PUBLISHED ON : ஆக 13, 2010

அனைவருக்கும் எனது அன்பு.
ஒரு வரி; ஒரே வரி!
பொய் பேசுபவனுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை - அவன் உண்மை பேசும்போது யாரும் நம்புவதில்லை.
கலாம் காலம்!
ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகளை நல்ல ஆசிரியர்கள் கற்று தந்தாலே மாணவர்களுக்கு நல்ல குணங்கள் வந்துவிடும்.
ரத்தத்தின் ரத்தமே!
மனித உடலுக்குள் ரத்தம் தேங்கி நிற்கவில்லை. அது ஓயாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது என்கிற உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் டாக்டர் வில்லியம் ஹார்லி. ரத்த ஓட்டம் உடலுக்குள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தும், மற்றும் உள்உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்தும் தெளிவாக விளக்கங்கள் கூறி ஆதார பூர்வமாக நிரூபித்து காண்பித்தார்.
மாணவர்களுக்கு லாப்-டாப்!
மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் வெறும் 1500 ரூபாயில் லேப்டாப் கம்ப்யூட்டரை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அடுத்தாண்டு முதல் இது விற்பனைக்கு வரும். இதுபோன்ற மலிவு விலை லேப்டாப்பை வடிவமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தபோது, தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.
பெரிய தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இவற்றை தயாரிக்கும்போது, விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த லேப்டாப்பில் டச் ஸ்கிரீன், கீ போர்டு, 2 ஜி.பி., ராம் மெமரி, வை-பி இணைப்பு வசதி யூ.எஸ்.பி., போர்ட் ஆகியவை இருக்கும். அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு இவை விநியோகம் செய்யப்படும்.
ஆரம்பத்தில் 500 ரூபாயில் லேப்டாப் கம்ப்யூட்டரை தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது 1500 ஆகிவிட்டது. விரைவில் விலை 1000 ஆக குறைந்து, 500-க்கு விற்பனை செய்ய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
பள்ளி சுவரும் பாடம் சொல்லும்
அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் இடைநிலை கல்வி என்று குழந்தைகள் அனைவரையும் கல்வி கற்க வைப்பதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தற்போது செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை நடைபெறும் வகுப்பறைகளில் சூழலை மாற்றும் வகையில், 'கட்டடத்தை பார்த்து கற்று கொள்ளுங்கள்' என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் சுவர்களும் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம். இதன்மூலம் வகுப்பறை கதவை திறந்தவுடன் அதன் கீழ்பகுதியில் கோண அளவீடுகள் வரையப்பட்டிருக்கும். கதவு இத்தனை டிகிரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதை மாணவர்களால் அறிய முடியும். வகுப்பறை சுவர்களில் தமிழகம், இந்தியா மற்றும் உலக வரைபடங்கள் வரைதல், காலண்டர்கள் எழுத செய்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படும்.
தரை பகுதிகளில் கணித கற்றல் வடிவங்கள் ஏற்படுத்தப்படும். இதுபோன்ற பல்வேறு கற்றல் செயல்பாடுகள், கட்டடங்களையும் அது சார்ந்த பகுதிகளையும் மையப்படுத்தி இருக்கும். இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகளில் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
குமரி மாவட்டத்தில் பொற்றையடி அரசு நடுநிலைப்பள்ளி, மத்திக்கோடு அரசு தொடக்க பள்ளி, கேசவபுரம், ஆலன் கோட்டை, ஆண்டுகோடு அரசு நடுநிலைப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது என்று கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
செல்போன்!
செல்போன் இணைப்பில் அதன் எண்ணிக்கையில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் நாட்டின் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 52 கோடியாக இருந்தது. அதாவது சராசரியாக 10-ல் 4.5 பேரிடம் (45 சதவீதம்) செல்போன் இருந்தது.
கடந்த மே மாதத்தில் 61.8 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வேகத்தின் அடிப்படையில் பார்த்தால் இந்த ஆண்டு இறுதியில் 66 கோடியாக உயரும். 2014-ம் ஆண்டில் 99.3 கோடியாக உயரும். அதாவது அப்போது 10-ல் 8 பேரிடம் (80 சதவீதம்) செல்போன் இருக்கும்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது சத்துமிக்க உணவான 'புரோட்டீன் சுண்டல்' செய்முறை நேரம்.
தேவையானவை:
பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, வேர்க்கடலை (இவை நான்கும் முளைகட்டியது) தலா ஒரு கப், கேரட், தேங்காய் துருவல் - தலா ஒரு கப், நறுக்கிய வெள்ளரி - ஒரு கப், தனியா, கடலைப்பருப்பு, எண்ணெய் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
முளைகட்டிய நான்கு பயிற்களையும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு துருவிய தேங்காய், கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுத்து, ஆறியதும் மிக்சியில் பொடிக்கவும். வேக வைத்தவற்றை தண்ணீர் வடித்து, மிக்சியில் பொடித்ததை போட்டு, கேரட் துருவல், வெள்ளரித் துண்டுகள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்கி கொடுக்கவும். இது புரோட்டின் சத்து நிறைத்தது. கேரட், வெள்ளரி சேர்த்து சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.
இப்படிக்கு அங்குராசு.
