தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பதவி ஆசை!

பதவி ஆசை!

பதவி ஆசை!


PUBLISHED ON : நவ 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனா என்றாலே மாசே-துங். மிகப் பெரிய கம்யூனிஸ நாடான சீனாவை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டவர். நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர்.

மாவோ அதிபராக இருந்தபோது, அதாவது 1959ல் அவரது அமைச்சரவையில், பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் லின் பியாவோ. கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். மாவோவின் 'வலது கரம்' என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்.

மாவோ கலந்துகொள்ளும் கூட்டங்களில் நிறைய மேற்கோள்களைக் காட்டி பேசுவார். அவற்றைத் தொகுத்து, 'லிட்டில் ரெட் புக்' என்ற தலைப்பில் புத்தகமாகவும் வெளியிட்டார் லின். இதன் மூலம் மாவோவின் நன்மதிப்பையும் பெற்றார். மற்ற அமைச்சர்கள், பிற கட்சித் தலைவர்கள் கூட மாவோவுக்குப் பிறகு, லின் பியாவோதான் பதவிக்கு வருவார் என்று நம்பினர்.

ஆரம்பத்தில் லின் பியாவோவுக்கு அதிபர் பதவி மீது ஆசை இல்லாவிட்டாலும் கூட இருந்தவர்களின் தூண்டுதலும், மாவோ இவர் மீது வைத்திருந்த நம்பிக்கையும், லின்னுக்கு சீனாவின் அதிபராக ஆக வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தி விட்டது.

லின் பியாவோவின் பதவி வெறி, அவரை குற்றச் செயல்களில் ஈடுபட வைத்தது. 1970ல் தன் மகன், லின் லிகுவோவை, நாட்டின் முக்கிய நகரங்களுக்கு அனுப்பி, ராணுவ அதிகாரிகளைச் சந்தித்து, தனக்கு ஆதரவு திரட்டி வரும்படி உத்தரவிட்டார். நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி, ராணுவ ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். ராணுவத்தை தன் கைக்குள் போட்டுக்கொண்டு, சீனாவின் அதிபராக ஆக வேண்டும் என்று கணக்குப் போட்டார் லின். ஆனால், இந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

அதன்பின், 'புராஜக்ட் 571' என்ற பெயரில் மூன்று சதித்திட்டங்களைத் தீட்டினார்.

அவை:

மாவோவின் வீடு ஷாங்காய் என்ற இடத்தில் இருந்தது. அவர், அங்கிருந்து தலைநகரான பீஜிங்குக்கு விமானத்தில் வரும் போது, சுட்டு வீழ்த்திவிட வேண்டும்.

ஷாங்காய் நகருக்கும், பீஜிங்குக்கும் இடையே, மாவோ பயணம் செய்வதற்கென்று தனி ரயில் மற்றும் ரயில் பாதை உண்டு. அதைத் தகர்த் தெறிவது.

ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்து, அதிபரைக் கொன்றுவிடுவது.

இந்த சதித் திட்டத்துக்கு பின்னணியில் லின் பியாவோ இருப்பது வெளியே தெரியாத அளவுக்குப் பக்காவாக திட்டம் தீட்டினார்.

ஒரு மனிதனுக்கு பதவி வெறி வந்து விட்டால் எப்படி ஆகிவிடுறான் பாருங்கள். உற்ற நண்பராக இருந்தவரையே கொலை செய்யும் அளவுக்கு போய் விட்டார்.

முதல் இரண்டு திட்டங்களும், மாவோவின் தனி காவல் படையினரால் முறியடிக்கப்பட்டன.

மூன்றாவது சதித்திட்டத்தை செயல்படுத்தும் போது, கூலிக்கு அமர்த்தப்பட்ட அந்தக் கொலையாளி பாதுகாப்புப் போலீசாரிடம் மாட்டிக் கொண்டான். அவனிடம் தூண்டி, துருவி விசாரித்ததில் சில தகவல்களே கிடைத்தன. அந்தத் தகவல்களிலிருந்து லின் பியாவோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம், தனி காவல் படைக்கு ஏற்பட்டு விட்டது. உளவுத் துறையினருக்கும் இந்தச் சந்தேகம் ஏற்பட, அதிபர் காதில் செய்தியைப் போட்டு விட்டனர்.

அரசியல் சூதாட்டம் ஆரம்பமானது.

லின் பியாவோ மற்றும் அவரது குடும்பத்தினரை விருந்துக்கு அழைத்தார் மாவோ. செப்டம்பர் 12, 1971ல் மவுன்டன் வில்லா என்ற இடத்தில் உள்ள ஜேட் டவர் என்ற மாளிகையில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

லின் பியாவோ குடும்பத் தினருக்கு, தன் கை யாலேயே, பிரத்யேக மாகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை பரிமாறினார் மாவோ. உயர்தரமான மதுவகை களையும் வழங்கினார். லின்பியாவோவுக்கும், அவரது குடும்பத்தின ருக்கும் இது பெரும் சந்தோஷத்தை அளித்தது.

விருந்துண்ட மகிழ்ச்சி யில் லின் குடும்பம் வீடு திரும்பக் காரில் ஏறி அமர்ந்தனர். வாசல்வரை வந்து வழியனுப்பி னார் மாவோ. கார் கிளம்பி 10 அடி தூரம் கூட சென்றிருக்காது. எங்கிருந்தோ ஒரு ராக்கெட் பாய்ந்து வந்து, காரின் மீது மோதியது. அடுத்த வினாடி, கார் தீப்பிழம்பாகி அனைவரும் உயிரிழந்தனர்.

வழக்கமான விசாரணைகள் ஆரம்பமாயின. ஆனால், ஒன்றுக்கும் ஆதாரமில்லை என்று சொல்லி பைலை மூடிவிட்டது அரசாங்கம்.

இதற்கிடையில், இன்னொரு தகவல் நாடு முழுவதும் பரவியது. லின் பியாவோ குடும்பத் தினர், விருந்துக்குப் பின் காரில் செல்லவில்லை. விமானத்தில்தான் சென்றனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானம் கீழே விழுந்து நொறுங்கி விட்டது. ஒருவரும் உயிர் தப்பவில்லை.

உண்மையில், விமான விபத்தில் இறந்து போனது லின் பியாவோவின் மகன்தான்.

மாவோயின் வாரிசாக, சீனாவின் அதிபராகப் பதவி வகிக்கக் கனவு கண்ட லின்பியாவோ இறந்துபோன உண்மை எப்படி என்பதுதான் இதுவரையில் புரியாத புதிர்!

எத்தனையோ விடை தெரியாத மர்ம முடிச்சுகளில் இதுவும் ஒன்று....

இதற்குத்தான் இருப்பதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்படக்கூடாது என்பது. ஒழுங்காக தனக்கு கிடைத்த பதவியில் இருந்திருந்தால் இப்படி குடும்பமாக சாக வேண்டி வந்திருக்குமா?

கூட இருந்த ஜால்ராக்களின் பேச்சை கேட்டதால் தான் இப்படி ஆனது. பேராசை பெரு நஷ்டம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us