PUBLISHED ON : ஆக 08, 2020

மதுரை மாவட்டம், கோ.புதுார், அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில், 1977ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்...
தோட்டக்கலை ஆசிரியர் பால்ராஜ் கண்டிப்பும், கோபமும் நிறைந்தவர். பள்ளி வளாக தோட்டத்தில், மாணவர்களை கச்சிதமாக வேலை வாங்குவார். விளையும் காய்கறி, கீரை வகைகளை, வகுப்பறையில் ஏலத்தில் விற்பார்.
ஒருநாள், கத்தரிக்காயை கூறுகட்டி ஏலத்தில் விற்க வைத்திருந்தார். ஒருவன், 10 காசு என்றான்; பல குரல்களின் ஊடே, 80 காசு என்றேன். வாங்குவது என் நோக்கமாக இல்லை. பின், யாரும் ஏலம் கேட்கவில்லை.
விற்பனையை முடித்து, 'கடைசியாக கேட்டவன், வீட்டில் காசு வாங்கி வா...' என உத்தரவிட்டு சென்றார் ஆசிரியர்.
வீட்டுக்கு எடுத்து சென்று விவரத்தைக் கூறினேன். 'நாமிருக்கும் நிலையில் இதெல்லாம் தேவையா... குடும்ப நிலைமையை கூறி, திருப்பி கொடுத்து விடு...' என்றார் அம்மா.
பயந்து நடுங்கியபடி, 'அடி பின்ன போகிறார்' என்ற எண்ணத்துடன், ஆசிரியரை சந்தித்து விஷயத்தை கூறினேன்.
நெகிழ்ந்து கண்ணீர் விட்டவர், சட்டை பையில் வைத்திருந்த, 80 காசுகளை தந்து, 'வகுப்பறையில் இந்த காசை என்னிடம் கொடு; விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்...' என தேற்றி அனுப்பினார். கோப மனதில், குணத்தை கண்டு நெகிழ்ந்தேன்.
என் வயது, 54; வறுமையை உணர்ந்து, உதவிய ஆசிரியரை மறக்க முடியவில்லை.
- எஸ்.எம்.சுல்தான், மதுரை
