
ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட பின், ரோம் நகரை, ஆண்டனி, ஆக்டேவியஸ், லெபிடஸ் ஆகியோர் ஆட்சி செய்தனர். அது, கொடுங்கோல் ஆட்சியாக இருந்தது. நாட்டில் உயர் பதவிகள் வகித்த பலரை, நாடு கடத்தினர். சிலருக்கு, மரண தண்டனையும் விதித்தனர்.
அரசில் பெரும் பதவிகளை வகித்திருந்தவர் ஆப்பியஸ். மிகவும் முதிர்ந்தவர். அவர் மீதும் சீற்றம் பாய்ந்தது. அவரது மரணத்துக்கு, நாள் குறித்தது அரசு. அன்று, சூரியன் மறைவதற்குள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், தண்டனையை நிறைவேற்றலாம் என உத்தரவிட்டிருந்தது அரசு. 
மிகவும் நேசித்த தாய் நாட்டை விட்டு தப்பியோட, ஆப்பியசுக்கு மனமில்லை. 
மரணத்தை எதிர்கொள்வதாக பிடிவாதம் கொண்டிருந்தார். யாருடைய அறிவுரையையும் அவர் கேட்பதாக இல்லை.
இதை, கேள்விப்பட்டான் அவரது மகன்; ரோம் நகருக்கு ஓடோடி வந்தான்.
தண்டனை நிறைவேற்றும் நாளும் வந்தது. 
அன்று மாலைக்குள் வெளியேறா விட்டால், மரண தண்டனை உறுதியானது. தந்தையின் பிடிவாதத்தைக் கண்டு, குண்டுக் கட்டாக அவரைத் துாக்கினான் மகன்; வியர்க்க விறுவிறுக்க ரோம் நகர கோட்டையின் எல்லை வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.
யாரும்  உதவ முன்வரவில்லை. 
உதவினால், அரசின் தண்டனை கிடைக்கும் என்ற பயம்! 
தந்தையைத் துாக்கியபடி நடப்பது மிகவும் கடினமாக இருந்தது; கவலைப்படாமல், திணறியபடி நடந்தான் மகன்.
சூரியன் மறைய சிறிது நேரம் தான் இருந்தது.
கோட்டை வாயிலோ, வெகுதுாரத்தில் இருந்தது. ஆகவே, சுமையை பொருட்படுத்தாமல் ஓட ஆரம்பித்தான். 
அவன் கோட்டை வாசலைக் கடந்த போது, சூரியன் அஸ்தமனம் ஆகியிருந்தது. 
மூர்ச்சையாகி விழுந்தான்.
தந்தையை, மரண தண்டனையிலிருந்து காப்பாற்றிய நிம்மதி ஏற்பட்டது.
அன்றிரவே, அவரை சிசிலிக்கு அழைத்துச் சென்றான். 
சிறிது காலத்திற்குள், கொடுங்கோல் ஆட்சி முடிந்தது; மீண்டும் ரோம் நகருக்கு திரும்பி நிம்மதியாக வாழ்நாளைக் கழித்தார் ஆப்பியஸ்.
குழந்தைகளே... மன உறுதி எதையும் சாதிக்க வல்லது.

