PUBLISHED ON : மே 31, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
டிப்ஸ்.... டிப்ஸ்...
இந்த வாரம் 'டிப்ஸ் ஸ்பெஷலாக' உள்ளது. டிப்ஸ்ஸில் நமக்கு எண்ணற்ற வாசல்கள் திறக்கும். எளிய ஐடியாக்கள் பெரிய மாற்றங்களை மலர செய்யும். டிப்ஸ்களை சேகரியுங்கள்.
புத்தகமாக்கி வைத்து கொள்ளுங்கள். சமயத்தில் உதவும். அட என மற்றவர்களை 'சபாஷ்' போட வைக்கும். அழகுப்படுத்துதலில் பார்ப்போம் ஐடியா பொறிகளை...
தனித்தனி இடம்!
வீட்டு ஷோகேஸில் அலங்காரப் பொருட்களை மொத்தமாக ஒரே இடத்தில் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக... மெட்டல், கிளாஸ், கிப்ட் அயிட்டம்ஸ், ஸ்போர்ட்ஸ் என்று பல வகையாக பிரித்து அவற்றை எல்லாம் ஒரே பகுதியில் இருப்பது போல செட் செய்தால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இடமும் அதிகமாக கிடைக்கும்.
செட் ஆகுமா சோபா செட்!
ஒரு வீட்டின் வரவேற்பறையை அழகுப்படுத்துவது பர்னிச்சர்கள்தான். அதற்காக வரவேற்பறையை பர்னிச்சர்களால் நிறைத்தால், இடவசதி குறைவதுடன் பார்க்கவும் அழகாக இருக்காது. வரவேற்பறைக்கு பர்னிச்சர் பர்ச்சேஸ் செய்யும்போது, அழகாக இருக்கிறது என்பதை விட உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு செட் ஆகுமா என்று பார்த்து வாங்குவது முக்கியம்!
உயரமான இடத்தில் கண்ணாடி!
கண்ணாடி ஷோகேஸ் என்றால்... மிக மிக கவனமாக கையாளுங்கள். சின்னக் குழந்தைகள் தொடும் உயரத்தில் கண்ணாடி ஷோகேஸ் இருந்தால், விளையாட்டு வேகத்தில் அவர்கள் அதில் மோதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கண்ணாடி உடைந்தால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குழந்தைகளுக்கு ஏதாவது என்றால்...? எனவே, முடிந்தவரை ஷோகேஸ்களை உயரமாகவே அமையுங்கள்!
பழசுக்கு பாலிஷ்!
பர்னிச்சர் பர்ச்சேஸ் என்றால், மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட விலையில் பர்னிச்சர் கிடைக்கும் என்பது போல விளம்பரப்படுத்துகின்றன. வீட்டில் வாங்கி வைத்த இரண்டொரு மாதங்களிலேயே... அவை பல் இளிக்க ஆரம்பித்து, நம்மை வேதனைப்படுத்திவிடும். தரமான கடையிலேயே பொருட்களை வாங்குங்கள். தரமான கடை என்றாலும்... வாங்கும்போதே அனைத்து அம்சங்களையும் செக் செய்து, வாங்குவதே நல்லது. குறைந்த விலை என்று பழைய பர்னிச்சருக்கு பெயிண்ட் பாலிஷ் போட்டு தலையில் கட்டிவிடுவர் ஜாக்கிரதை!
பர்னிச்சருக்கு மார்க்!
பர்னிச்சர்கள் வாங்கும்போது அதன் ஜாய்ன்ட்டுகள் புஷ் அட்டாச்மென்ட் பினிஷிங் எல்லாம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா என்று கவனமாக பார்த்து வாங்குங்கள். கடையில் நீங்கள் பார்த்து இறுதி செய்த பர்னிச்சரை, ஏதாவது ஒரு மார்க் செய்து அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். டெலிவரி கொடுக்கும் போது, அந்த மார்க்கை கவனிப்பதோடு... எல்லாம் சரியாக இருக்கிறதா, வண்டியில் வரும்போது ஏதும் உடையவில்லைதானே என்பதையெல்லாம் உறுதிப்படுத்திய பிறகே டெலிவரி சீட்டில் கையொப்பமிடுங்கள். ஏதேனும் குறைகள் இருந்தால்... நிவர்த்தி செய்தால் ஒழிய அதை வாங்காதீர்கள். திருப்பி அனுப்பிவிடுங்கள்!
சமையலறைக்கு வியர்க்கும்!
வீட்டு உறுப்பினர்களின் சுகாதாரம் மற்றும் உடல்நலனை உறுதிபடுத்துவது சமையலறை தான். அதனால் அந்த அறையின் மீது மிகுந்த அக்கறை காட்டுங்கள். சமையலறை காற்றோட்டமாக இருப்பது முக்கியம். இல்லையென்றால் எக்ஸாஸ்ட் பேன் அவசியம் பொருத்தி விடுங்கள். சமையலறையின் வெப்பத்தை அது வெளியேற்றி விடும். பார்ப்பதற்கு குளிர்ச்சியாக இருக்கும் வண்ணங்களையே சமையலறைக்கு பூச வேண்டும். லைட் கலர்கள் பெஸ்ட் சாய்ஸ்!
புகைப்பட லுக்!
ஹாலில் புகைப்படங்களை எப்போதும் நீளவாக்கில் மாட்டாதீர்கள். அதற்குப் பதில் அசென்டிங் ஆர்டர் முறையில், ஒவ்வொரு படத்துக்கும் போதுமான இடைவெளிகள் விட்டு மாட்டும்போது, அந்த அறைக்கு ஒரு கிராண்ட் லுக் கிடைக்கும்.
ஒரே மிதியடியா?
வாரம் முழுக்க ஒரே மிதியடியைப் பயன்படுத்தாதீர்கள். கைவசம் இரண்டு அல்லது மூன்று மிதியடிகளை வைத்திருந்தால், தினமும் மாற்றிக் கொள்ள வசதியாக இருக்கும். அதே போல, பெட்ரூமில் உபயோகிக்கும் திரைச் சீலைகள் கனமானதாக இருக்கட்டும். அப்போதுதான் தூசுகள் அதிகம் உள்ளே நுழையாமல் இருக்கும்.
சின்ன வெங்!
ஊறுகாயிலுள்ள காய்கள் தீர்ந்து, வெறும் விழுது மட்டும் இருக்கிறதா? ஒரு பாத்திரத்தில் நான்கைந்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, அதில் இரண்டு, மூன்று ஸ்பூன் ஊறுகாய் விழுதைக் கலந்து விடுங்கள். தயிர் சாதத்துக்கும், ப்ரைடு ரெஸ் அயிட்டத்துக்கும் சூப்பர் 'சைட் டிஷ்' ஷாக இருக்கும். மொத்த விழுதிலும் வெங்காயத்தைச் சேர்க்காமல், அவ்வப்போது தேவையான அளவு மட்டும் தயாரித்துக் கொண்டால்தான் ப்ரெஷ்ஷாக இருக்கும்.
கார்லிக் பிரெட்!
வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா? அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் குழையுங்கள். இதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லிலோ (அ) டோஸ்ட்டரிலோ டோஸ்ட் செய்தால்... கார்லிக் பிரெட் தயார். இதை விட எளிமையாக தயாரிக்க, முதலில் வெண்ணெய் தடவிய பிரெட்டை டோஸ்ட் செய்யுங்கள். பிறகு, இரண்டாக வெட்டிய ஒரு பல் பூண்டை அதன் மேல் தேய்த்துவிட்டால், கார்லிக் வாசனையுடன், பிரெட் கமகமவென்று இருக்கும்.
மூன்று பேரை ப்ரிட்ஜில் வைக்கவும்!
இரவுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக காலையிலேயே சமைக்கிறீர்களா? அப்படியானால் சாம்பார், பொரியல், கூட்டு, அவியல், மோர்க் குழம்பு என எதுவாக இருந்தாலும், ஒரு பாதியை தனி பாத்திரத்தில் காலையிலேயே தனியாக எடுத்து வைத்து விடுங்கள். கைப்படாத வரை அவை கெடாது. தேங்காய், பயத்தம் பருப்பு, தயிர் முதலியன சேர்த்துச் செய்த உணவாக இருந்தால்... சமைத்த உடன் ப்ரிட்ஜில் வைத்துவிட்டால்... இரவு வரை கெடாது.
நிறம் மாற பால் ஊற்றுக!
புளி பழையதாகி இருந்தால், அதை சேர்க்கும் குழம்பு சாம்பார் போன்றவையும் கறுப்பாக, பழைய வாசனையுடன் இருக்கும். இதைத் தவிர்க்க... சாம்பார் தயாரித்து முடித்து, அடுப்பை அணைத்ததும், சாம்பாரில் அரை கப் தேங்காய்ப் பாலை ஊற்றிக் கலந்துவிட்டால்... புளியினால் ஏற்பட்ட நிறம் மாறி, நல்ல மணத்துடன் அசத்தலாக இருக்கும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு
