PUBLISHED ON : பிப் 26, 2016

ஈரான் தேசத்தில் கேசப்ரட் என்ற நதியின் மீது, 'டஸ் நகரத்துப் பாலம்' எழுப்பபட்டுள்ளது. இதைக் கட்டியவர் ஒரு கவிஞர்.
என்னது கவிஞர் கட்டினாரா என வியப்பாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை.
அந்த கவிஞர் பெயர், 'பிர்தவுஸி.' 60 ஆயிரம் பாடல்களைக் கொண்டு, 'ஷாநாமா' என்ற காவியத்தை இயற்றியவர்.
கி.பி.932லிருந்து 1020 வரை வாழ்ந்தவர் கவிஞர் பிர்தவுஸி. ஈரானின் ஹோமர் என்று புகழப்படுபவர். இக்கவிஞரை ஆதரித்த மன்னர் சுல்தான் முகமது கஸின், அவர் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொற்காசு அளிக்கும்படி தன் கஜானா அதிகாரிக்கு ஆணையிட்டார் சுல்தான். பிர்தவுஸி தன் மகத்தான படைப்பை முடிக்க 35 ஆண்டு களாயிற்று.
சுல்தானின் ஆணைப்படி, அவர் இயற்றிய 60 ஆயிரம் பாடல்களைக் கொண்ட காவியத்துக்கு அன்பளிப்பாக 60 ஆயிரம் வெள்ளிக்காசுகளைச் சுமந்து வந்து நின்றது ஒரு யானை. ஆனால், வாக்களித்ததோ பொற்காசுகள். தரப்பட்டதோ வெள்ளிக்காசுகள்.
கோபம் கொண்ட பிர்தவுஸி, 60 ஆயிரம் வெள்ளிக்காசுகளை 3 பங்காக்கினார். ஒரு பங்கை, அதைக் கொண்டு வந்த யானைப் பாகனுக்கு இனாமாக வழங்கினார். இரண்டாவதை தன் ஒரு குளியலுக்கான கூலியாக வழங்கினார். மூன்றாவதை ஒரு கோப்பை பீர் பானத்துக்கு விலையாகக் கொடுத்தார்.
20 ஆயிரம் வெள்ளிக்காசுகளின் இன்றைய மதிப்பு என்ன தெரியுமா? 2 மில்லியன் டாலர்கள்! சரித்திரத்திலேயே மிக, மிக, விலையுயர்ந்த பீர் பானம் பிர்தவுஸி பருகியதாகத் தானிருக்கும்.
பிறகு, தன் தவறை உணர்ந்து மனம் வருந்திய சுல்தான், பொற்காசுகளை ஒட்டகங் களின் மீது ஏற்றி அனுப்பி வைத்தார். ஆனால், காலங்கடந்த மனமாற்றமாகி விட்டது அது. சுல்தான் அனுப்பிய ஒட்டக வரிசை மகாகவி பிர்தவுசியின் சவ ஊர்வலத்தைத்தான் சந்தித் தது. அதைப், பெற்றுக்கொண்ட அவரின் மனைவி, நகர அதிகாரிகளிடம் அதைச் சேர்ப்பித்து அதைக் கொண்டு கேப்ரட் நதி யின் மீது ஒரு பாலம் கட்டும்படி கேட்டுக் கொண்டாள். பிர்தவுஸி வாழ்ந்த டஸ் நகரம் மறைந்து போயிற்று. ஆனால், அவர் பாடலால் எழுந்த பாலம் இன்றும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கூட நிலைத்திருக்கிறது.
