PUBLISHED ON : நவ 18, 2023

மதுரை மாவட்டம், தேனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1979ல், 7ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!
மதுரை, தங்கம் தியேட்டரில், 'அதிசய மிருகங்களும், அற்புத பறவைகளும்' என்ற சினிமா திரையிடப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் நல்லமுத்து, அதை பார்க்கும் வகையில் மாணவர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி, சினிமா பார்த்து வந்தேன்.
மறுநாள், 'நேற்று பார்த்த படத்தில் இருந்த வன விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்து கற்ற தகவல்களை சொல்லுங்கள்...' என கேட்டார் வகுப்பாசிரியர் அங்கமுத்து. சட்டென எழுந்து, 'ஐயா... காட்டில் வாழும் விலங்கு, பறவைகளை, எப்படி சினிமா தியேட்டருக்குள் அழைத்து வந்தனர்...' என, துடுக்குத்தனமாக கேட்டேன்.
புன்னகைத்தபடி, 'தியேட்டரில் பார்த்தவை எல்லாம் நிஜ விலங்குகளோ, பறவைகளோ இல்லை. அது, ஒரு ஒளிப்படம்; அதாவது, ஒளிப்பதிவு கருவி மூலம், விலங்கு, பறவைகளின் நடத்தையை படம் பிடித்து, படம் காட்டும் கருவியால் வெண்திரையில் காட்டுகின்றனர்...' என்று தெளிவு ஏற்படுத்தினார். என் அறியாமையை அகற்றி, அறிவுக் கண்களை திறந்து வைத்தார்.
தற்போது என் வயது, 57; தனியார் கல்லுாரி ஒன்றில் பணிபுரிகிறேன். மதுரையில் அந்த தியேட்டர் இடிக்கப்பட்டு, மிகப் பெரிய ஜவுளிக்கடை வளாகமாக மாறி உள்ளது. அந்த பகுதியில் சாலையை கடக்கும் போதெல்லாம் வகுப்பறையில் நடந்த நிகழ்வு நினைவில் வந்து மகிழ்ச்சி தருகிறது!
- எஸ்.பாபு, மதுரை.
தொடர்புக்கு: 98657 79066
