
பிறந்தநாளை ஒட்டி கோவிலுக்குள் அன்னதானம் செய்து கொண்டிருந்தார் மன்னர். அதை பார்த்து, வரிசையில் வந்து நின்றான் ஏழை ஒருவன். அவனை கண்டதும் அனைவரும் முகம் சுளித்து ஒதுங்கினர்.
இதை உணர்ந்து வரிசையில் இருந்து ஒதுங்கினான் ஏழை. எல்லாரும் அன்னதானம் பெற்றபின், வாங்கி கொள்ளலாம் என முடிவு செய்து பொறுமையுடன் காத்திருந்தான்.
நேரம் கடந்து கொண்டே இருந்தது.
அவனுக்கு பின், வந்தவர்கள் எல்லாம் அன்னதானம் பெற்றனர்.
சிலர் அவனைப் பார்த்து ஏளனத்துடன் சிரித்தனர்.
எதுவும் கூறவில்லை ஏழை.
மனதிற்குள் சோகம் பரவியது.
'எவ்வளவு போராட்டம்; எவ்வளவு இழிச்சொற்கள்; போன ஜென்மத்தில், என்ன பாவம் செய்தோமோ, இப்படி தவிக்கிறோம்' என நொந்துகொண்டான் ஏழை.
மாலை வரை காத்திருந்தான்.
உணவு கிடைத்தபாடில்லை.
பின், 'இன்று என் தலையில் பட்டினி என்று எழுதியுள்ளது' என எண்ணியபடி கோபுரத்தை பார்த்து வணங்கினான். குமுறலை அடக்கியபடி கோவில் குளத்தில் முகம் கழுவி படிக்கட்டில் சோர்வாக அமர்ந்தான்.
அன்னதானத்தை முடித்து குளத்தருகே வந்தார் மன்னர்.
அங்கு அமர்ந்திருந்த ஏழையை கண்டதும், 'என்னப்பா... சாப்பிட்டாயா...' என்று கேட்டார்.
கேட்டது மன்னர் என்று தெரியாமல், 'ஊரே சாப்பிட்டது... இன்று, என் தலையில் பட்டினி என, எழுதி இருக்கிறது ஐயா...' என விரக்தியாக கூறினான்.
அந்த பதில் மன்னரின் மனதை உருக்கியது.
'என் பிறந்தநாளில், ஊர் மக்கள் எவரும் பசியுடன் உறங்க செல்ல கூடாது என்று தானே, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தேன். ஒரு அப்பாவி, இப்படி விடுப்பட்டுள்ளானே' என எண்ணியபடி, 'மன்னித்து விடப்பா... ரொம்ப பசிக்கிறதா...' என்றார் மன்னர்.
குளத்து நீரில் மன்னர் பிம்பம் கண்டு திடுக்கிட்டு எழுந்தான் ஏழை.
'மன்னியுங்கள் மன்னா...' என்று பதறினான்.
அவன் பொறுமை குணத்தை அறிந்த மன்னர், 'எழுந்து வா... இன்று நீ என்னோடு விருந்து உண்ண போகிறாய்...' என்றபடி தேரில் ஏற்றி அரண்மனைக்கு விரைந்தார்.
புதிய ஆடைகளை அவனுக்கு கொடுத்தார். நல் விருந்தும் படைத்தார்.
சாப்பிட்டு முடித்தவன் கையில் பொற்காசுகளை தந்து, 'இன்றிலிருந்து நீ, ஏழை இல்லை... இதை மூலதனமாக வைத்து விரும்பும் தொழிலை செய்து கவுரவமாக வாழ்...' என வாழ்த்தினார் மன்னர்.
ஏழையின், கண்கள் நிரம்பின.
'ஏனப்பா அழுகிறாய்...' என்றார் மன்னர்.
'இதுநாள் வரை, பிறவி ஏழை என்று தான் நினைத்திருந்தேன்; இத்தருணம் தான், நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்து கொண்டேன்...'
'ஏன் அப்படி கூறுகிறாய்...'
'இன்று தான், முதல்முறையாக கோபுரத்தை பார்த்து, என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று கடவுளிடம் கேட்டேன். கேட்ட சில நிமிடங்களில், என் தலையெழுத்தையே மாற்றி விட்டார்...'
கண்ணீர் சிந்தினான் ஏழை.
குழந்தைகளே... வாழ்வில், பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடித்தால் நல்லதே நடக்கும்.