PUBLISHED ON : பிப் 26, 2016

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
விலை மதிப்பற்ற பொருள்!
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று ஒரு பழமொழி உள்ளது. உப்பின் மேன்மையை சொல்ல இது போதும். உணவில் சரியான அளவில் உப்பு இருந்தால் அதன் சுவையே அலாதிதான். உப்பை அதிகமாக சேர்த்துக் கொண்டால் ரத்த அழுத்தம், மாரடைப்பு என்று பல உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனாலும், மனிதர்கள் உப்புக்கு அடிமையாகவே இருக்கின்றனர். உப்பின் மீது உள்ள ஆவல்தான் மூளையை தூண்டி விடுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. உப்புக்கு பாறை உப்பு, கடல் உப்பு என்று மூலாதாரங்கள் மட்டுமே உள்ளன. இருந்தாலும் இப்போது கடல் உப்புதான் வர்த்தக ரீதியாக அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
உப்பின் வரலாறு மிகவும் சுவையானது. சிறப்பாக பணியாற்றிய ரோமானிய வீரர்களுக்கு பண்டைக் காலத்தில் உப்புதான் சம்பளமாக வழங்கப்பட்டது. உப்புக்கு அப்போது அவ்வளவு மரியாதையும், மதிப்பும் இருந்தன. ஆங்கிலத்தில் 'சால்ட்' என்ற வார்த்தை, லத்தீன் மொழியில் சம்பளத்தை குறிக்கும் 'சாலரியம்' என்ற வார்த்தையில் இருந்து பிறந்தது தான். வேலைக்கு சம்பளமாக சால்ட் வழங்கப்பட்டதால், அதுவே பிறகு மருவி, 'சாலரி' என்று ஆனது.
ஆரம்ப காலத்தில் போருக்கு பணம் திரட்டுவதற்காக உப்பு அதிக விலைக்கு விற்கப்பட்டது. அதன்பிறகு சாதாரண மக்களும் உப்பை வாங்குவதற்கு ஏதுவாக அதன்விலை குறைக்கப்பட்டது. பண்டைய காலங்களில் ஹீப்ருக்கள், கிரேக்கர்கள் சீனர்கள் தான் உப்பை பயன்படுத்தினர்.
விலை உயர்ந்த பொருளாக உப்பு இருந்ததால், அதை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல 40 ஆயிரம் ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன. உப்பின் பெருமை அதிகரித்ததை அடுத்து, மேலைநாடுகளில் 11ம் நூற்றாண்டில் பல்வேறு இடங்கள், கட்டடங்கள், நகரங்கள், ஏரிகள் என்று பலவற்றுக்கும் உப்பு என்ற வார்த்தையை இணைத்து பெயர்கள் சூட்டப்பட்டன. முற்காலத்தில் உப்பு குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால், அதன் விலை அதிகமாக இருந்தது. அதன் உற்பத்தி பிற்காலத்தில் அதிகரித்ததால் உப்பின் விலையும் குறையத் தொடங்கி எல்லாராலும் வாங்கக் கூடியப் பொருளாக மாறியது. கடல்நீரை தேக்கி வைத்து உப்பளங்கள் அமைத்து, அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட, அதிலும் சில குறைபாடுகள் இருந்தன. அதனால்தான் இப்போது உப்பில், 'அயோடின்' சேர்க்கப்பட்டு, நவீன ரக பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன.
சின்ன குழந்தைகளுக்கு!
எல்லா காய்களிலும் சிறிது சிறிது போட்டு குக்கரில் வேகவைத்து அந்தத் தண்ணீரை எடுத்து ரசம் செய்து அதில் சாதம் பிசைந்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் வராது.
சிறு குழந்தைகளுக்கு முட்டை கொடுக்க ஆரம்பிக்கும்போது மஞ்சள் கருவை மட்டும் கொடுங்கள். வெள்ளை பாகத்தினால் அலர்ஜி வரலாம்.
அலுமினியப் பாத்திரத்தில் தீய்ச்சல் பிடித்து விட்டால், வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சிறிது நீர் விட்டுக் கொதிக்க விட்டால், தீய்ச்சல் நீங்கிவிடும்.
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு.
