
திருடப்பட்ட தலைமுறை!
ஆஸ்திரேலியா கண்டத்தில், ஐரோப்பியர் வருகைக்கு முன், பூர்வகுடி மக்கள் ஏராளமாக வசித்தனர். வெள்ளையர் தாக்குதலால், பூர்வகுடியினர் கொத்துக்கொத்தாக மடிந்தனர். பூர்வகுடி இன மக்கள் பூண்டோடு அழியும் ஆபத்து ஏற்பட்டது. 
இதை உணர்ந்த ஆஸ்திரேலிய அரசு, ஒரு திட்டம் தீட்டியது.
பூர்வகுடி மக்களின் குழந்தைகளை பிரித்து, குழந்தையில்லாத ஐரோப்பியருக்கு தத்துக்கொடுத்தது. தத்து எடுத்த குழந்தைகளை அடிமையாக நடத்தினர் ஐரோப்பியர். ஆஸ்திரேலியாவில் சட்ட நடைமுறையும் இதை ஆமோதிப்பதாகவே இருந்தது. 
தத்துக் கொடுக்கப்பட்ட பூர்வீகக் குடி குழந்தைகள், ஐரோப்பிய குடும்பத்தில் ஒட்ட முடியாமல் ஒடுக்குதலுக்கு உள்ளாகி, குடும்ப வேரை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். 
ஒரு தலைமுறையே இப்படி பாதிப்புக்கு உள்ளானது. இரு பெற்றோர், இரு கலாசாரம், இரு அடையாளம் என குழம்பியது. இந்த குழப்பத்துடன், 1970 வரை வாழ்ந்தது.
இதை, 'திருடப்பட்ட தலைமுறை' என குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து விரிவாக, ஆஸ்திரேலிய எழுத்தாளர் அலி கோப்பி எக்கர்மான், 'டு அப்ரைடு டு க்ரை' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலும் இந்த புத்தகம் கிடைக்கிறது. 
தெற்கு ஆஸ்திரேலிய பூர்வகுடிகள், 1880ல் படுகொலை செய்யப்பட்டது குறித்து, 'ரூபி மூன்லைட்' என்ற நாவலை ஏற்கனவே எழுதியுள்ளார் அலி. அந்த புத்தகம், 'நியூ சவுத் வேல்ஸ் பிரிமீயர்ஸ்' என்ற இலக்கிய விருதை, 2013ல் வென்றது. 
இவர் எழுதியவை, நாவல் போல் அல்லாமல், நாட்குறிப்பு போல உரைநடை  மற்றும் எளிய கவிதை பாணியில் அமைந்துள்ளன. எழுதிய அலியும், திருடப்பட்ட தலைமுறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலையாத மடிப்புகள்!
துணி அடுக்கும் அலமாரி என்ற 'வார்ட்ரோப்' பராமரிப்பு ஒரு கலை. வார இறுதியில் மணிக்கணக்கில் செலவிட்டு அலமாரியை சுத்தம் செய்து, துணிகளை அடுக்கி வைத்திருப்போம். மறுநாளே கலைந்திருக்கும். 
இதைத் தவிர்க்க துணியை அடுக்கும் விதத்தை மாற்ற வேண்டும்.
அதற்கான உத்திகளை பார்ப்போம்.
* முதலில் அலமாரியில் எத்தனை பேரின் துணி இடம்பிடிக்கப் போகிறது என்பதை முடிவு செய்யவும். கணவன், மனைவி, குழந்தைகள் என எல்லாருக்கும் ஒரே அலமாரி எனில் அதற்குத் தகுந்தவாறு திட்டமிடவும் 
* துணி அலமாரி பராமரிப்பில் இருக்கும் சவாலே, குழந்தைகள்தான். ஆடைகளைத் தேடி எடுக்கிறேன் என்ற பெயரில் எல்லா ஆடைகளையும் கலைத்துவிடுவர். எனவே, குழந்தைகளுக்கு தனி அலமாரி கொடுப்பது நல்லது
* குழந்தைகளின் உயரத்துக்கு ஏற்ப கீழ் ஷெல்பை கொடுத்து, ஆடைகளை கலைக்காமல் தேடியெடுக்க கற்றுக் கொடுக்கவும் 
* அலமாரியில் அடியில் இருக்கும் சட்டையை உருவினால் மொத்த அடுக்கும் கலைந்து விடும். இதற்குத் தீர்வாக, குழந்தைகள் அலமாரியில் நான்கு பாக்ஸ்களில் மேல்சட்டை, உள்ளாடை, இரவு ஆடை என தனித்தனியாக பிரித்து வைக்கவும். அப்போது அடுக்கு குலையாமல் நினைத்த ஆடையை உடனே எடுக்க முடியும்.
- என்றும் அன்புடன், அங்குராசு.

