
முன்கதை: தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்த சிறுமி தியாவுக்கும், அவளது தோழி அனுவுக்கும் பார்வையில் புதிய சக்தி கிடைத்தது. அந்த கிணற்றருகே கண்ட மூதாட்டி பற்றிய விபரங்களை விசாரித்தாள், தியா. இனி -
''மூதாட்டிக்கு அதுக்கு மேலே கூட வயசு இருக்கலாம்... யாருக்கு தெரியும்...''
''நிஜமாவா பாட்டி, ஆச்சரியமா இருக்கே...''
வியப்பு தெரிவித்தாள் அனு.
''ஆமா... அந்த மூதாட்டி பத்தி, என் தாத்தா கூட சொல்லியிருக்காங்க. அவங்க காலமே, 100 ஆண்டுகள் இருக்கும். அப்புறம் என் அப்பா, 90 ஆண்டுகள் வாழ்ந்தாங்க... கூட்டி கழிச்சு பார்த்தா, இதுவே, 200 ஆண்டுகள் வருதே... அப்படின்னா எத்தனை ஆண்டுகளா அவங்க அங்க இருக்காங்கன்னு பார்த்துக்கோ...''
''நம்பவே முடியல...''
வியப்பை காட்டினாள் தியா.
''அந்த மூதாட்டி பத்தி, பல கட்டுக்கதைகள் இருக்கு. அந்த தோப்புக்கு பக்கத்துல ஒரு குடிசையில் இருப்பதாக சொல்லுவாங்க. அவங்க சித்தர் வழி வந்தவங்கன்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த இடத்தை விட்டு வெளியே ஒரு முறை கூட அவங்க வந்ததில்லை...
''ஊர் மக்கள், புடவையும், பழங்களும் எடுத்து சென்று, அந்த கிணறு பக்கம் வைப்பாங்க. சில சமயம் அதை எடுத்துக்குவாங்க மூதாட்டி; ஆனால், அவங்க எடுக்குறத, இதுவரை யாருமே பார்த்ததில்லை...''
''ஆச்சரியமா இருக்கு பாட்டி...''
''இப்படிப்பட்ட கதைகளால், ஊர் மக்கள் அந்த பக்கம் போறதில்லை...''
பாட்டி கூறியதை கேட்டு, ஆச்சரியப்பட்டனர் இருவரும்.
தொடர்ந்து, ''பாட்டி... தியாவை, எங்க வீட்டுக்கு அனுப்புங்க. ஞாயிற்றுக்கிழமை காலையில், அவளை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன். சாயங்காலம், எங்க வீட்டில் இருந்தே விடுதிக்கு செல்கிறோம்...'' என்றாள் அனு.
''ஊர் சுற்றிப் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு...''
தியாவின் கெஞ்சலும், அனுவின் பாசமான அழைப்பும், பாட்டியை சற்று தயக்கத்துடன் தலையசைக்க வைத்தது. அங்கு, திகிலான சம்பவங்கள் நடக்க போகின்றன என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஞாயிறன்று காலை -
தியாவை, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள் அனு.
பேருந்திலிருந்து இறங்கியதும், குளுமையான தட்ப வெப்பம், பசுமையான சுற்றுச்சூழலை பார்த்து வியந்தாள் தியா. பயண சுமைகளை முதுகில் மாட்டி, நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.
''அனு... இது தான், உங்க ஊரா...'' என்றாள் தியா.
''இல்லக்கா... இங்கிருந்து, 2 கி.மீ., நடந்து செல்லணும்...''
லாரி செல்லும் அளவில் இருந்த மண் சாலையில் நடந்தனர்.
பறவைகளின், 'கீச்... கீச்...' ஒலி மனதுக்கு இதமளித்தது.
''அக்கா... ஒரு ஆசையில், உங்களை கூப்பிட்டுட்டேன்...''
''ஏன்... என்னாச்சு இப்போ...''
''எங்க வீட்டில் வசதிகள் ஏதும் இருக்காது...''
''அதனால் என்ன...''
''நீங்க, அனுசரிப்புடன் தங்க வேண்டியதாய் இருக்கும்...''
''அதெல்லாம் ஒன்றுமில்ல... எனக்கு, இயற்கை சூழல் தான் மிகவும் பிடிக்கும்...''
புன்னகையுடன் முன் சென்றவளை, பின் தொடர்ந்தாள் தியா.
வழியெங்கும் மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் பயணப்பட்ட போது, திடீரென தியாவை நகர விடாமல், கை நீட்டியபடி தடுத்தாள் அனு.
உதட்டின் மேல், ஆள்காட்டி விரலை வைத்து எச்சரித்து, மிக மெல்லிய குரலில், ''அக்கா... அசையாமல் நில்லு...'' என்றாள். தன் பார்வையால், பாதையை காட்டினாள்.
ஒரு பெரிய பாம்பு படுத்திருந்தது; தியாவுக்கு, உடல் முழுதும் பயம் பரவியது. அவள் பாதத்தில் படபடப்பு தெரிந்தது. தன் காலை, இருமுறை தரையில் தட்டினாள் அனு.
படுத்திருந்த பாம்பு, மெதுவாக நகர்ந்து, அருகிலிருந்த செடிகளுக்குள் மறைந்தது. பெருமூச்சு விட்டாள் தியா.
''வா அக்கா செல்லலாம்...''
''அனு... பாம்பை பார்த்தவுடன் பயம் வந்துடுச்சு...''
''பாம்பை பார்த்தால், மனிதனுக்கு பயம். மனிதனை பார்த்தால், பாம்புக்கு பயம். பாம்பில் சில இனங்களுக்கு தான் விஷம் உண்டு. அவை, மனிதர்களை பெரும்பாலும் தாக்குவதில்லை; மனித நடமாட்டம் தெரிந்தால், ஒதுங்கி சென்று விடும்...''
''இனி, பாதை எல்லாம் இப்படித் தான் இருக்குமா...''
''ஆமாக்கா... அங்கங்க, பாம்புகள் இருக்கும். இதுவரை, யாரையும் தீண்டியதில்லை. நாம் வரும் சத்தம் கேட்டால், அவை ஒதுங்கி விடும்...''
''இங்கே வனவிலங்குகள் இருக்கா...''
''மான், காட்டெருமை, மிளா, குரங்கு, கரடி, சிறுத்தை, ஓநாய் போன்றவை உண்டு...''
''ஐயோ...''
''ஆனால், எந்த விலங்கும், மனிதர்களுக்கு தீங்கு செய்யாது. நாங்க, அதற்கெல்லாம் பயப்படுவதில்லை...''
''தைரியம் தான்...''
''இந்த வனம், விலங்குகளின் வாழ்விடம். நாம் தான், அதை ஆக்கிரமித்துள்ளோம்...''
''உங்க வீட்டு பக்கம், விலங்குகள் வருமா...''
''பெரும்பாலும் வராது. சில சமயங்களில், மான் கூட்டம், கடந்து செல்லும். இருமுறை, கரடி பார்த்திருக்கிறேன். அவை எந்த தொந்தரவும் செய்வதில்லை...''
ஆச்சரியமாக பார்த்தாள் தியா.
''இன்னும் எவ்வளவு துாரம் செல்லணும்...''
''சிறிது துாரம் தான், ஏதோ வண்டி போகிற சத்தம் கேட்குதுக்கா...''
சுற்று முற்றும் கவனித்து, ''எனக்கு கேட்கலையே...'' என்றாள் தியா.
''இல்லக்கா... கேட்கிறது. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது...'' என்றாள் அனு.
''அப்படின்னா...''
''வழக்கமா, இங்கே வனத்துறை ஜீப் தான் வரும். இந்த சத்தம், வேறொரு வாகனம் போல் தெரிகிறது...''
சிறிது நேரம் கவனித்த போது, மெல்லிதாய் ஒரு வாகன சத்தம் கேட்டது.
''அக்கா... வா அங்கு சென்று பார்க்கலாம்...''
''ஏன் அனு...''
''இல்லை... ஏதோ வித்தியாசம் உள்ளது. என்னவென தெரிந்து கொள்ளலாம்...''
''எங்கு சென்று பார்ப்பது...''
''இடது பக்கம் பயணித்தால், ஒரு சின்ன மேடு இருக்கும். அங்கிருந்து பார்த்தால் தெரிந்து விடும்...''
''வண்டி வருவதற்கு, வேறு பாதை ஏதாவது உள்ளதா...''
''போக்குவரத்துக்கு சாலையில்லை. வண்டித்தடம் போல, ஒரு பாதை இருக்கிறது; ஜீப் அல்லது லாரி செல்லும் அளவிற்கு, மண் பாதையாக இருக்கும்...''
''சரி... நீ ஏன் பதறுகிறாய்...''
''இந்த வனம், வாகனங்கள் வர தடை செய்யப்பட்ட பகுதி. அதனால் தான், எனக்கு சந்தேகமாக இருக்கிறது...''
இடதுபுறமாக, தியாவை அழைத்துச் சென்றாள் அனு.
- தொடரும்...- ஜே.டி.ஆர்.