PUBLISHED ON : மே 31, 2013

கடலில் துடுப்புப்பட்டதும், கடல் இரு பிரிவாகப் பிரிந்து வழி விட்டது. இதைப் பார்த்த வாழியனும் துணிந்து கடலில் குதித்தான்.
இருவரும் சிறிது தொலைவு சென்றனர். பொன்னாலாகிய கடல் அரசனின் அரண்மனையை அடைந் தனர். அவர்கள் இருவரையும் வாயிற் காவலர்கள் அரண்மனைக்குள் அழைத்துச் சென்றனர்.
அரண்மனையின் அழகைக் கண்டு இருவரும் வியப்பு அடைந்தனர். தரை முழுமையும் பொன்னாலாகி இருந்தது. தூண் களில் ஒளி வீசும் முத்துகளும், மாணிக்கங்களும் பதிக்கப்பட்டு இருந்தன.
அவர்களை வரவேற்ற அரசன், ''இங்கு வரும் முதல் மனிதர்கள் நீங்கள்தான். நீங்கள் விரும்பும் எந்த ஒரு பொருளையும் இங்கிருந்து எடுத்துச் செல்லலாம். ஒரு பொருளுக்கு மேல் எடுக்கக் கூடாது,'' என்றான்.
இருவரையும் வீரர்கள் கருவூல அறைக்கு அழைத்துச் சென்றனர்.
'அந்த அழகியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவள் கேட்ட ஒளி வீசும் முத்து எங்கே உள்ளது' என்று ஆர்வத்துடன் தேடினான் வாழியன்.
தங்கக் குடம் அவன் கண்ணில் பட்டது. அதை அவன் தொடவில்லை. முத்துக் குவியலின் அருகே சென்றான். அவற்றில் பெரிய முத்தைத் தேர்ந்து எடுத்தான்.
'ஒளி வீசும் முத்து கிடைத்து விட்டது. இனி அந்த அழகி எனக்குத்தான்' என்று மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் வாழியன்.
இனியனின் கண்களில் முதலில் தங்கக் குடம் பட்டது. அருகில் இருந்த, முத்துக் குவியலும் தெரிந்தன.
'முத்தை எடுத்தால் நான் மகிழ்ச்சியாக வாழலாம். தங்கக் குடத்தை எடுத்தால், வெள்ளத்தில் வாழும் மக்களைக் காப்பாற்ற லாம். பிறர் மகிழ்ச்சிக்காக வாழ்வதே நல்லது' என்று நினைத்தான். தங்கக் குடத்தை எடுத்துக் கொண்டான்.
கடல் அரசனிடம் வந்த அவன், ''அரசே! உங்கள் அன்பிற்கு நன்றி,'' என்று புறப் பட்டான்.
கடற்கரையை அடைந்த வாழியன் குதிரையில் அமர்ந்தான். 'அந்தப் பேரழகியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். இனி மகிழ்ச்சியான வாழ்வுதான்' என்று குதிரையை விரட்டினான்.
வெள்ளத்தில் தவித்த மக்கள் குதிரையில் வரும் அவனைப் பார்த்தனர்.
''தங்கக் குடம் வந்து விட்டது,'' என்று ஆரவாரம் செய்தனர்.
அவர்கள் வழி மறித்து நின்றதால், வாழியன் குதிரையை நிறுத்தினான்.
''கடல் அரசரிடம் தங்கக் குடம் கேட்டேன். அவர் தர மறுத்து விட்டார். வழி விடுங்கள்,'' என்ற அவன் குதிரையை விரட்டினான்.
இதைக் கேட்ட அவர்கள், '' ஐயோ! இனி என்ன செய்வோம்,'' என்று அழுது புலம்பினர்.
சிறிது நேரம் சென்றபிறகு அங்கு வந்தான் இனியன். மலை உச்சியில் அவர்கள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தான்.
''உங்கள் துன்பம் தீர்ந்து விட்டது. தங்கக் குடத்துடன் வந்துள்ளேன். மலையில் இருந்து கீழே இறங்குங்கள்,'' என்று குரல் கொடுத்தான்.
எல்லாரும் கீழே வந்தனர். வெள்ளத் தண்ணீரைத் தங்கக் குடத்தில் நிரப்பினான். அந்த தண்ணீரை வெளியே ஊற்றினான்.
என்ன வியப்பு! தண்ணீரில் மூழ்கி இருந்த வீடுகள் தெரியத் தொடங்கின. இரண்டாம் முறை ஊற்றியவுடன் பயிர்கள் தெரிந்தன. மூன்றாம் முறை ஊற்றியவுடன் வெள்ள நீர் முழுவதும் வடிந்து தரை தெரிந்தது.
எல்லாரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
''இந்தத் தங்கக் குடத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும்,'' என்றான் இனியன்.
குடத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள், ''உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி. பதிலுக்குப் பரிசு தர விரும்புகிறோம். எங்களிடம் விலை உயர்ந்த பொருள்கள் ஏதும் இல்லையே,'' என்று வருத்தத்துடன் சொன்னார்கள்.
வயலில் பெரிய சிப்பி ஒன்று கிடப்பதை அவர்களில் ஒருவன் பார்த்தான். அந்தச் சிப்பியை எடுத்து உடைத்தான். அதற்குள் முத்து ஒன்று இருந்தது. ஆனால், அது கருப்பாக இருந்தது.
இனியனைப் பார்த்து அவர்கள், ''எங்கள் அன்புப் பரிசாக இந்தக் கருப்பு முத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்,'' என்று வேண்டினர்.
''உங்கள் அன்பிற்கு நன்றி,'' என்ற அவன் அந்த முத்தைப் பெற்றுக் கொண்டான்.
'அந்த அழகியை மணக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன். அதனால் என்ன? இவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைத்ததே... இப்போது இவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக் கின்றனர். இது எனக்குப் போதும்' என்று அங்கிருந்து புறப்பட்டான்.
குதிரையில் வேகமாகச் சென்ற வாழியன் நண்பகல் நேரத்தில் ஆற்றங்கரையை அடைந்தான். அந்த அழகி அங்கேயே இருந்தாள்.
தன் பையிலிருந்த பெரிய முத்தை எடுத்து, அவளிடம் காட்டினான்.
''அழகியே! நீ கேட்ட ஒளி வீசும் முத்து இது. பட்டப் பகலிலும் எப்படி ஒளி வீசுகிறது பார்த்தாயா? இதைக் கொண்டு வர நான் எவ்வளவு பாடுபட்டிருப்பேன் தெரியுமா? என் வீரத்திற்கு இந்த முத்தே சான்று ஆகும். நம் திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம்,'' என்று கேட்டான் வாழியன்.
அந்த முத்தை வாங்கிய அவள் அதை உற்றுக் கவனித்தாள்.
''இந்த முத்து உண்மையானதா? ஒளி வீசும் முத்தா? இரவில்தான் பார்த்து அறிய முடியும். அதனால் இரவு வரும்வரை காத்திருப்போம்,'' என்றாள் அவள்.
முத்தை அவனிடமே திருப்பித் தந்தாள்.
மடிலை நேரம் வந்தது. எங்கும் இருட்டத் தொடங்கியது. தன் கையிலிருந்த முத்தைப் பார்த்தான் அவன். அதன் ஒளி மங்கிக் கொண்டே வந்தது. அப்படியே கருப்பு நிறமாக மாறி விட்டது. அதிலி ருந்து ஒளி ஏதும் வீசவில்லை. கருகிய கரித்துண்டு போல இருந்தது.
அதிர்ச்சி அடைந்தான் அவன். அந்த முத்தில் ஏதோ குறை உள்ளது என்பது அவனுக்குப் புரிந்தது. எரிச்சலுடன் கீழே போட்டான். தரையில் விழுந்த முத்து இரண்டாக உடைந்தது. அதற்குள் இருந்து புழு ஒன்று வெளியே வந்தது.
'பரப்பில் குறை உடைய முத்தை எடுத்து வந்து விட்டேன். இனி அவளை மணக்கும் வாய்ப்பு இல்லை' என்பதை உணர்ந்த அவன், தலை கவிழ்ந்தபடியே சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டான்.
ஜின்று நாட்கள் சென்றன. இனியன் அந்த ஆற்றங்கரைக்கு வந்தான். அவள் அங்கே அமர்ந்து இருப்பதைப் பார்த்தான்.
''என் உள்ளம் கவர்ந்த அழகியே! ஒளி வீசும் முத்தை என்னால் கொண்டு வர முடியவில்லை. உன்னை மணக்கும் பேறு எனக்கு இல்லை,'' என்று வருத்தத்துடன் சொன்னான்.
தேனினும் இனிய குரலில் அவள், ''உங்கள் பைக்குள் என்ன வைத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள்.
''சாதாரண கருப்பு முத்து. இதை விட இங்குள்ள கற்கள் ஒளி வீசும். அன்புடன் தரப்பட்ட பொருள் என்பதால் எடுத்துச் செல்கிறேன்,'' என்றான் இனியன்.
''அந்த முத்தைக் காட்டுங்கள்,'' என்றாள் அவள். முத்தை அவளிடம் தந்தான் அவன்.
''இந்த முத்து கருப்பாக உள்ளது. இரவில்தான் முத்தின் தன்மையை உண்மையாக அறிய முடியும். இரவு வரை காத்திருங்கள். நான் கேட்ட ஒளி வீசும் முத்தாக இதுவே இருந்தாலும் இருக்கலாம்,'' என்றாள் அவள்.
''எனக்கு நம்பிக்கை இல்லை. நீ சொல்கிறாய் என்பதற்காகக் காத்திருக்கிறேன்,'' என்றான் இனியன்.
இரவு நேரம் வந்தது. வானத்தில் நிலவும், விண்மீன்களும் ஒளி வீசின. மூடி இருந்த தன் கைகளை விரித்தாள் அவள். கருப்பு முத்து வெண்ணிற முத்தாக மாறி இருந்தது. பேரொளி வீசியது. அதன் ஒளியால் அந்த இடமே பகலைப் போல காட்சி அளித்தது.
தன் கையிலிருந்த முத்தை வானத்தில் தூக்கி எறிந்தாள் அழகி. அதன் பேரொளியைத் தாங்க முடியாத அவன் கண்களை மூடிக் கொண்டான். கலகலவென்ற அவளின் சிரிப்பு அவன் செவிகளில் விழுந்தது.
மெல்ல கண்களைத் திறந்தான் இனியன். கடல் அரசனின் தங்கத்தாலான அரண்மனை தெரிந்தது. அவள் எறிந்த முத்து அதன் உச்சியில் ஒளி வீசி கொண்டிருந்தது.
தானும், அவளும் திருமணக் கோலத்தில் இருப்பதை அறிந்தான்.
''மகளே! உனக்குப் பொருத்தமானவர் இவர்தான். வீரமும், நற்பண்புகளும் நிறைந்தவர். இனி உன் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்,'' என்று வாழ்த்தினான் கடல் அரசன்.
எல்லாரும் வாழ்த்த, அவர்கள் திருமணம் ஆரவாரமாக நடந்தது.
உள்ளம் கவர்ந்த அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினர்.
முற்றும்.
