sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

கீழடி காலடி மண்ணே... வரிசை கட்டும் 'பண்பாட்டு' பிரமாண்டம்

/

கீழடி காலடி மண்ணே... வரிசை கட்டும் 'பண்பாட்டு' பிரமாண்டம்

கீழடி காலடி மண்ணே... வரிசை கட்டும் 'பண்பாட்டு' பிரமாண்டம்

கீழடி காலடி மண்ணே... வரிசை கட்டும் 'பண்பாட்டு' பிரமாண்டம்


PUBLISHED ON : ஜன 15, 2024

Google News

PUBLISHED ON : ஜன 15, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முந்தைய தமிழ் சமூகத்தின் தொன்மையை பறைசாற்றும் நிகழ்கால சாட்சி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி. ஆம்... நாகரிகம் எப்போது துவங்கியது என வரலாற்று ஆய்வாளர்கள் கணித்த காலத்திற்கு முன்பே எழுத்தறிவு, திட்டமிட்ட வேளாண்மை, நீர் மேலாண்மை, நகர வாழ்வு, உலக தொடர்புகள் என உயரிய நாகரிகத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக திகழ்ந்துள்ளது, நம் தமிழ் சமூகம். அதற்கான ஆயிரக்கணக்கான அடையாளங்களை தனக்குள்ளே புதைத்து வைத்துள்ள 'தாய்மடி'யே நாம் பெற்ற கீழடி பெருமை.

மதுரை - திருப்புவனம் ரோட்டில் அமைந்துள்ளது. பத்து கட்டங்களாக நடத்தப்பட்ட ஆகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரிய தொல்லியல் பொருட்களை செட்டிநாடு கட்டடக் கலை தொழில்நுட்பத்தில் ஆறு பிளாக்குகளில் 6 தலைப்புகளாக பிரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது சுவராஸ்யமே.

வைகையும் கீழடியும்

முதல் பிளாக்கிற்குள் நுழைந்தவுடன் கீழடி அகழ்வை ஒட்டுமொத்தமாய் விளக்கும் வகையில் உள்ள அகழாய்வுக் குழி, அங்குள்ள முதுமக்கள் தாழியின் பிரமாண்ட 'செட்' பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் 21 தொல்லியல் அகழாய்வுகள் நடந்த முக்கிய இடங்களின் பிரமாண்ட வரைபடம் (மேப்) வைக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் இருந்த நாகரிகம், வைகை ஆற்றங்கரையின் இடம் பெற்ற தொல்லியல் மேடுகளின் சிறப்புகள் புகைப்படமாகவும், வீடியோ காட்சிகளாகவும் இடம் பெற்றுள்ளன.

நிலமும் நீரும்

நிலமும் நீரும் அறைக்குள் நுழைவதற்கு முன் கீழடியின் சிறப்பை 15 நிமிட வீடியோ நமக்கு விவரிக்கிறது. இதை பார்த்ததும் ஒட்டுமொத்த கீழடியும் மனதில் பதிந்துவிடுகிறது. இதை கடந்து சென்றால் தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு காளை சிலை, ஆக்ரோஷமாக திமிலை துாக்கி துள்ளிக்கொண்டு சீறும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் கிடைத்த திமில் உள்ள காளையின் எலும்புக்கூடு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலம்சார்ந்த தொல்லியல் பொருட்களின் எச்சங்களின் ஆய்வு முடிவுகளும் இடம் பெற்றுள்ளன. நிலங்கள் வகைகள், கால்நடை வளர்ப்பு, வேளாண்மை, நீர் மேலாண்மை, தொழில்நுட்பம் என சிந்துவெளி பண்பாட்டின் தொடர்ச்சிகள் ஆச்சரியம் தருகின்றன.

பிரமாண்டமான உறைகிணறு

சங்க காலத்தில் மக்கள் மண்பாண்டத் தொழிலில் எவ்வளவு திறமையுடன் இருந்தனர் என்பதற்கு அகழாய்வில் கிடைக்கப்பட்ட பொருட்களே சாட்சி. கருப்பு சிவப்பு நிறத்திலும், வெள்ளை பூச்சு பெற்ற பானை ஓடுகளும், கெண்டி மூக்குப் பானைகளும், செவ்வண்ண பூச்சு பெற்ற பானைகளும் இந்த அறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்களின் மண்பாண்ட தொழில் முறை பற்றிய அனிமேஷன் வீடியோவும் இங்கு காட்டப்படுகிறது.

ஆடையும் அணிகலனும்இந்த அறையில் கடப்பாறை, கத்தி, குறுவாள், ஈட்டி உள்ளிட்ட சிறிய வகை ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன. இரும்பை உருக்குவது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள், ஆடைகள், தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வமாய் இருந்துள்ளனர் என்பதை இங்குள்ள பொருள்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. பெண்கள் கூந்தலை அழகுபடுத்த யானை தந்தத்திலான சீப்பை பயன்படுத்தியுள்ளனர். கண்களுக்கு மை பூச மென்மை தன்மை கொண்ட உலோகத்தாலான குச்சியை பயன்படுத்தியுள்ளனர். உடைந்த கண்ணாடி வளையல்களும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. நெசவு செய்ததற்கான சான்றுகளும் கொட்டிக்கிடக்கின்றன.

கடல் வழி வாணிகம்

தமிழர்கள் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருந்தனர். அதை தெரிவிக்கும் வகையில் அன்றைய தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட கப்பல் மாதிரி இடம் பெற்றுள்ளது. செப்பு, வெள்ளிக் காசுகள், அகேட், சூது பவளம், எடைக்கற்கள், சுடுமண் உருவங்கள், காதணி, வட்டச்சில், ஆட்டக்காய், சக்கரம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

வாழ்வும் வளமும்

வணிகம் செய்து பொருட்கள் ஈட்டி பல்வகை கலைகள் மூலம் பொழுதுபோக்கியதற்கான ஆதாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. கல்வி, பொருளாதாரம், உணவு, வாழ்வியல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட 'தமிழி' எனும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும், 1500க்கும் மேற்பட்ட குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் உள்ளன.

இவை அனைத்தும் அந்தகால மக்களின் வாழ்வியலை கண்முன் கொண்டு வருகின்றன. ஒருமுறையாவது இந்த கீழடி 'தாய்மடி'யில் இளைப்பாறி நம் முன்னோர்கள் தொடர்பான தொன்மை தோரணங்களை கண்டு ரசிப்பது அவசியம்.

எப்படி செல்லலாம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டிலிருந்து திருப்புவனம் செல்லும் ரோட்டில் 11 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது.

பார்வையிடும் நேரம்: திங்கள் - வெள்ளி காலை 10:00 - மாலை 6:00 மணி (செவ்வாய் விடுமுறை)சனி, ஞாயிறு காலை 10:00 - இரவு 7:00 மணி






      Dinamalar
      Follow us