PUBLISHED ON : ஆக 13, 2010

- பூரணி
தொடர் -1
டியர் செல்லூஸ்...
இந்த அறிவியல் தொடர் உங்கள் மனதை நிச்சயமாகவே கொள்ளை கொள்ளும். ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் எப்போது வரும் என்று ஏங்குவீங்க தெரியுமா? சரி... கைலாஷ்ஷின் ரோபோ உங்களை எல்லாம் சந்திக்க ஆவலாக இருக்கு! பை குட்டீஸ்!
–பொறுப்பாசிரியர்.
''செர்ரி பழத்துக்கு பழைய ரோபோ வாங்குறது. இரண்டு பழைய ரோபோ கொடுத்தால் ஒரு புதிய மினி ரோபோ இலவசம்,'' என்று விளம்பரப்படுத்தியபடி ஒரு மினி வேன் வந்து கொண்டிருந்தது. சர் ஐசக் நியூட்டன் தெருவில் இருந்த பத்து வயதுச் சிறுவன் கைலாஷ், தன்னிடம் இருந்த பழுதுபட்டிருந்த ஒரு ரோபோவை இழுத்துக் கொண்டு வந்தான்.
மினி வேன் கிட்டே வரவும், கைலாஷிடம் இருந்து தன்னை பலவந்தமாக விடுவித்துக் கொண்ட ரோபோ, ''ஏண்டா என்னை செர்ரி பழத்துக்கா போடப் போறே? அதுக்கு வேற ரோபோவைப் பாரு,''ன்னு உரக்க கூறியபடி அவன் கையை உதறிவிட்டு வேகமாக அவன் வீட்டுக்கு ஓடியது.
''ஓ ஷிட்!'' அவன் அதிர்ச்சியுடன் திரும்பவும், வேன் டிரைவர் அவனை அழைத்தார்.
''ஏன் தம்பி... உன் ரோபோ இவ்வளவு பாசமா பழகுதே. அதை ஏன் தூக்கி போடுற?'' என்று கேட்டார்.
''பின்ன என்னங்க... அஞ்சு நிமிஷத்துல செய்ய வேண்டிய வேலைய அரைமணி நேரமா செய்யுது. அத வெச்சு இனிமே சமாளிக்க முடியாதுங்க,'' என்றான் கைலாஷ்.
''தம்பி! அதுக்கு இன்னும் மூளை பழுது படலே. ஆனா சக்தி மட்டும் தேவைப்படுது. உடனே புது சக்தி வாங்கியை மாற்றிப்போடு. அப்புறம் பாரு அதன் வேலையை,'' என்று உற்சாகப்படுத்தினார் வேன் டிரைவர்.
அவ்வளவுதான், கைலாஷ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து டிரைவரிடம் கொடுக்க, அவர் சக்தி வாங்கியை அவனிடம் கொடுத்துவிட்டு வேனை ஓட்டிச் சென்றார்.
''சரி! இந்த வாட்டி நீ தப்பிச்சிட்ட. எதுக்கும் இந்த முயற்சியை பார்க்கலாம். அதுக்கும் சரியா வராட்டி...'' அவன் முனகியபடி ரோபோவை தன் இடுப்பில் வைத்து தூக்கிக் கொண்டு அருகில் இருந்த சோலார் வங்கிக்கு சென்றான். ரோபோவின் பழைய சக்தி வாங்கியை தூர எறிந்து புது சக்தி வாங்கியை பொருத்தினான். தேவையான அளவுக்கு சக்தியை நிரப்பினான். அவ்வளவுதான்... ரோபோ புத்துணர்ச்சியுடன் பெரும் உற்சாகம் அடைந்தது. துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியை காட்டி, ''நீ என் பட்டு செல்லம். அன்பு செல்லமுடா'', என்று அவனை கொஞ்சி இறுக்கக் கட்டி முத்தம் கொடுத்தது.
சற்று நேரத்தில் தலைநகர் டில்லி அல்லோகலப்பட்டது. சர் ஐசக் நியூட்டன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், பாதியில் விளையாட்டை முடித்துவிட்டு அவசரம் அவசரமாக அவரவர் வீட்டுக்கு ஓடிச் சென்றனர். அலுவலகம் சென்றவர்கள் எல்லாம் வேகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கி.பி., 3003. அன்று புது வருடப் பிறப்பு கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்பட்ட அந்த வேளையில் மக்களின் பரபரப்புக்கு காரணம் மெல்ல விளங்க ஆரம்பித்தது. மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவையே ஆட்டம் காண வைத்தது ஒரு கூட்டம். உலகில் இருந்த பாதி மக்கள் போதை மருந்துக்கு அடிமையானார்கள். எந்த சக்தி வாய்ந்த வல்லரசுகளாலும் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்குக் காரணம், போதை மருந்தை உற்பத்தி செய்து, அதை பாங்காக வினியோகித்து, உலகில் மக்களிடம் தங்களுக்கென்றே ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை நிறுவி வல்லரசுகளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது அந்த கூட்டம்.
அந்த நாசக்கார கூட்டத்தை கண்டுபிடித்து அழிக்க உலக நாடுகள் ஒரு பொது அமைப்பையே உருவாக்கி இருந்தன. அதற்கு அமெரிக்கா தலைமை வகித்தது. அதன்படி போதை சாம்ராஜ்ஜியத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டும். அங்குள்ளவர்களை கைது செய்து உலக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மதி மயக்கும் போதைக்கு அடிமைகளாகி அவலமாக நிற்கும் கோடான கோடி உலக மக்களை காப்பாற்ற வேண்டும் என்று அவர்கள் உறுதியாக முடிவெடுத்திருந்தனர்.
அந்த வகையில், ஆசியாவின் மிகப்பெரும் வல்லரசான இந்தியாவுக்கு சில கடமைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்தியாவும் வானில் விண் கோபுரங்கள் அமைத்தன.
போதை சாம்ராஜ்ஜியத்தின் செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் பொறுப்புடன் அவைகள் செயல்பட ஆயத்தமாகும் தறுவாயில் இருந்த போதுதான் இன்றைய ஆரவாரத்திற்கும் மக்களின் பதட்டத்திற்குமான காரணங்கள் விளங்க ஆரம்பித்தன. அவரவர்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து, வைத்த விழி விலகாமல் பார்த்தபடி இருந்தனர். அமெரிக்க அதிபர் அதில் தோன்றி பேசினார்.
''என் அருமை உலக மக்களே... இன்று நாம் ஒரு சரித்திரம் படைக்க இருக்கிறோம். நம்மில் பலர் இன்னும் மனிதர்களாகவே இல்லை. போதை மயக்கத்தில் சிக்குண்டு தங்கள் உடலையும், உயிரையும் காரணம் இல்லாமல் தேவையற்ற பொய்யான இன்பத்திற்கு அர்ப்பணித்து வீணடித்துக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக அமெரிக்கா அக்கிரமக்காரர்களின் ஆணிவேரையே அசைக்க இருக்கிறது.
ஆம்! நாம் தயாரித்து இருக்கும் அதிநவீன வேவுகணை இன்னும் முப்பது கண் சிமிட்டும் நாழிகையில் வானில் பறக்க இருக்கிறது. அது துல்லியமாக செயல்பட்டு போதை மருந்தை உற்பத்தி செய்யும் நாசகார கும்பல் தங்களுக்கென்று அமைத்திருக்கும் செயற்கை சாம்ராஜ்ஜியத்தை தகர்த்து மக்களை விடுவிக்கும். அதன் செயல்பாடுகளை கண்காணிக்கும் பொறுப்பு ஆசியாவின் அறிவியல் வல்லரசு இந்தியாவின் வசம் விடப்படுகிறது. இது முதல் போதை மருந்துக்கு விடை சொல்வோம். மனிதனாய் வாழ வழி செய்வோம்!''
அமெரிக்க அதிபர் உணர்ச்சி பொங்க பேசி முடித்தார். அனைத்து நாட்டு அதிபர்களும் தங்களின் தயார் நிலையை தெரியப்படுத்தினர். இந்தியா வான் கோபுரங்களுக்கு செய்தி அனுப்பி தயார் நிலையில் இருந்தது.
இப்போது கவுண்ட் அப் ஓடிக் கொண்டிருந்தது. ஒன்று... இரண்டு... தொலைக்காட்சியில் அதைப் பார்த்த மக்கள் தங்கள் இருக்கையின் நுனிக்கே வந்து, உணர்ச்சிமயமாய் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். சரியா முப்பது என்று சிவப்பு விளக்கு எரிந்ததும் விண்ணில் சீறிப் பாய்ந்தது அமெரிக்காவின் வேவுகணை. போதைக்கு அடிமையாகாத மக்கள் கைகளை தட்டி ஆர்ப்பரித்தனர்.
ஒவ்வொரு நாட்டு அதிபரும் அமெரிக்க அதிபருக்கு தங்கள் பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். அப்போது வானில் மிகப்பெரிய இடி ஓசை கேட்டது. அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்கினர். அமெரிக்காவின் அதி நவீன வேவுகணை வானில் வெடித்து சிதறி பாகங்கள் கடலுக்குள் விழக் கண்டனர். அமெரிக்க அதிபர் பெரும் அதிர்ச்சியுற்றார். மற்ற தலைவர்களும் கலங்கினர். 'ச்சீ... இந்த முறையும் தோல்விதானா?' என்று மக்கள் பேசிக் கொள்ள, 'கடவுளே, வந்தாலும் எங்கள் போதை சாம்ராஜ்ஜியத்தை அசைக்க முடியாது!' என்று ஆனந்தம் பொங்க கூறியபடி போதை அடிமைகள் ஆனந்த கூத்தாடினர்.
அப்போது சிறுவன் கைலாஷ் யோசித்தபடி வீட்டின் வாயிலுக்கு வந்தான். எதையோ சிந்தித்தபடி வானத்தை அன்னாந்து நோக்கினான். அப்போது வானில் திரண்டிருந்த கரு மேகங்களை விலக்கிக் கொண்டு மின் மினித்தபடி ஒரு பச்சை நிற நட்சத்திரம் நகர்ந்து கொண்டிருந்தது.
( — தொடரும்)
