தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புல் கட்டும் கழுதை குட்டியும்!

புல் கட்டும் கழுதை குட்டியும்!

புல் கட்டும் கழுதை குட்டியும்!


PUBLISHED ON : மே 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடுகப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தான் சரண்; கழுதைகள் வளர்க்கும் தொழில் செய்தான். அவனுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. பல இடங்களில் மருத்துவம் செய்தும் பலனில்லை. குழந்தைக்காக ஏங்கினாள்.

ஒரு நாள் -

கழுதைகளை மேய்க்க சென்ற சரண், ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான். அந்த பகுதி டுடோரியல் வாத்தியாரும் அங்கு அமர்ந்திருந்தார். அவரை தேடிவந்த ஒருவர், 'ஐயா... என் மகன் சரிவர படிப்பதில்லை; நீங்கள் கற்று தருவதை எல்லாம் புரியவில்லை என்கிறானே...' என்று கேட்டார்.

சற்று யோசனையுடன், 'என்னை குறை சொல்லாதீங்க ஐயா; கழுதையைக் கூட, என்னால் மனுஷனாக்கி, பாடம் கற்பித்து விடமுடியும்; ஆனால் உங்க மகன் மிகவும் சோம்பேரியாக இருக்கிறான்; எதையும் கற்க மறுக்கிறான்...' என்றார் வாத்தியார்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்தான் சரண். அவன் மூளை சுறுசுறுப்படைந்து, 'கழுதைக்கு கூட கற்றுத் தந்து, மனுஷனாக்கி விடுவேன் என்கிறாரே வாத்தியார்... நம் கழுதையில், ஒன்றை கொடுத்து மனுஷனாக்க வேண்டலாம்' என எண்ணியபடி நடந்தான். மனைவியிடம் விபரத்தை கூறினான்.

அவள் மிகவும் மகிழ்ந்து, 'கொஞ்சம் பெரிய கழுதை குட்டியான கோவிந்தாவை அழைத்து செல்லுங்கள்; அது மனுஷனாக மாறினால், நன்றாக படிக்கும்; வளர்க்கவும் சிரமம் இருக்காது...' என்றாள்.

அதன்படி, கழுதை குட்டி கோவிந்தாவை இழுத்து சென்றான் சரண். அதை, மனுஷனாக மாற்றி, கல்வி கற்பிக்கும்படி வேண்டினான். வாத்தியாருக்கு எதுவும் புரியவில்லை.

'என்ன... கழுதைய, மனுஷனா மாத்தணுமா... என்னால் முடியாது...' என்று புரிய வைக்க முயன்றார்.

எதையும் ஏற்க மறுத்து, 'மரத்தடியில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன்; அதனால் தான், கழுதையை இழுத்துட்டு வந்தேன்... தயவு செய்து மறுக்காதீங்க...' என்று கெஞ்சினான்.

'இவன் எதையும் புரிஞ்சுக்காத முட்டாள்; எதையாவது சொல்லி, சமாளிக்கலாம்' என முடிவு செய்தார் வாத்தியார்.

அதை செயல்படுத்தும் விதமாக, 'இதோ பார்... கழுதைய, மனுஷனாக்குறது ரொம்ப சிரமம்...' என்றார்.

'ஐயா... எவ்வளவு வேணுமானாலும் தர்றேன்...' என்றான் சரண்.

சிறிது பணம் வாங்கிய வாத்தியார், 'மூன்று மாதத்திற்குப் பின் வா; அதற்குள், கழுதையை, மனுஷனாக்கி பாடம் கற்பித்து விடுகிறேன்...' என்றார்.

மூன்று மாதம் கடந்தது.

ஒரு புல் கட்டுடன் வாத்தியாரை சந்தித்து, 'எங்கே என் கழுதை...' என்றான் சரண்.

'உன் கழுதை பெரிய மனுஷனாகிவிட்டது; என்னால் கட்டுப்படுத்தி சமாளிக்க முடியவில்லை; வழக்கு மன்றத்துக்கு அனுப்பி இருக்கிறேன்...' என்றார் வாத்தியார்.

வழக்கு மன்றத்துக்கு சென்றான் சரண். அங்கு கழுதையை காணவில்லை. கொண்டு வந்திருந்த புல்கட்டை, வழக்கு மன்ற நடுவர் முன் வைத்தான். நடுவருக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் செயலை விநோதமாக பார்த்தார்.

சரண் பெருங்குரலில், 'கோவிந்தா... என்னை தெரியலையா... நீ கழுதையாய் இருந்தப்ப, நான் தானே வளர்த்தேன்... பயப்படாம வந்து புல்லை தின்னு...' என்று கத்தினான்.

கடும் கோபமடைந்த நடுவர், 'யாருப்பா இவன்... முதலில் விரட்டியடி...' என்று உத்தரவு பிறப்பித்தார். அடி வாங்கி ஓடிய சரண், வாத்தியாரிடம் வந்து, 'கோவிந்தாவை, மீண்டும் கழுதையாகவே ஆக்கிடுங்க... மனுஷனான பின் என்னை மதிக்க மாட்டேங்குறான்...' என்று வேதனையுடன் கூறினான்.

புலம்பி நின்றவனிடம் ஆறுதல் கூறி, மூன்று நாட்களுக்குப் பின், வீட்டின் பின்புறம் கட்டியிருந்த கழுதையை கொடுத்தார் வாத்தியார்.

குழந்தைகளே... சிந்திக்கும் ஆற்றல் இல்லா விட்டால், சரண் போல் ஏமாற வேண்டியது தான். கவனமாக சிந்திக்க கற்றுக் கொள்ளுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us