PUBLISHED ON : டிச 04, 2021

திருடனை துரத்தியபடி ஓடினார் போலீஸ்காரர் மாரிமுத்து; தலையிலிருந்த தொப்பி தவறி விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் ஓடி, திருடனைப் பிடித்தார்.
''ஐயா... உங்க தொப்பி, பக்கத்து தெருவில் விழுந்து விட்டது... என்னை அனுமதித்தால் எடுத்து வருகிறேன்; எடுத்து வரும் வரை இங்கேயே அமருங்கள்...'' என, கூறினான் திருடன்.
''சரி... எடுத்து வா... அதுவரை, இங்கேயே இருக்கிறேன்...'' என்றார், போலீஸ்காரர்.
போனவன் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
மறுநாள் -
அதே திருடன், போலீஸ்காரர் கண்ணில் பட்டு விட்டான்; விடுவாரா... கோபத்துடன் அவனை துரத்தினார்.
இப்போதும், அவர் தொப்பி வழியில் விழுந்தது.
பிடிப்பட்ட திருடன், வழக்கம் போல், ''ஐயா... அனுமதி தாருங்கள்; உங்கள் தொப்பியை, இம்முறை, கண்டிப்பாக எடுத்து வருகிறேன்; ஏமாற்ற மாட்டேன்...'' என்று, பணிவாக கூறினான்.
''டேய்... திருட்டுப் பயலே, ஏமாற்ற பார்க்கிறாய்... அது மட்டும் நடக்காது; சென்ற முறை உன்னை தொப்பி எடுக்க அனுப்பிய போது, அப்படியே ஓடி விட்டாய்... இம்முறை, நீ இங்கேயே இரு... தொப்பியை நான் எடுத்து வருகிறேன்...'' என்று, புறப்பட்டார் போலீஸ்காரர்.
அவர் தலை மறைந்ததும், திருடன் ஓட்டமாக ஓடி மறைந்தான்.
குழந்தைகளே... பலத்துடன் இருந்தால் மட்டும் போதாது; அறிவுடன் செயல்பட வேண்டும்.
