
'அம்மா... பள்ளிக்கூடம் திறக்க போறாங்களாமே... சுதந்திரம் பறி போக போகுது...'
பதற்றத்துடன் கூறியது குட்டி நாய்.
'பள்ளிக்கூடம் திறந்தால், அந்த சுரேசும், மணியும் வருவர்; அவர்களை நினைத்தாலே குலை நடுங்குகிறது. எங்கிருந்து கல்லை எறிந்தாலும் என் மண்டை மீது சரியாக வந்து விழும்; மணிக்கு எங்கிருந்து தான், 'உண்டி வில்' கிடைத்ததோ, எப்போதும் கருங்கல்லை, பையில் வைத்தபடியே அலைகிறான்...'
பயத்தில் நடுங்கியது சிவப்பு நாய்.
பள்ளியின் பரந்த விளையாட்டு திடலில் வருந்தியபடி அவை படுத்திருந்தன.
மறுநாள் -
பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர் மாணவர்கள். அதைக் கண்டதும், எச்சரிக்கையுடன் ஒரு மரத்தின் பின் மறைந்தபடி, தலையை நீட்டி, சுரேசும், மணியும் வருகின்றனரா என பார்த்தது குட்டி நாய்.
'எல்லா மாணவர்களும், முகக்கவசம் போட்டுள்ளனர்; இதில், அந்த இருவரை எப்படி அடையாளம் காண்பது'
சிவப்பு நாய்க்கு, 'திக்' என்றிருந்தது!
அதை கவனித்து, 'சுரேஷ், அதோ பாருடா நம் செல்லத்த... மரத்துக்கு பின்னால ஒளிந்து எட்டி பார்க்குது...' என்றான் மணி.
அடுத்த நொடி ஜல்லிக்கல்லால், குறி பார்த்து வீசினான் சுரேஷ்.
சிவப்பு நாய், உஷாராகி நாலுகால் பாய்ச்சலில் ஓட துவங்கியது.
'எங்ககிட்டேயேவா...' என கத்தியபடி, உண்டி வில்லை குறி பார்த்து இழுத்து விட்டான் மணி. சீறி பாய்ந்தது கூழாங்கல். குறி தவறி மிதிவண்டியில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்த மணியின் தம்பி சங்கர் காலில் அடித்தது.
'ஐயோ...'
அலறியபடி சாய்ந்தான் சங்கர்.
தகவல் அறிந்து ஓடி வந்தார் விளையாட்டு ஆசிரியர். சங்கருக்கு முதலுதவி செய்தார். கூடி நின்றவர்களிடம், 'பெரிய காயம் ஏதும் இல்லை; வகுப்புக்கு செல்லுங்கள்...' என கூறியவர், விசாரித்து உண்மை அறிந்தார்.
பின், 'உங்களிடம் எத்தனை முறை கூறியிருக்கிறேன்; எல்லா உயிரினங்களிடமும் அன்பு காட்டணும்; வலியும், வேதனையும் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானவை; இனியாவது இதை கற்றுக் கொள்ளுங்கள்...' என கூறி, வகுப்புக்கு சென்றார் ஆசிரியர்.
கல் அடிபட்ட இடம் நன்கு வீங்கி இருந்தது; வலி பொறுக்க முடியாமல், அழுது கொண்டிருந்தான் சங்கர். சகோதரன் வேதனை கண்டு, மனம் துடித்தான் மணி.
'எத்தனை முறை அந்த சிவப்பு நாயை இப்படி கல்லால் அடித்திருப்போம்; அது வலியால் கத்தியபடி நடந்து செல்வதை பார்த்து சிரித்து மகிழ்ந்திருந்தோம்... எல்லா உயிரினங்களுக்கும் வலி பொதுவானது தானே...' என வருந்தியபடி கூறினான் சுரேஷ். அனைவரும் புரிந்து கொண்டனர்.
அப்போது மெதுவாக அங்கு வந்த சிவப்பு நாய், சங்கர் கால் அருகே அமைதியாக படுத்தது. அதன் முதுகை தடவியவாறு, 'இனி எந்த உயிரினங்களுக்கும் தீங்கு செய்வதில்லை' என சபதமெடுத்தனர் மாணவர்கள்.
குழந்தைகளே... எல்லா உயிரினங்களிடமும் அன்பு செலுத்துங்கள்!
- மு. நடராசன்