
கண்ணன் பிறந்தது ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி திதி. அதே நாளில் தான், அவனது தங்கையும் பிறந்தாள். பொதுவாக, அஷ்டமி திதியன்று சுபநிகழ்ச்சிகள் செய்வதில்லை. தேய்பிறை என்றாலும் ஒதுக்குவோம். எதை ஒதுக்குகிறோமோ, அது கடவுளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது!
இதில் இருந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன... எல்லா நாளும் நல்ல நாள் தான். ஒழுக்கமாக, பக்தியுடன் வாழ்ந்தால் எது பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை.
முப்பெரும் தெய்வங்களில் ஒருவர் திருமால். பூலோகத்தில் அநியாயம் அதிகரிக்கும் போதெல்லாம் அவதாரம் செய்திருக்கிறார். இதை தசாவதாரம் என்பர். தசம் என்றால் பத்து. அதில், ஒன்பதாம் அவதாரமான கிருஷ்ணனையே, கண்ணன் என்று செல்லமாக அழைக்கிறோம்.
இந்தப் பூவுலகில் பிறப்பதற்கு, தன் தீவிர பக்தர்களான தேவகி- - வசுதேவர் தம்பதியைத் தேர்ந்தெடுத்தார் கிருஷ்ணன். அவர்கள் வயிற்றில் பிறக்கும் முன், தன் சகோதரி பார்வதிதேவியின் அம்சமான மாயா என்பவளை அழைத்தார். இவளைத் தான் காளி, துர்க்கை என்றெல்லாம் அழைக்கிறோம்.
பார்வதி சாந்தமானவள். அதே நேரம் பக்தர்களுக்கு ஏதேனும் துன்பம் என்றால், கடும் கோபத்துடன் காளியாக மாறி விடுவாள். திருமால் அவளிடம், 'மாயா, நான் கம்சன் என்னும் கொடியவனை அழிக்க, பூலோகத்தில் அவதரிக்க உள்ளேன். என்னை கிருஷ்ணன் என்று மக்கள் அழைப்பர். நான் கருப்பானவன் என்பதால், இந்தப் பெயர் ஏற்படும். கிருஷ்ண என்ற சொல்லுக்கே கருமை என்று தான் பொருள். நீயும், கருப்பு...
'இந்த நிறத்தை உலகோர் வெறுக்கின்றனர். நாம் அதே நிறத்தை தேர்ந்தெடுப்பதால், மக்களுக்கு கருப்பு மீதான வெறுப்பு அகலும்...
'கம்சனால் மதுரா சிறையில் அடைபட்டு கிடக்கும் தேவகியின் பிள்ளையாக நான் பிறப்பேன். என்னால் தான் அவனுக்கு அழிவு என்பது விதி. எனவே, என்னைக் கொல்ல முயல்வான். அங்கிருந்து, தப்பி கோகுலம் சென்று விடுவேன். யமுனை கரையில் மதுராவும், கோகுலமும் உள்ளன...
'நீ, கோகுலத்தில் வசிக்கும் நந்தகோபர்- - யசோதை தம்பதியின் வயிற்றில் மகளாகப் பிறக்க வேண்டும். என்னை வசுதேவர் உன் அன்னையிடம் கொடுத்து விடுவார். உன்னை சிறைக்கு கொண்டு வந்து விடுவர்...' என்றார்.
அதன்படி, காளியாக மதுரா வந்து விட்டாள் மாயா. அவளால் தான் தனக்கு அழிவு என நினைத்த கம்சன், குழந்தையின் காலைப் பிடித்து துாக்கி பலமுறை சுழற்றி, வானை நோக்கி வீசினான்.
அவளோ, சூலாயுதத்துடனும், மண்டை ஓடு அணிந்து பயங்கர உருவம் எடுத்து, 'கொடியவனே... இப்போதே உன்னைக் கொல்ல முடியும். ஆனால், உன் நல்ல நேரம் என் காலைப் பிடித்து துாக்கி சுழற்றினாய்... என் திருவடியை எந்த நோக்கத்தில் பிடித்தாலும், அவர்களை கை விட மாட்டேன். எனவே, நீ தப்பினாய். உன்னைக் கொல்லப் பிறந்த கிருஷ்ணன், இங்கிருந்து தப்பி விட்டான். அவனால், உனக்கு அழிவு நிச்சயம்...' என சொல்லி மறைந்தாள்.
கண்ணனின் தங்கையைத் தான், கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பின் வரும் நவராத்திரியில், ஒன்பது நாட்கள் வணங்குகிறோம். அது வட மாநிலங்களில் துர்கா பூஜையாக மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளே! கண்ணனை மட்டுமல்ல, அவன் தங்கை துர்க்கையையும் வணங்கி அறிவும், வீரமும் பெறுங்கள்.
- தி.செல்லப்பா