
பொறியாளர் சந்திரன் பாதுகாப்பு துறை, தலைமை பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். பாதுகாப்பு சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
ஒரு நாள் -
நெருங்கிய உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அங்கிருந்த சிறுமி ஆங்கில மொழியில் வரவேற்றாள். அவள் பெயர் ஆர்த்தி; தமிழில் பேச வராது.
அந்த வீட்டில் மேஜை மின்விசிறி சுற்றிக்கொண்டிருந்தது. அதன் பக்கம் போவதும், வருவதுமாக இருந்தாள் ஆர்த்தி. பாதுகாப்பு கருதி, ''அந்த பக்கம் போகாதே... தள்ளி நில்...'' என்று ஆங்கிலத்திலே கூறினார் அவள் தாத்தா.
அவள், அதை கண்டு கொள்ளவில்லை; தொடர்ந்து அதே செயலை செய்தபடி இருந்தாள். இதை கவனித்து எச்சரிக்கும் விதமாக கையில் பட்டிருந்த காயத்தை காட்டி, ''மின்விசிறி ஓடிக் கொண்டிருக்கும் போது, தொட்டதால் தான் இந்த காயம் ஏற்பட்டது...'' என்றார் சந்திரன். இந்த வார்த்தைக்கு சிறுமி மதிப்பு கொடுப்பாள் என நினைத்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதற்கு பதிலாக, ''மின்விசிறி இயக்கத்தை நிறுத்திய பின் அதை தொட்டிருக்க வேண்டும்...'' என்று பதில் அளித்தாள் சிறுமி. சந்திரன் தலையில் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.
இதைக் கேட்டிருந்த உறவினர்கள், 'ஆசானுக்கே ஆசானா...' என கூற பலத்த சிரிப்பு சத்தம் எழுந்தது. அதை பார்த்து உடன் சிரித்தாள் ஆர்த்தி.
அவளின் சமயோசித பதில், பாதுகாப்பில் இருந்த அக்கறை உணர்வுக்கு, மதிப்பு கொடுக்கும் விதமாக, புத்தகத்தை பரிசாக தந்தார் சந்திரன். உறவினர்கள் கை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
குழந்தைகளே... எந்த வேலையையும், பாதுகாப்பு உணர்வுடன் செய்தால் சிறப்பாக முடிவடையும். தக்க பாராட்டும் கிடைக்கும்!
- வசந்த சுப்பிரமணியம்