தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புத்திசாலி மனைவி!

புத்திசாலி மனைவி!

புத்திசாலி மனைவி!


PUBLISHED ON : செப் 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீராச்சாமி என்ற ஏழை நெசவாளி இருந்தான்; அவன் மனைவி தனபாக்கியம் மிகுந்த அறிவாளி; அவள் பெருமையை ஊரார் தெரிந்து கொள்ள விரும்பினான். அதற்காக, பெரிய விளம்பர பலகையை உருவாக்கி வீட்டு வாசலில், அமைத்து, 'என் மனைவி தான், உலகிலேயே அறிவிற் சிறந்தவள்; அவள் அறியாததே இல்லை' என்று எழுதி வைத்தான்.

அந்த வழியாக, நகர்வலம் வந்த, அந்த நாட்டு மன்னர் விளம்பரத்தைப் பார்த்தார்; அவருக்கு எரிச்சல் ஏற்பட்டது.

அவைக்குச் சென்றவர், ஏவலர்களிடம், நெசவாளியை அழைத்து வரும்படி உத்தரவிட்டார். வீராச்சாமி வீட்டிற்கு, சேவர்கள் வந்து அவனை அழைத்தனர்.

நடு நடுங்கினான் வீராச்சாமி; அவன் மனைவி தைரியம் கூறினாள்.

''நீங்கள் மன்னரை சென்றுப் பாருங்கள்; மற்றவற்றை, நான் பார்த்துக் கொள்கிறேன்...'' என்றாள்.

வீராச்சாமியை, மன்னர் முன் நிறுத்தினர்.

''உன் வீட்டின் முன் உள்ள, விளம்பரப் பலகையை பார்த்தேன்; உன் மனைவி, அறிவில் சிறந்தவள் தானே! நான், மூன்று சோதனைகள் வைக்கிறேன்; அவற்றில் வெற்றி பெற்றால், உன் மனைவி அறிவாளி என ஒப்புக் கொள்ளலாம்...'' என்றார்.

''சொல்லுங்கள் மன்னா...'' என்று, நடுக்கத்தை மறைத்து கேட்டான், வீராச்சாமி.

''நீ மிகச் சிறந்த நெசவாளி என்பதை அறிவேன்; நம் நாட்டு சாலைகள் முழுவதையும் மூடும் அளவிற்கு, துணி நெய்து தர வேண்டும்; நம் நாட்டு கடலில் உள்ள நீரளவுக்கு, பழச்சாறு தயாரித்து தர வேண்டும்; மூன்றாவதாக, ஒரு பன்றியை மலை போல் பெரிதாக்கி காட்ட வேண்டும்...'' என்றார்.

'திரு திரு' என விழித்தான் வீராச்சாமி.

''என்ன... முழிக்கிறாய்... உன் மனைவி அதிபுத்திசாலி என்று பலகையில் எழுதி வைத்துள்ளாய், அப்புறம் என்ன...'' என்றார் மன்னர்.

''நிச்சயமாக மன்னா...'' என்று கூறி, தப்பித்தோம், பிழைத்தோம் என, வீடு வந்து சேர்ந்தான் வீராச்சாமி.

கணவரின் வெளிறிய முகம் கண்டு, விசாரித்தாள். விவரத்தைக் கூறினான்.

'இவ்வளவுதானா...' என்று, சில யோசனைகளை அவனுக்கு கூறினாள்.

மறுநாள் -

அரசவைக்கு, மனைவி கொடுத்த சில பொருட்களை எடுத்துச் சென்றான்; அவன் கையில், அளக்கும் தடி, ஒரு பாத்திரம், எடை போடும் தராசு ஆகியவை இருந்தன.

''மன்னா... நாட்டில் உள்ள சாலைகளின் நீளத்தை, இந்த அளவுத் தடியால் அளந்து சொல்லுங்கள்; கடல் தண்ணீரை எல்லாம் இந்த பாத்திரத்தால் அளந்து சொல்லுங்கள்; அந்த மலையை இந்த தராசால் எடை போட்டு சொல்லுங்கள்; நீங்கள் சரியான அளவுகளை கொடுத்தால், துல்லியமாக தயாரித்து வருவேன்...'' என்றான்.

மன்னர் விழி பிதுங்கினார். வீராச்சாமியின் மனைவி தனபாக்கியத்தின் வேலை தான் இது என்பதை புரிந்து கொண்டார்.

அவள் புத்திசாலிதான் என்று ஒப்புக் கொண்ட மன்னர்; வீராச்சாமிக்கு ஏராளமான பரிசுகளை கொடுத்து அனுப்பினார்.

குட்டீஸ்... புத்திசாலி மனைவி கிடைத்ததால் வீராசாமிக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீங்களா... நீங்களும் புத்திசாலிகளா இருக்கணும். ஓ.கே.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us