
தாமரையில் வெண்மை, சிவப்பு நிறங்களில் பூக்கும் தாவரங்களை அறிவோம். இவை தவிர ஆகாயத்தாமரை என்ற தாவரம் உள்ளது. இது, கால்வாய், குளம் போன்ற நீர்நிலைகளில் வளரும். இதன் இலை, சுருண்ட நிலையில் ஆகாயத்தை பார்த்தபடி இருக்கும். வேர், பூமிக்குள் படராமல் தண்ணீரில் மூழ்கி இருக்கும்.
கல் தாமரை என்ற தாவரம் மருத்துவ குணம் நிறைந்தது. இது தண்ணீரில் வளர்வதில்லை. பாறை வெடிப்புகளில் படர்ந்திருக்கும். பூவை காண முடியாது; இலை மருத்துவத்தில் பயன்படும். இது தாமிரச்சத்து நிறைந்தது. இரும்பு ஊசியை, கல் தாமரை இலையில் செருகி வைத்தால், இரண்டு நாட்களுக்கு பின், ஊசியின் மேற்பரப்பில் தாமிரம் படர்ந்திருக்கும்.
சித்த மருத்துவத்தில் கல் தாமரை இலையை சாம்பலாக்கி, தாமிரச்சத்து பிரித்து எடுத்து பயன்படுத்தப்படுகிறது. இதன் இலையை வெயிலில் உலர்த்தி பல நாட்களுக்கு பின், தண்ணீர் தெளித்தாலும் சில நிமிடங்களில் அன்று பறித்தது போல பச்சை நிறத்தில் மாறிவிடும்.
நீரில் வளரும் வெண்மை மற்றும் செந்தாமரையில், 20 சதவீதம், கல் தாமரையில், 50 சதவீதம், ஆகாய தாமரையில், 15 சதவீதம் அளவில் தாமிரச்சத்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மருந்துகள் தயாரிக்க இவை பயன்படுகின்றன.
தமிழகத்தில் ஓரிதழ் தாமரை என்ற தாவரமும் உண்டு. மழை, பனி காலத்தில் வயல் வரப்பு, சதுப்பு நிலப்பகுதியில் செழித்து வளரும். இலை நீண்டு கூர்மையாக இருக்கும். இலையும், தண்டும் இணையும் பகுதியில் அழகிய வண்ணத்தில் பூ மலர்ந்திருக்கும். சிறிய அவரை விதை அளவில் ஒரே இதழுடன், பூமியை வணங்குவது போல் பூ தொங்கியிருக்கும்.
இதில், ஊதா நிறத்தில் பூக்கும் தாவரமே, நம் நாட்டில் அதிகம் காணப்படுகிறது. வெண்மை, பச்சை, மஞ்சள், சிவப்பு, நீல வண்ணங்களில் பூப்பவையும் உள்ளன. மண்ணில் உள்ள சத்துகளுக்கு ஏற்ப, பூ வண்ணம் மாறுதலுடன் இருப்பதாக தாவரவியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
வெள்ளை, பச்சை நிறத்தில் பூக்கும் தாவரங்கள் ஆஸ்திரேலியா கண்ட பகுதியில் அதிகம். மருந்துகள் தயாரிக்க இவற்றை பயன்படுத்துகின்றனர்.
உயிர் காக்கும் மருத்துவ குணங்களை கொண்டுள்ள தாவரங்களை அறிந்து அவற்றை பாதுகாப்போம்.
- எம்.அசோக் ராஜா