

கொம்பை ஆயுதமாக கொண்டு தன்னை குத்தவரும் காளையை ஆயுதம் இன்றி வெறும் கைகளால் அடக்குவது என்பது வீரத்தின் உச்சம் தான். அத்தகைய வீரர்களை இன்றும் நாம் கொண்டாடுகின்றோம். காளையை அடக்கிய வீரனுக்கு பெண் கொடுப்பதற்கு பதிலாக கார் கொடுக்கும் காலமாக மாறிவிட்டது இன்றைய ஜல்லிக்கட்டு. இலக்கியங்களில் ஜல்லிக்கட்டு எப்படி கொண்டாடப்பட்டது என்பதை தமிழறிஞர்களிடம் கேட்டபோது கிடைத்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியது.
தமிழர்களின் அடையாளத்தில் காளை ஒரு குறியீடு
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேச்சாளர், எழுத்தாளர், மதுரை
தமிழர்களின் பண்பாடு 3000 ஆண்டுகள் பழமையும் பெருமையும் உடையது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி இலக்கியம் வரைக்கும் ஓவியங்கள், சிற்பங்களில் காளை மாடுகள்
இருப்பதை பார்க்க முடியும். அந்த காளைகள் சாதாரண குறியீடு அல்ல. மனிதர்களின் உறவைப் போன்றது. அவை உழவுக்கும் வண்டிக்கும் பயன்படுவதோடு தெய்வமாக, சிவபெருமானின் வாகனமாக வணங்கப்படும்.
திமிலும் கொம்பும் உடைய காளைகளை அடக்குபவன் வீரனாகவும் மதிக்கப்பட்டான். தமிழர்களின் அடையாளத்தில் காளை ஒரு குறியீடு. ஏழு ஸ்வரங்கள், ஆறு சுவைகள், ஐந்து பூதங்கள், ஐவகை நிலங்கள், காற்றின் நான்கு திசைகள், முத்தமிழ் (இயல், இசை, நாடகம்), வாழ்வியல் (அகம், புறம்) என பிரித்து பார்த்த தமிழர்கள் ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாக வைத்துள்ளனர். இதற்குள் தான் உலக வாழ்க்கை அடங்குகிறது.
மலைசார்ந்த இடம் குறிஞ்சி. இதற்குரிய விலங்கு யானை. காடு சார்ந்த இடம் முல்லை, இங்கே
மாடுகள் வளர்க்கப்படும். ஆண்கள் ஏறுதழுவுவதில் புகழ்பெறுவர்.
பெண்கள் பசுக்களை பராமரித்து பால் கறந்து, தயிர், மோர், வெண்ணெய் கடைந்து விற்பனை செய்வர்.
இதன் மூலம் பெண்கள் பொருள் ஈட்டுவர். பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமெனில் காளையை அடக்க வேண்டும். தன் வீட்டில் பெண் குழந்தை பிறக்கும் போதே காளை கன்றை வாங்கி வளர்ப்பர். பெண் பருவம் அடைந்ததும் காளையை அடக்குபவருக்கு தன் பெண்ணை
திருமணம் செய்து தருவர்.
கொல்லேற்று கோடஞ்சுவானை பத்துப்பாட்டில் ஒன்று கலித்தொகை. அதில் முல்லைக்கலியில்
'கொல்லேற்று கோடஞ்சுவானை…
மறுமையிலும் புல்லாளே ஆயன் மகள்'
என வரும். காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை மறு ஜென்மத்தில் கூட அந்தப் பெண் திருமணம் செய்ய மாட்டாள் என்று அர்த்தம். ஊர்வெளியில் மொத்தமாக மக்கள் கூடி ஏறு தழுவுதலை நடத்தியுள்ளனர். காளையை அடக்கிய வீரனுக்கு பொன், பொருள், பெண்
கொடுக்கப்படும்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமத்தில் உள்ள கோயிலில் 1500 ஆண்டுகள்
பழமையான சிற்பத்தில் காளையை அடக்கிய காட்சி இடம் பெற்றுள்ளது. இப்போதும் அங்கு விழா கொண்டாடப்படுகிறது.
மாட்டுக்கொம்பில் சில்லறை நாணயங்களை துணியில் முடிந்து கட்டி விளையாட விடுவர்.
மாட்டை அடக்குபவன் நாணயங்களை எடுக்கலாம். ஏறு தழுவுதல் என்பது தான் சரியான வார்த்தை. மாட்டை தழுவுவது தான் உண்மையான விளையாட்டு. துன்புறுத்துவது இல்லை. அவை இறந்தால் அடக்கம் செய்து தெய்வமாக வழிபடுவர். வரலாறு, புராணம், இதிகாசம், ஆன்மிகத்துடன் இணைந்தது தான் ஜல்லிக்கட்டு.
அகநானுாறு சொல்லும் உண்மைக்கதைகள்
பேராசிரியர் மலர்விழி மங்கையர்க்கரசி, மதுரை
சங்ககாலத்தில் காளைகளுக்கு நடைப்பயிற்சி, நீச்சல், மண் குத்துதல், வரப்பு வாய்க்கால்களைத் தாண்டுதல் என பயிற்சிகள் தரப்பட்டுள்ளதாக அகநானுாறில் கூறப்பட்டுள்ளது. முல்லை ஆற்காட்டுகிழார் மகனார் கண்ணத்தனார் பாடிய பாடலில் 'கலைகின்ற காலம் இதுவே'
எனும் பாடலின் முல்லை நிலக்காட்சிகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
''கடுநீர் வார்த்த செந்நில மருங்கின்
விடுநெறி ஈர் மணல் வாரணம் சிதற
பாம்பு உரை புற்றத்து ஈரம்புறம் குத்தி
மண் உடை கோட்ட அண்ணல் ஏறு''
என்ற பாடலில் மழைநீர் பெய்த செம்மண் நிலத்தில் தேர்விடும் தடம் உள்ளது. அத்தடத்தில் காட்டுக்கோழிகள் ஈர மணலை காலால் கிளறுகின்றன. பக்கத்தில் பாம்பு புற்றின் ஈரமான வெளிப்பக்கத்தை குத்தி கொம்பினில் மண்ணைக் கொண்ட தலைமை பண்புள்ள காளை என்பது தான் அந்த பாடலின் விளக்கம்.
ஜல்லிக்கட்டு காளைகளில்
காரிக்காளை, செவலை காளை என
இரு வகை உள்ளன. காரிக்காளை
வாடிவாசலில் துள்ளிக்கொண்டு பாய்ந்து செல்லும். மஞ்சுவிரட்டு, வாடிவாசல் இரண்டுக்கும் செவலைகாளை பொருத்தமாக இருக்கும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது கட்டு
போன்றவை சங்க காலத்தில் திணை வாரியாக பல்வேறு வடிவங்களில் இருந்திருக்கிறது. மருத நிலங்களில் எருமை மாடு ஏறு என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு எருமை காளைகளை வைத்தும் இந்த வீர விளையாட்டு நடந்திருக்கலாம்.
'மருதம் உவரிக் கண்ணுார்
புலங்கீரனார் எழுதிய பாடலில்
'வலிமிக முன்பின் அண்ணால் ஏறு' என்று அகநானுாறில்
குறிப்பிடுகிறார். உறுதிமிக்க உடல் வலிமையையும் தலைமை பண்பையும் உடைய எருமைக்கடா என்று அந்த வரிகளுக்கு பொருள். முல்லை நிலத்தில் ஆயர்கள் வளர்த்த காளைகளுக்கும்ஏறு என்றுதான் பெயர்.
தமிழ் இலக்கியங்களில் ஏறு தழுவுதல்
சங்கப் பத்துப்பாட்டு நுால்களில் மலைபடுகடாம், பட்டினப்பாலையில் ஏறுதழுவுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிஞ்சி, முல்லை நில மக்கள் தங்கள் நிலங்களில் ஏறுதழுவுதல் நிகழ்வை நடத்தியுள்ளனர். வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று மோதச்செய்து அவை பெறும் வெற்றியை கொண்டாடியுள்ளனர். மலைபடுகடாம் வரிகளில் அக்கால
வீர தமிழரின் வாழ்வியல்
கூறப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதல்
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர்
குரவைப் பகுதியில் காளையை அடக்கியவருக்கு உரியவள் இம்முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலை உடையவள் என்ற அர்த்தத்தில்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தார்க்கு
ஊர்ந்தாற்கு உரியள்இம்
முல்லையம் பூங்குழல்தான்'
என்று கூறப்பட்டுள்ளது.
அக்காவிய காலத்தில் காளையோடு பெண் குழந்தையையும் இணைத்தே வளர்த்து அதை அடக்கும் வீரனுக்கு மணமுடித்து கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது மணமகளுக்கான
வீர சுயம்வரமாக இருந்துள்ளது.
கலித்தொகை நுாலின் முல்லைக்கலிப்பகுதியில் மாடுகளின் நிறம், வீரம், வகைகள், அதனை அடக்கும் வீர இளைஞர்களின் செயல்கள், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவுதல் பார்க்கும் பெண்களின் பேச்சுக்கள், பெற்றோரின் இயல்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
தெய்வீக நிகழ்வின் அடிநாதம் ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும் ஆல், மாமரங்களின் கீழ் உள்ள தெய்வங்களை வணங்குவர்.
வீரத்தின் அடையாளமாக ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் கூறப்பட்டாலும் அதன் அடி நாதம் தெய்வீகம் சார்ந்ததாகவே உள்ளது. அந்நிகழ்வின் போது காளைக்கும் அதை அடக்குவோருக்கும், காண்போருக்கும் உயிர்ச்சேதம் நிகழக்கூடாது என்பதற்கான தொடக்க வழிபாடாக அமைந்துள்ளது.
பழங்காலம் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன் காலம் வரையிலும் காளைகளை அடக்கிய ஆண்களை பெண்கள் விரும்பி மணந்துள்ளதை முல்லைக்கலி குறிப்பிடுகிறது.