தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/சோப்பை தர்றீங்களா?

சோப்பை தர்றீங்களா?

சோப்பை தர்றீங்களா?


PUBLISHED ON : நவ 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆற்று வெள்ளம் தெளிவாக ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக வந்த நாய் ஒன்று ஆற்றில் இறங்கி குளித்திட வேண்டி தண்ணீரில் இறங்கியது.

தண்ணீர் தெளிந்து பன்னீர் போன்று ஓடிக் கொண்டிருக்கவே, நீண்ட நேரமாக ஆற்று நீரில் குளித்துக் கொண்டிருந்தது அந்த நாய்.

சற்றுத் தொலைவில் ஒரு மனிதன் சோப்புத் தேய்த்து குளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது அந்த நாய்.

தானும் சோப்புப் போட்டுக் குளித்திட வேண்டும் என்ற எண்ணம் அதற்கு ஏற்பட்டது. மெல்ல அந்த மனிதனின் அருகே நீந்திச் சென்றது நாய்.

''ஐயா மனிதரே! நானும் உங்களைப் போன்று சோப்புப் போட்டுக் குளித்திட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு கொஞ்சம் சோப்புக் கொடுக்கிறீர்களா?'' என்று கேட்டது நாய்.

''நாயே! என்னிடமா நீ சோப்பு கேட்கிறாய்? நான் உனக்கு சோப்புக் கொடுக்க மாட்டேன். இனிமேலும் நீ என்னிடம் சோப்பு கேட்பா யானால் உன்னை நான் அடித்து விரட்டி விடுவேன்,'' என்றான் அந்த மனிதன்.

'இந்த மனிதனிடம் நாம் அன்பாகத்தானே சோப்புக் கேட்டோம். ஆனால், இவர் நம்மீது இந்த அளவுக்குக் கோபத்தைக் காட்டுகிறாரே!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அமைதியுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றது நாய்.

நாய் அந்த மனிதனிடம் சோப்புக் கேட்டதையும், அந்த மனிதர் நாயை கோபமாக திட்டி விரட்டியதையும் ஆற்றங்கரையில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த பசு கவனித்தது.

உடனே அந்த பசுவானது நாயை அழைத்தது.

''நாயே! நீ கவலைப்படாதே... நீ சோப்புக் காக அந்த மனிதனிடம் அவமானப்பட்டதை நான் கவனித்தேன். பக்கத்துப் படித்துறையில் யாரோ குளித்து விட்டு சோப்பினை மறதியாக விட்டுச் சென்றுள்ளனர். அந்த இடத்தில் சோப்பு இருப்பதை நான் பார்த்தேன். இதோ ஓர் நொடியில் அந்த சோப்பினை நான் உனக்கு எடுத்துக் கொண்டு வருகிறேன்,'' என்றபடி அங்கிருந்து சென்றது அந்தப் பசு.

சிறிது நேரத்தில் சோப்புடன் நாயின் அருகே வந்து நின்றது பசு. பசுவிடமிருந்து சோப்பை வாங்கிய நாயோ மிகவும் மகிழ்ச்சியடைந்தது. உடனே அது சோப்பை தேய்த்து குளிக்கத் தொடங்கியது.

நாய்க்கு பசு சோப்பைக் கொடுத்த காட்சியை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்த மனிதரும் பார்த்துக்கொண்டே இருந்தார். அவருக்கு ஆத்திரம்தான் வந்தது.

ஓரிரு நாட்களுக்குப் பின்னர் அந்த மனிதர் ஆற்றங்கரைக்கு குளிக்க வந்தார். அந்நேரத்தில் அந்தப் பசுவானது மிகவும் பசியோடு படுத்திருந்தது. இதை தெரிந்து கொண்ட அந்த மனிதர் பசுவிடம் சென்றார்.

''பசுவே! நீ அன்று நாய்க்கு சோப்புக் கொடுத்தாயல்லவா! அதனால் தான் உனக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. என்னை நீ அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாய்க்கு சோப்பைக் கொடுத்தாய். இப்போது அதற்கான தண்டனையை நீ அனுபவிக்கிறாய்!'' என்றார் அந்த மனிதர்.

''ஐயா! எல்லா உயிரினங்களுக்கும் ஆசை கள் ஏற்படுவது இயற்கைதானே! ஏனோ அந்த நாய்க்கும் சோப்புப் போட்டு குளித்திட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுவிட்டது. அதற்கு ஏற்பட்ட ஆசையினை நான் நிறைவேற்றினேன். ஆனால், உங்களை அவமானப்படுத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதைச் செய்யவில்லை,'' என்று அமைதியுடன் சொன்னது.

''பசுவே! நீ எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படிச் செய்தாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இப்போது நீ பசியோடு வாடிக் கொண்டிருக்கிறாய். நாய்க்கு சோப்புக் கொடுத்த காரணத்தினால் தான் நீ இப்படி துன்பப்படுகிறாய் என்பதை நான் மீண்டும், மீண்டும் சொல்வேன்,'' என்றார் அந்த மனிதர்.

''ஐயா! நான் இப்போது பசியோடு இருப் பதற்கும், நாய்க்கு சோப்புக் கொடுத்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றது பசு.

''பசுவே! நீ இப்படிக் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது,'' என்றார் அந்த மனிதர்.

அந்த நேரத்தில் நாய், பசுவை நோக்கி வந்தது. நாயின் வாயில் பெரிய ரொட்டித் துண்டு ஒன்று இருந்தது.

''பசுவே! கடைக்காரர் எனக்கு இந்த ரொட்டித் துண்டினைக் கொடுத்தார். அதை நீ சாப்பிட்டால் மிகவும் மகிழ்ச்சியடைவாய்! என்ற எண்ணத்துடன் கொண்டு வந்துள்ளேன். இதோ இந்தப் பெரிய ரொட்டித் துண்டை சாப்பிடு,'' என்றது நாய்.

நாய் கொடுத்த ரொட்டித் துண்டை பசு வாங்கி சாப்பிட்டது. பின்னர் தன் எதிரில் நின்று கொண்டிருந்த மனிதரை நோக்கியது.

''ஐயா! நான் சோப்புக் கொடுத்த நாய் எனக்கு நன்றியைக் காட்டி விட்டது. நான் நாய்க்கு சோப்புக் கொடுத்ததால், எனக்கு ரொட்டித் துண்டுக் கிடைத்தது. இதற்கு என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டது பசு.

அந்த மனிதரோ அவமானத்தினால் தலை குனிந்தார்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us