PUBLISHED ON : நவ 14, 2020

சென்றவாரம்: இயந்திரங்கள் உருவாக்குவதில் பயிற்சி பெறும் ஆர்வத்தில், குடும்பத்தாரிடம் சொல்லிக்கொள்ளாமல், அமெரிக்கா, டெட்ராய்ட் நகருக்கு வந்தான் ஹென்றி. ஒரு தொழிற்கூடத்தில் பணி கேட்டான். இனி -
'இயந்திர வேலைகள் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்...'
அவன் தீராத விருப்பத்தைக் கண்டவர், 'நாளை காலை, 7:00 மணிக்கு வந்துவிடு... வேலை தருகிறேன். வார சம்பளமாக, இரண்டரை டாலர் தருவேன்...' என்றார்.
ஹென்றிக்கு உற்சாகம் பீறிட்டது. ஆனாலும், 'இன்றே வேலைக்கு வா...' என அழைக்கவில்லையே என்ற வருத்தம் மேலிட்டது.
இனி, குடியிருக்க ஒரு இடம் கண்டுபிடித்தாக வேண்டும். நாளிதழ் விளம்பரங்களில் தேடி அறியலாம் என எண்ணியபடி நடந்தான்.
'ப்ரீ பிரஸ்! அமெரிக்க அதிபர் பிரசங்கம் படிக்க வாங்குங்க, ப்ரீ பிரஸ்...' கத்தியபடியே, நாளிதழ் கட்டுடன் குறுக்கே ஓடிய சிறுவனை வழி மறித்தான். ஒரு பிரதியை வாங்கி பிரித்தான், ஹென்றி.
நாட்டின் நன்மைக்காக, அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களையும், சீர்திருத்த செய்திகளையும் வாசித்தான். அமெரிக்க அதிபரின் உரையையும் முழுமையாக படித்தான்.
தொழில் துறை வளர்ச்சி சம்பந்தமான செய்திகளில் கவனம் செலுத்தினான்.
பின், கடைசி பக்கத்தில், வாடகை வீடுகள் பற்றிய விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றை கவனமாக வாசித்தான்.
வாரம் இரண்டரை டாலர் செலவில் சாப்பாடும், தங்க இடமும் வேண்டும். எங்கு கிடைக்கும். விளம்பரங்களில் குறிப்பிட்டிருந்த வீடுகளை தேடி சென்று விசாரித்தான். பல வீடுகள் இருட்டாகவும், அசுத்தமாகவும் இருந்தன.
குடியிருக்கும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுரைத்திருந்தாள் அம்மா. சுற்றியலைந்து ஓரளவு சுத்தமான வீட்டை கண்டுபிடித்துவிட்டான்.
கிராமத்தில் அதிகாலை புறப்பட்ட போது, ஐந்து டாலர் மட்டுமே எடுத்த வந்திருந்தான். அதில், மூன்றரை டாலரை, வீட்டு வாடகை முன்பணமாக கொடுத்தான். மற்ற செலவுகளுக்கு கூடுதல் பணம் தேவைப்பட்டது. அதை, பகுதி நேர வேலை மூலம் சம்பாதித்து ஈடு செய்ய முடிவு செய்தான்.
அதற்காக, நெரிசலான நகரப்பகுதியில் கடிகாரக் கடை ஒன்றுக்கு சென்றான். பகுதிநேர பணி கேட்டான்.
இரவு, 7:00 மணி முதல், 11:00 வரை வேலை செய்தால், வாரத்துக்கு, இரண்டு டாலர் கொடுப்பதாக கூறினார், கடை உரிமையாளர்.
கடிகார கடையில், நான்கு மணி நேர வேலைக்கு, இரண்டு டாலர் சம்பளம். இயந்திர தொழிற்கூடத்தில், 11 மணி நேர வேலைக்கு, இரண்டரை டாலர் சம்பளம்.
இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தான், ஹென்றி.
இயந்திரங்களைப் பற்றிய விவரங்களை கற்றுக் கொள்ளும் ஆசை கனலாய் தகித்தது. அதனால், சம்பளக் குறைவு பற்றி கவலை ஏதும் கொள்ளவில்லை.
அதேநேரம் -
கிராமத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. ஹென்றியை காணாததால் தவித்தது குடும்பம்.
அதிகாலை புறப்பட்டு சென்றவன், இரவு வரை வீடு திரும்பாததால், திகிலடைந்தாள் அவன் அக்கா மார்கரெட்.
'தம்பிக்கு என்ன ஆனதோ.... எதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டானோ' என கவலையடைந்தாள். தந்தை போர்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தாள். பணியாளர்கள் நாலாப்புறமும் பறந்தனர். வண்டியைப் பூட்டி தெரிந்த இடங்களில் எல்லாம் தேடினார் தந்தை.
பள்ளியில் விசாரித்தார். அங்கு வருவதில்லை என்ற தகவல் அதிர்ச்சி தந்தது. பல இடங்களிலும் தேடி அலுத்த தந்தை, 'எங்கேயாவது சுற்றிக்கொண்டு இருப்பான். பசி எடுத்தா திரும்பி வருவான்' என எண்ணியபடி வீடு திரும்பினார்.
இரண்டு நாளாகிவிட்டது. ஹென்றியைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. தந்தைக்கு கடும் கவலை ஏற்பட்டது. நகரத்தில் தேடலாம் என்ற முடிவுடன் குதிரை வண்டியில் புறப்பட்டார். டெட்ராய்ட் நகர வீதிகளில் விசாரித்தார்.
பிளவர் கம்பெனியில் பணியிலிருந்த மகனைக் கண்டதும் கவலை பறந்தது.
பாசம் மேலிட, 'பள்ளிக்குப் போகாமல் இங்கு என்ன செய்கிறாய்...' என்று கேட்டார்.
'பள்ளிக்குப் போக பிடிக்கவில்லை அப்பா... அங்கு படிப்பதால் என்ன பயன்... எழுதுவது, கணக்குப்போடுவது... இதை தவிர வேறு என்ன இருக்கு... எனக்கு, நவீன இயந்திரங்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும். புதிய இயந்திரங்களை உருவாக்க பயிற்சி வேண்டும். அந்த ஆசையில் தான் வந்தேன்...'
'தவறாக கணித்து வந்துள்ளாய்... இன்னும் சில நாட்களில் இயந்திரங்களை மறந்து விடுவர் மக்கள்... இங்கு பெறும் பயிற்சியால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை...'
'காலம் மாறிக்கொண்டிருக்கிறது அப்பா; தவறாக கணிக்கிறீர்கள்... இயந்திரங்களின் தேவை உலகில் அதிகரித்து வருகிறது... இன்னும் அதிகமாகும். புதுமையான இயந்திரங்களுக்கு மதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது...'
'அப்படி எண்ணாதே... எல்லாம் சிலநாள் உபயோகத்துக்கு மட்டுமே உதவும்; பின், உடைந்து பயனற்று போய் விடும்; இயந்திரங்களை நம்பி, அன்றாட வேலை எதுவும் செய்ய முடியாமல் திணறுவர் மக்கள்...'
தந்தை கூற்று கேட்டு சிரித்தான் ஹென்றி.
- தொடரும்...
