PUBLISHED ON : நவ 14, 2020

தேவகோட்டை, சேர்மன் ராம வெள்ளையன் வழக்கறிஞர் சா.மெய்யப்பன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், 1985ல், 7ம் வகுப்பு படித்தபோது, வகுப்பாசிரியராக இருந்தவர் சுப்ரமணியம்.
அமைதியாக பாடத்தை கவனிக்க பலரும் வலியுறுத்திய நிலையில், 'பேச்சு மிகவும் அவசியம்...' என வலியுறுத்தி வந்தார்.
'வகுப்பில் நண்பர்கள், ஆசிரியர்களுடன் பேசி பழக வேண்டும். வீட்டில் சுற்றத்தாருடன் பேசுவதால் உறவு மேம்படும். அக்கம்பக்கத்தவர் உடனான பேச்சு கலகலப்பை தரும்...' என்று அறிவுரைப்பார்.
பாடங்களை மட்டும் இன்றி, பொது அறிவு விஷயங்களையும் போதிப்பார். வகுப்பறையில், பேச்சு போட்டிகள் நடத்தி பயிற்சி தருவார். தலைவர்களின் சாதனைகளை புரியும்படி எடுத்துரைப்பார். சரியான பேச்சாற்றல் இன்மையால் தோல்வியுற்ற திட்டங்கள் பற்றி விவரிப்பார்.
போட்டிகளில் பங்கேற்க வைத்து, மேடை பயத்தை நீக்குவார். இப்படி, பேச்சுக்கலை மீது ஆர்வத்தை ஏற்படுத்தினார். படித்து முடித்து வேலையில் சேர்ந்த பின், இது மிகவும் பயன்பட்டது.
வாடிக்கையாளர்களிடம் சிறப்பாக உரையாற்றி பாராட்டு பெற்றுள்ளேன். பணியில் உயர்வை தந்துள்ளது. இலக்கிய கூட்டங்களில் தயங்காமல் பேசி, அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.
தற்போது, என் வயது 46; மேடையில் சொற்பொழிவு நிகழ்த்தும்போது கிடைக்கும் பாராட்டுகள், அவரை நன்றியுடன் நினைக்க வைக்கின்றன.
- எஸ்.சுந்தரேஸ்வரபாண்டியன், சிவகங்கை.
தொடர்புக்கு: 94445 86321
