PUBLISHED ON : ஜன 15, 2024

வெஸ்டர்ன், ராக், பாப் என மேற்கத்திய இசை நம்மை ஆக்கிரமித்தாலும்,நாதஸ்வரத்திற்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. நாதஸ்வரத்தை இவர் வாசித்தால் அந்த இடத்தை விட்டு யாரும் செல்ல மாட்டார்கள்.
62 ஆண்டுகளாக நாதஸ்வர இசையால் கேட்போரை கட்டி போட்டு விடுகிறார் சமுத்திரம் 81. இருபதுக்கும் மேற்பட்ட தங்க மெடல்கள், கலை முதுமணி, கலைமாமணி, மத்திய அரசின் புரஸ்கார் விருது உள்ளிட்டவை இவரது திறமையை பறைசாற்றுகின்றன. தினமலர் பொங்கல் மலருக்காக அவருடன் பேசியதிலிருந்து...
திருநெல்வேலியில் வசிக்கிறேன். தென்காசி மாவட்டம் கீழ சுரண்டை தான் என் சொந்த ஊர். தாத்தா சுப்பையா நாதஸ்வர கலைஞர். அப்பா சடையாண்டி சொந்தமாக தொழில் செய்ய துவங்கி விட்டார். அம்மா கோமதி. என்னையும் சேர்த்து குடும்பத்தில் ஆறு குழந்தைகள்.
சிறு வயதிலேயே தாத்தா நாதஸ்வரம் வாசிப்பதை கேட்டு எனக்கும் ஆசை. ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். பிறகு தாத்தாவுடன் நாதஸ்வர கச்சேரிகளுக்கு சென்று விடுவேன். முறைப்படி நாதஸ்வர கலையை தலைமுறையாக தொடர வேண்டும் என கருதி நான் பயில ஏற்பாடு செய்தனர். 19 வயதில் வாசிக்க துவங்கிய நான் இதுவரை வாசித்து கொண்டுதான்
இருக்கிறேன்.
தென் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் என் நாதஸ்வர இசை இல்லாமல் இருக்காது. மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக நையாண்டி மேளமும் கற்று தனியாக ஒரு குழுவையும் துவங்கினேன்.
2009 முதல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் ஓய்வூதியம் வழங்கி
வருகின்றனர். 2023 பிப்., 23ல் ஜனாதிபதி முர்மு கையால் புரஸ்கார் விருது பெற்றதை மறக்க முடியாது. இயல் இசை நாடக மன்றத்தில் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பதவி வகித்துள்ளேன். என்னிடம் நாதஸ்வர கலையை கற்ற பல மாணவர்கள் இன்று சிறப்பான நிலையில் உள்ளனர்.
சினிமா, 'டிவி', சமூக ஊடகங்கள் என பொழுதுபோக்கு அம்சங்கள் வளர்ந்து கொண்டே சென்றாலும் இன்றளவும் கிராமிய கலைகளுக்கு முக்கியத்துவம் இருக்கத்தான்
செய்கிறது. விழாக்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால்
கலைஞர்களின் நிலை தான் படுமோசமாக இருக்கிறது.
இதனால் கிராமிய கலைஞர்களுக்காக நல வாரியம் துவக்க வேண்டும் என நானே முன்னின்று பல்வேறு இயக்கங்களை நடத்தி தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தேன்.
நல வாரியம் துவங்கப்பட்டதால் கிராமிய கலைஞர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப நிதி, விபத்து
நிவாரணம் கிடைக்கின்றன. கிராமிய கலைகளை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசு விழாக்களில் அவற்றை கட்டாயம் இடம் பெற செய்ய வேண்டும்.
பாடப்புத்தகங்களில் கிராமிய கலைகளை இடம் பெற செய்ய வேண்டும். இருக்கும் வரை நாதஸ்வரம் இசைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை என்றார்.
இசை கேட்க 97881 23738.