
அன்பு மிக்க பிளாரன்ஸ்...
என் வயது, 38; இல்லத்தரசியாக இருக்கிறேன். மகனுக்கு வயது, 19; பிளஸ் 2 முடித்து விட்டான்; கல்லுாரியில் இளங்கலை இயற்பியல் பாடம் படிக்க கூறினேன். அவனோ நண்பனுடன் சேர்ந்து, இரு சக்கர வாகனத்தில், உலக சுற்றுலா செல்லப்போவதாக பிடிவாதம் செய்கிறான். 
இரு சக்கர வாகனத்தில், உலக சுற்றுலா சென்று வர எத்தனை நாட்கள் ஆகும்... எவ்வளவு செலவாகும்... இந்த பயணம் பாதுகாப்பானதா... உலக சுற்றுலா சென்று வருவதன் சாதக பாதகங்களை சொல்லுங்கள் சகோதரி.
அன்பு மிக்க அம்மா...
உங்கள் மகன் கொண்டுள்ள துணிச்சலுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
இரு சக்கர வாகனத்தில், உலகை சுற்றி வர, 90 ஆயிரம் கி.மீ., வரை பயணம் செய்ய வேண்டும்; 50 நாடுகளை கடந்து செல்ல வேண்டும்; அதிக பட்சம், மூன்று ஆண்டும், குறைந்தபட்சம் ஒன்பது மாதமும் அவகாசம் தேவைப்படும். 
ஆந்திர மாநிலம், விசாகபட்டினத்தை சேர்ந்த பரத்வாஜ் தயாலா என்பவர் தனி ஆளாக, 'ஸ்பான்சர்' யாருமின்றி, உலகை வலம் வந்திருக்கிறார்; பயண காலம், 18 மாதங்கள். பயணம் செய்த துாரம், 
47 ஆயிரம் கி.மீ., விசாகபட்டினத்தில் ஏப்., 2, 2006ல் புறப்பட்டு அக்., 2, 2007ல், பயணத்தை முடித்திருக்கிறார். 
மும்பையை சேர்ந்த இளைஞர்கள் டெபாஷிஷ் கோஷ், தர்மேந்திர ஜெயின் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில், 68 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து, உலக சுற்றுலாவை முடித்திருக்கின்றனர்; அவர்கள் சுற்றி வந்த நாடுகளின் எண்ணிக்கை 34.
பெங்களூருவை சேர்ந்த கேதார்நாத் இருசக்கர வாகனத்தில், 1,461 நாட்கள் பயணம் செய்து, உலக சுற்றுலாவை முடித்திருக்கிறார். 
இரு சக்கர வாகனத்தில் உலக சுற்றுலா சென்று வர பல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பலவிதமான விவரங்களை அறிந்திருக்க வேண்டும். 
அது பற்றி பார்ப்போம்...
* ஆங்கில மொழி அறிவு மிகவும் அவசியம்
* உலக மொழிகளை மொழிபெயர்க்கும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் என்ற செயலியை கையாளும் பயிற்சி தேவை
* இருவர் உலக சுற்றுலா சென்று வர அதிக பட்சம், 1 கோடி ரூபாய் தேவை; குறைந்த பட்சம், 50 லட்சம் ரூபாயாவது வேண்டும்; மொத்த பயண செலவையும், 'ஸ்பான்சர்' செய்ய, ஒரு பைக் கம்பெனி, டயர் கம்பெனி உதவினால் செலவு மிச்சம்; ஸ்பான்சர் செய்யும் கம்பெனி வழங்கும் பைக்கிலே பயணம் செய்யலாம்
* முக்கியமாக சர்வதேச நாடுகளில் செல்லதக்க ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
* ஒட்டுமொத்த பயண நிரலையும், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர் மூலம் வடிவமைப்பது நல்லது
* நாடுகளுக்குள் பிரவேசிக்க விசா தேவை; அதை விண்ணப்பித்து பெற தேவையான விதிமுறைகளை அறிந்திருக்க வேண்டும்
* பயணத்தை பாதுகாப்பாக முடிக்க, ட்ரிப் அட்வைசர் வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்
* முகநுால் நண்பர்களின் தொடர்புகள், உலக பயணத்துக்கு மிகவும் உதவும்
* எல்லைப்புற ராணுவ வீரர்களுடன், இயல்பாக பேசி, பயணத்தை எளிதாக்க உரிய பயிற்சி தேவை.
உடல் நலம் பற்றிய மருத்துவ சான்றிதழ், முதலுதவி பெட்டி, வசிப்பிடம் பற்றிய ஆதாரங்கள், மருத்துவர் சான்றிதழ், குளிர், வெயிலை தாங்க கூடிய ஆடைகள், ஹெல்மெட் என்ற தலைக்கவசம், கையுறைகள், பூட்ஸ்கள், டார்ச், பெப்பர் ஸ்ப்ரே, ஜி.பி.எஸ்., திசை காட்டும் கருவி, குளிர்கண்ணாடி, உடனடி உணவு வகைகள் போன்றவற்றை உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மோட்டார் சைக்கிளை பழுது பார்க்கும் திறனிருக்க வேண்டும்; சர்வதேச அளவில் பேச உதவும் அலைபேசி சிம் கார்டை பொருத்திக் கொள்ள வேண்டும். 
பயண நோக்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்து செல்லும் நாடுகளில் இருக்கும் இந்திய துாதரகங்களுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும்.
பயணத்தின் போது, இருவரில் ஒருவர் வீடியோ எடுக்க வேண்டும்; பயணம் முடிந்ததும், அதை எதாவது ஒரு சானலுக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம். 
பயணத்தை முடித்து வரும் உன் மகனுக்கு, அபரிதமான  உலக அறிவும், வாழ்க்கை கல்வியும், பிரச்னைகளை தாக்கு பிடிக்கும் மனோதிடமும் கிடைக்கும்.
- கூடைநிறைய அன்புடன், பிளாரன்ஸ்.

