தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூரண சந்திரா!

பூரண சந்திரா!

பூரண சந்திரா!


PUBLISHED ON : மே 31, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விஸ்வாதேஷ் அரண்மனையில், ஒரே பரபரப்பாக அன்றைய தினம் காணப்பட்டது. மன்னர் ஓர் ஓரத்தில் அமர்ந்து மோட்டு வளையைப் பார்த்தவாறு கவலையுடன் உட்கார்ந்திருந்தார். அருகில் கைகளைப் பிசைந்தவாறு மந்திரி நின்றிருந்தார்.

'மன்னா, நான் உத்தரவு பெறுகிறேன்!' என்று கிளம்பத் தயாரானார் மந்திரி.

'மந்திரியாரே, அந்தக் கவலையை இப்போதே ராணியிடம் சொல்ல வேண்டும்,''என்றார் மன்னர்.

அதற்குள் ராணி அங்கே வருகை புரிந்தாள். மன்னர் இருக்கும் நிலையைப் பார்த்து, ''அரசே, தங்களுக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டாள்.

''உனக்கு விஷயம் தெரியாதா? பூரணச் சந்திரன் இறந்து விட்டாராம். மந்திரிதான் இந்தத் தகவலை என்னிடம் சொன்னார்,'' என்றார்.

மன்னரின் துக்கக் குரலைக் கேட்ட ராணி, ''ஆ! பூரணச் சந்திரன் இறந்தாரா?'' என்று கூறித் துக்கம் தாளாமல் கண்ணீர் வடித்தாள். அவள் அழுது கொண்டே ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.

பணிப்பெண்கள் சுற்றி நின்று மகாராணியை ஆறுதல் படுத்திவிட்டு, ''ஏன் இந்தத் துக்கம்?'' என்று கேட்டனர்.

'பூரணச்சந்திரன் இறந்துவிட்டாராம்!' அழுகையினூடே சொன்னாள் ராணி.

இதைக் கேட்ட பணிப் பெண்கள் ராணியைச் சுற்றி நின்று கோவென்று கதறி அழுதனர். எல்லாரும் துக்கத்தில் இருக்கும் போது அந்த அரண்மனையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பணிப்பெண் ஒருத்தி அங்கே வந்தாள். சூழ்ந்திருப்போர் அனைவரும் துக்கமாகவும், கண்ணீராகவும் இருப்பதைக் கண்ட அவள் திடுக்கிட்டாள்.

''என்ன விஷயம்?'' என்று இதர பணிப்பெண்களிடம் விசாரித்தாள்.

''உனக்கு எங்கே விஷயம் தெரியப் போகிறது? பூரணச் சந்திரன் இறந்து விட்டார்! அதுதான் துக்கம்!'' என்று கூறினர்.

புதிய பணிப்பெண் குழம்பிப் போனாள்.

'பூரணச் சந்திரனா, யார் அவர்? எனக்குத் தெரியவில்லையே!' என்று தன் சந்தேகத்தைக் கிளப்பினாள்.

'உனக்குப் பூரணச் சந்திரனை உண்மையிலேயே தெரியாதா? நீ அரண்மனையில் வேலை செய்யவே தகுதி இல்லாதவள். கோபமாக அவர்கள் பதில் சொல்லிவிட்டு, மகாராணி இந்தப் பேதைப் பெண்ணுக்குப் பூரணச் சந்திரன் யார் என்று நீங்களே தெரிவியுங்கள்!'' என்றனர்.

ராணி விழித்தாள். பின் தன்னருகே இருந்த அரசரைப் பார்த்து, 'இவளுக்குப் பூரணச் சந்திரன் யாரென்று கூடத் தெரியவில்லை. எனக்கு இருக்கும் சோகத்தில் அதை விளக்கமாகச் சொல்லத் தெரியாது. நீங்கள்தான் பெரிய அறிவாளி. நீங்களே சொல்லிவிடுங்கள்!' என்றார் மரியாதையுடன்.

மன்னர் ஒரு நிமிடம் யோசித்தார்.

''நான் ஒரு மன்னன், அவள் பணிப்பெண். இவளுக்கு நான் ஏன் பதில் கூற வேண்டும்,'' என்று ராணியின் காதுகளில் கிசுகிசுத்து விட்டு, 'இருந்தாலும் பூரணச் சந்திரனை அவள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!' என்று சத்தமாகக் கூறினார்.

பின் மந்திரியைப் பார்த்து, ''மந்திரியாரே, இந்த அப்பாவிப் பெண்ணுக்குப் பூரணச் சந்திரன் யாரென்று நீங்களே சொல்லி விடுங்கள்!'' என்றார் சீற்றத் துடன்.

மந்திரி தயங்கித் தயங்கிச் சொன்னார்.

''அரசே, பூரணச் சந்திரன் யார் என்பது உங்களுக்குத் தானே தெரியும். நீங்கள்தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.

மன்னர் யோசித்தார்... மந்திரியின் காதருகே குனிந்து, ''இந்த பூரணச் சந்திரனைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. விஷயம் அறிந்த மந்திரியாகிய நீங்களே என்னிடம் வந்து கூறியதால், அதுபற்றி உங்களுக்குத்தான் தெரியும் என்று நான் அமைதியாக இருந்தேன். ஆகவே, நீங்களே சொல்வதுதான் சரி. எனக்குப் பூரணச் சந்திரனைத் தெரியாது!'' என்றார்.

மந்திரி திடுக்கிட்டார்.

''இந்தச் செய்தியைத் தங்களிடம் சொன்னது யார்?'' என்று திரும்பவும் கேட்டார் மன்னர்.

''நம்முடைய சேனாதிபதிதான் இன்று காலையில் சொன்னார். அவர் சொல்லும்போது அவர் முகம் சோகமாக இருந்தது,'' என்றார்.

''உடனே அவரை அழைத்துப் பூரணச் சந்திரனைப் பற்றி விசாரியுங்கள்,'' என்று உத்தரவிட்டார் மன்னர்.

சில நிமிடங்களில் சேனாதிபதி, அரசர் முன் நிறுத்தப்பட்டார்.

''பூரணச் சந்திரன் யார் என்று எனக்குத் தெரியாது. நம்முடைய உபதளபதிதான் இதை என்னிடம் சொன்னார்!''

அப்படியா? என்ற அரசர் உபதளபதியை அழைத்து வர ஆணையிட்டார்.

உபதளபதி வந்து சேர்ந்து, ''அரசே, எனக்குப் பூரணச் சந்திரனைத் தெரியாது. நம் ராணுவத்தில் காலாட்படைப் பிரிவில் இருக்கும் வீரன் ஒருவன்தான் என்னிடம் இந்தத் தகவலைக் கூறினான்!'' என்று சொன்னார்.

அந்த வீரன் அழைத்து வந்து விசாரிக்கப் பட்டான்.

அவன் சொன்னான்.

''எங்கள் வீட்டுக்கு வந்து அழுக்கு துணிகளை எடுத்துச் செல்லும் சலவைக்காரர்தான் என்னிடம் இத்தகவலைச் சொன்னார். மற்றபடி பூரணச் சந்திரனை எனக்குத் தெரியாது!'' என்றான்.

கோபமடைந்த அரசர், சலவைக்காரரை அழைத்து வர ஆணையிட்டார்.

சலவைக்காரர் வந்து நின்றார்.

''அரசே, பூரணச் சந்திரனை எனக்கும் தெரியாது. என் அக்காள் மகள் பொன்னி தான் இன்று அதிகாலை என்னிடம் இத்தகவலைச் சொல்லிவிட்டு அழுது கொண்டே ஓடினாள்!'' என்றான்.

மன்னர் பெரிதும் ஆத்திரமடைந்தார். அதற்குள் பொன்னியை அரசாங்க வீரர்கள் அழைத்து வந்தனர்.

'பூரணச் சந்திரன் யார் என்று நீ சொல்லாவிட்டால் உன் தலை மண்ணில் உருளும்!' என்று கடுமையாக எச்சரித்தார் மன்னர்.

பொன்னி தலை கவிழ்ந்தவாறு சொன்னாள்.

'என்னுடன் அழுக்கு மூட்டைகளை ஆற்றுவரை எடுத்து வந்து, சலவை செய்தவுடன் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என் வளர்ப்புக் கழுதைதான் பூரணச் சந்திரன்.'

'ச்சே...!' என்ற அலுப்புடனும், விரக்தியுடனும் தலை குனிந்தார் மன்னர்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us