தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மன்னிப்பு கேட்ட அதிபர்!

மன்னிப்பு கேட்ட அதிபர்!

மன்னிப்பு கேட்ட அதிபர்!


PUBLISHED ON : செப் 14, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவன், பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லை; அவன் குடும்பத்திற்கு அரசியல் பின்புலமும் இல்லை; மற்றவர்களைக் கவர்கிற அழகும் அவனுக்கில்லை. ஆனால், அறிவிருந்தது; நினைத்ததைச் செய்து முடிக்கிற துணிச்சல் இருந்தது; அல்லல்படும் மக்களுக்காக உழைக்கிற மனதிருந்தது.

அதனால், தனக்கும், தன் குடும்பத்திற்கும் இல்லாத வற்றை நினைத்து, வருந்திக் கிடப்பதை விட, தன்னிடம் இருக்கும் ஆற்றல்களால் சாதிக்க நினைத்தான்; நினைத்ததை முடிக்க அயராது உழைத்தான்.

வறுமையை எதிர்த்து, எதிர்நீச்சல் போட்டான். கல்லுாரிக்கே அவன் செல்ல முடியாது என்று கேலி பேசியோர் மத்தியில், கல்லுாரியில் படித்து, பட்டம் பெற்றான். அவன் வழக்கறிஞர் ஆக ஆசைப்பட்டதை அறிந்தோர், கை கொட்டி சிரித்தனர்.

ஆனால், வழக்கறிஞராகவும் ஆனான். இப்படி வளர்ந்த அவன், அந்த நாட்டின் அதிபராக ஆசைப்பட்டான். முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவதாக, பேசி சிரித்தனர். இருப்பினும், தேர்தலில் போட்டியிட்டு, அதிபராகி, ஏளனம் செய்தோர், விழிகளை விரியச் செய்தான்.

அவன், அந்த தேசத்தின் அதிபரான போது, உள்நாட்டு போர் சூழ்ந்தது; இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, இரவு பகலாகச் சிந்தித்தான். அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் விவாதித்தான்.

இறுதியில், உள்நாட்டுப் போர் முடியும் வரை, ராணுவ அதிகாரிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் விடுப்புக் கொடுப்பதில்லை என்றும், உள்நாட்டுப் போரை அடக்க, ராணுவத்தை கலவரப் பகுதிகளுக்கு அனுப்புவதென்றும் முடிவு செய்யப்பட்டது; அதன்படி, ராணுவ அதிகாரிகளும், ராணுவ வீரர்களும் கலவரப் பகுதிக்கு விரைந்தனர்.

அமைதி ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது, ராணுவ அதிகாரி ஸ்காட் என்பவருக்கு, ஒரு தந்தி வந்தது. அதில், அவர் மனைவி இறந்த செய்தி இருந்தது.

மனைவியின் இறுதிச் சடங்குக்கு அதிகாரி ஸ்காட் சென்றாக வேண்டும். இந்த சூழலில் எப்படிச் செல்வது; போகாமல் எப்படி இருப்பது... என்ற வினாக்கள், மாறி மாறி அவர் உள்ளத்தில் விஸ்வரூபம் எடுத்தது.

இறுதியாக, அதிபரைச் சந்தித்து, தன் நிலையை விளக்கி, விடுமுறை வாங்கி செல்லலாம் என்று விரைந்தார்; அதிபரையும் சந்தித்தார்.

அப்போது, பல்வேறு பிரச்னைகளால், சினத்துடன் இருந்தார் அதிபர். இதை அறியாத அதிகாரி ஸ்காட், அதிபரிடம் விடுப்பு கேட்டார். அதிபரின் மொத்தக் கோபமும், ஸ்காட் மேல் திரும்பியது.

'இந்த சூழலில் விடுப்பு கேட்க, உங்களுக்கு எப்படி மனம் வந்தது...' என்று திட்டித் தீர்த்தார்.

எதுவும் சொல்ல இயலாத அதிகாரி ஸ்காட், கண் கலங்கி, திரும்பி விட்டார் ஸ்காட்.

அன்று இரவு, பகலில் நடந்தவற்றை எல்லாம், அசை போட்டார். ஸ்காட் மனைவி இறந்த செய்தியை கூறிய போது, தாம் கடுமையாக நடந்துக் கொண்டது அவர் நினைவுக்கு வந்தது. துாக்கம் வராமல் தவித்தார்; விடிந்தது! ஸ்காட் இருக்கும் இடத்திற்கு விரைந்தார் அதிபர்.

'நேற்று, நான் உங்களிடம் கடுமையாக நடந்ததற்காக மன்னிக்க வேண்டுகிறேன்...' என்றார் அதிபர். ஒரு அதிபர், அதிகாரியிடம் மன்னிப்பு கேட்பதா... என்ற எண்ணம் எல்லாம், அந்த அதிபருக்கு இல்லை; கண் கலங்கினார் ஸ்காட்.

அவரது விழி நீரைத் துடைத்த அதிபர், விடுமுறை கொடுத்து, ஊருக்குச் செல்ல ஏற்பாடுகளையும் செய்தார்.

ஸ்காட் தன்னுடைய மனைவியின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டார் என்ற செய்தி வந்த பின் தான், அதிபருக்கு நிம்மதி வந்தது.

அந்தஸ்து பார்க்காமல், ஸ்காட்டிடம் மன்னிப்புக் கேட்டு, மனதை வென்ற, அந்த மகத்தான மனிதர் யார் தெரியுமா குட்டீஸ்...

விடை: முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us