/
இணைப்பு மலர்
/
சிறுவர் மலர்
/
அதிமேதாவி அங்குராசு - நவரத்தினம்!
/
அதிமேதாவி அங்குராசு - நவரத்தினம்!
PUBLISHED ON : செப் 02, 2023

வைரம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் மற்றும் நீலம் நவரத்தினங்கள் என அழைக்கப்படுகின்றன. நவம் என்பது, ஒன்பது என்ற பொருள் தரும்.
அலுமினியம், ஆக்சிஜன் சேர்ந்த கலவை தான் ரத்தின கற்கள். காலையில் அடர் நிறத்திலும், மாலை நேரத்தில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். ரத்தினங்கள், 17ம் நுாற்றாண்டில், ராஜ ஆபரணங்களில் மட்டும் அலங்கரித்தன. அதை, மற்றவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
மதிப்பு மிக்க நவரத்தினங்கள் குறித்து பார்ப்போம்...
வைரம்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், நிலத்திற்கடியில் புதைந்த மரங்கள், வெப்பத்தால் கரியாகி காலப் போக்கில் வைரமாக உருவாகின்றன.
தென் ஆப்பிரிக்கா, கிம்பர்லி என்ற இடத்தில் வைரச் சுரங்கங்கள் உள்ளன. வைரத்தின் மதிப்பை, 3,000 ஆண்டுக்கு முன்பே அறிந்திருந்த கிரேக்கர், ரோமானியர், இந்தியர் இதை வெகுவாக மதித்தனர்.
வைர சந்தையில் இன்று முதலிடம் வகிப்பது, தென் ஆப்பிரிக்கா. இந்தியாவில் எடுக்கப்பட்ட, 186 காரட் கோகினுார் வைரம் உலகப் பிரசித்திப் பெற்றது.
புஷ்பராகம்: தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். தென் அமெரிக்க நாடான பிரேசில் மற்றும் ரஷ்யாவின் வட பகுதியான சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. ஐரோப்பாவில் போர்ச்சுக்கீசிய மன்னன் புரகோன்ஷாவின் கிரீடத்தை, 18ம் நுாற்றாண்டில் அலங்கரித்த புஷ்பராகத்தின் அளவு, 1608 காரட். உலகின் பெரிய தொழிலதிபர்கள் புஷ்பராகம் பதித்த ஆபரணங்கள் அணிகின்றனர்.
முத்து: இது கடல் உயிரினத்தில் இருந்து கிடைக்கிறது. வெள்ளை, பழுப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். முழுக்க, கால்ஷியம் கார்பனேட் தான். கடலுக்கு அடியில் கிடைப்பதால் மதிப்பு அதிகம். தற்போது செயற்கை முத்துக்கள், அதிகம் பயன்பாட்டில் உள்ளன.
பவளம்: முத்து போலவே, பவளத்திற்கும் கடல் தான் பிறப்பிடம். வெதுவெதுப்பான நீர்ப் பகுதியில் விளையும்; பவளப்பூச்சி என்ற கடல்வாழ் உயிரினம், கூடு போன்று கட்டும் புற்றே பவளப்பாறை ஆகும்.
ரத்தம் போல் ஜொலிக்கும் பவளம். சூழல் மாறுப்பாட்டால் அழிய துவங்கியுள்ளதால் இதன் விலை விண்ணைத் தொட்டுள்ளது.
மாணிக்கம்: இதுவும் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை கல். காதலின் அடையாளமாக உள்ளதால் மவுசு அதிகம்.
வைடூரியம்: பூமிக்கு அடியில் அழுத்தத்தில் இருக்கும், 'லாவா' என்ற எரிமலை குழம்பு வெளியே வரும் போது வைடூரியம் கிடைக்கும். வைரம், மாணிக்கம் வரிசையில் வைடூரியத்திற்கு மூன்றாம் இடம்.
மரகதம்: பச்சை நிறத்தில் பளபளக்கும். சிறிய கல் கூட பல லட்சம் ரூபாய் விலை உடையது; மதுரை மீனாட்சி, உத்திரகோசமங்கை போன்ற கோவில்களில், மூலவர் சிலை மரகதத்தால் ஆனது. அண்டை நாடான பாகிஸ்தான், ஸ்வாட் பள்ளத்தாக்கில் ஏராளமாக கிடைக்கிறது.
கோமேதகம்: நவரத்தினங்களில் மிகவும் விலை குறைந்தது. பசுவின் கோமிய நிறத்தில் இருப்பதால், இந்தப் பெயர் வந்தது; நகைகளின் பளபளப்பை கூட்டும். இதில் போலிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதன் வர்த்தகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கிறது.
நீலம்: இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கிறது. செயற்கையாகச் செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்கப்படுகின்றன. பெரும்பாலும், நீல நிறத்தில் இருக்கும்.
நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தைப் பொறுத்து மாறுபடும். கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில் அதிக அளவில் கிடைக்கிறது.
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.