PUBLISHED ON : நவ 18, 2023

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நுாற்றாண்டு புகழ்பெற்ற பின்லே உயர்நிலைப் பள்ளியில், 1949ல், செகண்ட் பாரம் என்ற, 7ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியராக இருந்த சீனிவாச ஐயர் எந்த பாடத்தையும், பரிசோதனை வாயிலாகவே கற்பிப்பார்.
தெளிந்த சுண்ணாம்பு நீரில், கரியமில வாயு செலுத்தினால், பால் போல் வெண்மையாகும். அந்த பரிசோதனையை அன்று நிகழ்த்தினார். அப்போது, ஊதுகுழலில் வாயால் காற்றை செலுத்துவதற்கு பதிலாக உறிஞ்சி விட்டார். சுண்ணாம்பு கரைசல் தொண்டைக்குள் புகுந்து புரையேறியது. கண், மூக்கில் நீர் கசிந்தது.
அவர் அனுபவித்த வேதனையை பரிதாபத்தோடு பார்த்தோம். மறுகணமே இயல்பு நிலைக்கு வந்தவர் காற்றை ஊதி, பரிசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தினார். தெளிவாக அந்த பயிற்சியை பெற்றதுடன், விடா முயற்சி என்ற பண்பையும் கற்றோம்.
எனக்கு, 84 வயதாகிறது; நுாற்றாண்டு கண்ட தஞ்சை கல்யாண சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றியபோது, நல்லாசிரியர் விருது பெற்றேன். தலைமையாசிரியராக பணி உயர்ந்து ஓய்வு பெற்றேன். முயற்சி மிக்க அந்த ஆசிரியரிடம் கற்ற நாட்களை பொற்காலமாக கருதுகிறேன்.
- டி.வி.ராமமூர்த்தி, சென்னை.
தொடர்புக்கு: 94448 00384
