PUBLISHED ON : ஆக 01, 2014

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
30 ஆயிரம் அடிகளுக்கு மேல் வண்டா!
பம்பிள் பீக்களால் ( BEE துளைபோடும் வண்டு) மிகவும் உயரமான இடங்களிலும் பறக்க இயலும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கு சீனாவில் உள்ள உயர்ந்த மலைப்பகுதிக்குப் பயணம் செய்து, பாம்பஸ் இம்பிடுசஸ் வகையைச் சேர்ந்த ஆறு ஆண் பம்பிள் பீக்களைச் சேகரித்தனர்.
அந்தத் தேனீக்களை ஒரு பெட்டி யில் வைத்து அடைத்து, அங்குள்ள ஆக்ஸிஜன் அளவையும், காற்றின் அடர்த்தியையும், வெப்ப நிலையையும் உயரமான பகுதிகளில் இருப்பதைப் போன்று ஆய்வாளர்கள் செயற்கையாக உருவாக்கினர்.
அந்தப் பரிசோதனையில் கடல்மட்டத்திலிருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் சூழலில், அந்த வண்டுகளால் பறக்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளனர். சில வண்டுகள் 30 ஆயிரம் அடிகளுக்கு மேல்கூடப் பறக்கக் கூடியவை என்று தெரியவந்துள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்தை விடவும் உயரமானது (29,000 அடி அல்லது 8,848 மீட்டர்). இந்தப் பம்பிள் பீக்கள் ஒவ்வொரு முறை சிறகை அடிக்கும்போதும் தலையையும், வயிற்றையும் நோக்கித் தங்கள் சிறகின் கோணத்தை விஸ்தரித்துக் கொண்டே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பப் பட்டினி!
இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகை அச்சுறுத்திக் கொண்டிருக் கின்றன. ஒன்று புவி வெப்பம்; மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு 2007ல் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம், உலகெங்கும் 2020ம் ஆண்டு முதல் வருடத்திற்கு மூன்று லட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக 2000ல் இருந்து இத்தகைய காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர்.
உலகின் பணக்கார நாடு களே இந்த அவல நிலைக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள்தான் இதன் பாதிப்புக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்குதலால் பாதிக்கப் படுகின்றனர்.
கடந்த 100 ஆண்டுகளில் வானவெளி வெப்பம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. 20ம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி செல்சியஸ் உயர்ந் துள்ளது. 2100ம் ஆண்டு 2 முதல் 3 டிகிரி வரை உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர் கொடுப்பது குறையும். கடல் நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிநீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறைவதால் அதன் விளைச்சலும் குறையும்.
இந்த காலநிலை மாற்றத்தால் கடலோரங் களில் தொடர்ந்து புயலும், வெள்ளமும் ஏற்படும். கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வர். உயிரிழப்பும், பொருள் இழப்பும் பெரிய அளவில் ஏற்படும். இந்த மாற்றத்தால் வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவர்.
2020ம் ஆண்டில் ஆசியா முழுவதும் 120 கோடி மக்கள் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு ஆளாவர். மேலும், உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதால், ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்படும்.
கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கொல்கத்தா, டாக்கா, ஷாங்காய் போன்ற பெருநகரங்களில் கடும் பாதிப்பு நிலவும். இதனால் வறட்சி ஏற்பட்டு மக்கள் இடம் பெயர்வர்.
இந்த செயல்களால் உலகின் பாதுகாப்பும், அமைதியும் பாதிக்கப்படும். வரும் காலங் களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உலக நாடுகளின் அரசாங்கங்களின் கவனம் முழுவதும் புவி வெப்பம் மீது இருப்பது அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது 'வடை பவுடர்' செய்முறை.
தேவையானவை: தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - 250 கிராம், மிளகு -20, காய்ந்த மிளகாய் - மூன்று, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு -தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை மிஷினில் கொடுத்து நைஸாக அரைக்கவும். (மிக்ஸியிலும் அரைக்கலாம்). பிறகு இதனுடன் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும் போது, மாவுடன் தண்ணீர் கலந்து கெட்டியாக பிசையவும். கோஸ் துருவல், நறுக்கிய கீரை, வெங்காயம் என விருப்பமானதை சேர்த்து, பிசைந்து வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
