
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருகே குலசேகரபுரம், அரசு நடுநிலைப்பள்ளியில், 1964ல், 8ம் வகுப்பு படித்தபோது, வகுப்பு ஆசிரியராக இருந்தார், முத்துராஜ். மிகவும் கனிவானவர்; சிறப்பாக பாடம் நடத்துவார். உதவி மனப்பான்மையுடன் செயல்படுவார்.
அந்த ஆண்டு கடும் பஞ்சம் நிலவியதால் உணவுப்பொருட்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. பள்ளி இறுதி தேர்வு முடிந்ததும், 40 கி.மீ., துாரம் நடந்து, திருச்செந்துார் அருகே உடன்குடி சென்றேன். அங்கு என் அண்ணனுடன் சேர்ந்து பணி செய்து குடும்பத்துக்கு உதவினேன்.
சில நாட்களுக்கு பின், பள்ளி தேர்வில் தேர்ச்சி பெற்றதை அறிந்து திரும்பினேன். அடுத்து உயர்நிலையில், 9ம் வகுப்பு பக்கத்து நகர பள்ளியில் சேர வேண்டும். அங்கு மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதை அறிந்து திடுக்கிட்டேன்.
ஆனால், எப்போதும் போல் உதவிக்கரம் நீட்டி மாற்று ஏற்பாடு செய்திருந்தார் வகுப்பு ஆசிரியர். தேர்ச்சி பட்டியல் வெளியானதும், மயிலாடி, ரிங்கல் தோபே உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரிடம், என் சேர்க்கைக்கு முன்பதிவு செய்திருந்தார். அவரது பரிந்துரையால், அங்கு சேர்ந்து ஆர்வமுடன் படித்து வாழ்வில் உயர்ந்தேன்.
என் வயது, 72; மும்பை மற்றும் கோவையில் பிரபல ஏற்றுமதி நிறுவனங்களில், தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றேன். தக்க நேரத்தில் உதவி, என் உயர்வுக்கு அச்சாணியாக விளங்கிய அந்த ஆசிரியர் நினைவை போற்றுகிறேன்.
- வி.சுயம்பு, கோவை.
தொடர்புக்கு: 96009 79811